“வெகு விரைவில் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்.” – சீ.வி.விக்னேஸ்வரன்

தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாளங்குடா பிரதான வீதியில் வெண்மதி கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்குள் ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. வடக்கு கிழக்கு மக்கள் வேற்றுமைப்படக் கூடாது தங்களுக்குள் ஒருமித்து செயலாற்ற வேண்டும். நாங்கள் வடகிழக்குத் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களுக்குள் அந்நியோன்யம் வரவேண்டும் என்ற வகையில் வட மாகாண மக்களுக்கு எவ்வாறான செயன்முறைகளைச் செயற்படுத்தி வருகின்றோமோ அதேபோல் கிழக்கு மாகாண உறவுகளுக்கும் எம்மாலான செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே வெளிநாட்டு உறவுகளின் பண உதவியோடு சில நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்தச் செயற்பாடு அரசியல் ரீதியானதல்ல, தமிழ் மக்கள் சார்பானது. எமது மக்களின் வருங்காலம் பற்றிய சிந்தனையின் வாயிலாக ஏற்பட்ட நிகழ்வு. ஏனெனில் அரசியல் என்று வரும் போது எமக்கான வாக்காளர்கள் வட மாகாணத்தில் தான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் வடக்கு என்று நில்லாது எமது மக்கள் எங்கிருந்தாலும் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களிடம் ஒரு உறவுமுறை இருக்கின்றது. அதன் அடிப்படையில் நாங்கள் சில நடவடிக்கைளை எடுக்க வேண்டி நிலை வந்திருக்கிறது.
தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும். பல இடங்களிலும் அந்த அடையாளங்களை நீக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த வணக்கஸ்த்தலங்கள், எமக்கு அனுப்பப்படும் கடிதங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்படுத்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது வருங்காலத்திலே வடக்கு கிழக்கு மக்களின் நிலை எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற பயம் பீடித்திருக்கின்றது. அதே நேரம் இங்கிருக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் சம்மந்தமாகவும் எங்களுக்குள் பலவிதமான பிரச்சனை இருப்பதை நாங்கள் உணர்கின்றோம்.
இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து எமது மக்களை நாங்கள் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் எமது செயற்திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அந்த அவசியத்தின் நிமித்தம் தான் இவ்வாறான செயற்திட்டங்களை வகுத்து அதற்கான நிதிகளைப் பெற்ற எமது மக்களுக்குக் கொடுத்து வருகின்றோம்.
இவ்வாறான சுயதொழில், கைத்தொழில் நடவடிக்கைகளில் எமது இளம் சமுதாயம் ஈடுபடுவதற்கான நடவடிக்களையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதனைச் சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். வருங்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கைத்தொழில் மையங்கள் இருக்கக் கூடிய விதத்தில் நிலைமையை உருவாக்க வேண்டும்.
எமது கட்சியைப் பெருத்தளவில் தன்னாட்சி, தட்சார்பு, தன்நிறைவு எனும் முக்கிய மூன்று குறிக்கோள்கள் இருக்கின்றன. தன்னாட்சி என்பது அசியல் ரீதியானது. ஆனால் எமது குடும்பங்கள் எமது வாழ்க்கை என்ற ரீதியில் தட்சார்பினை நாங்கள் நாட வேண்டும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய விடயங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மரக்கறிகளிலன விலை மூன்று நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அப்போது வீட்டுத் தோட்டம் அமைக்க எமது வடமாகாண மக்களுக்கு அறிவறுத்தியிருந்தோம். இப்படியொரு நிலை வரும் என்று நினைக்கவில்லை ஆனால் தமிழ் மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் தட்சார்பு நிலையினை அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் சொல்லியிருந்தோம்.
தற்போது வீட்டுத்தோட்ட செயற்பாடு பல இடங்களிலும் ஆரம்பிக்கப்படுகின்றன. அதே போன்று கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான கைத்தறி செயற்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் எமது மக்கள் தங்களின் தேவைகளையாவது பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை உருவாகும் அதற்காகத் தான் எமது வெளிநாட்டு உறவுகள் ஊடாக நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
எங்களின் விஜயத்தின் போது எமது மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள். அதனை முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். நாங்கள் அரசாங்கமும் அல்ல, இந்த மாகாணத்திற்கு உரியவர்களும் அல்ல. ஆனால் கிழக்கு மாகாணம் என்பது எங்களுக்கு பிற மாகாணமோ, அந்நிய மகாணமோ அல்ல. தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் இந்த மாகாணத்தின் விடிவு இந்த மாகாணத்தின் நன்மை தீமைகளில் நாங்களும் பங்குபற்ற வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த நிலையிலே சிந்தித்து எமது மக்களுக்குரிய சுயதொழில் நடவடிக்கை முயற்சிகளுக்கு எங்களால் இயலுமான உதவிகளைச் செய்வோம்.
அதற்கேற்றவாறு எமது மக்களும் ஒவ்வொரு விடயங்களிலும் தட்சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும். எந்தவிதத்திலாவது எமது கல்வி நிலை மேம்பட வேண்டிய ஒரு அவசியம் இருக்கின்றது. முக்கியமாகத் தமிழ் பெண்கள் கல்வி நிலையில் மிகவும் மேம்பட வேண்டி அத்தியாவசியம் இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு நல்ல கல்வி நிலை இருந்தால் அந்த சமூகத்திற்கே ஒரு நல்ல நிலை கிடைக்கும். எனவே பெண் கல்வி மிகவும் முக்கியமானதொன்று.
எனவே இவ்வாறான உதவிகள்செய்வதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கின்றோம். மக்களும் எங்களிடம்பெறும் உதவிகளை நல்ல விதத்திலே செயற்படுத்தி அனைவருக்கும் நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய விதத்திலே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *