இந்தியாவிலிருந்து 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மனிதாபிமான உதவி இலங்கையை வந்தடைந்தது !

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய மக்களால் வழங்கப்பட்டதும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதுமான பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை உயர் ஸ்தானிகர் அவர்கள், இந்திய  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களிடம் 2022 மே 22ஆம் திகதி கொழும்பில் கையளித்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா,  முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.செந்தில் தொண்டமான்,  பிரதமரின் பணிக்குழாம் பிரதானி திரு.சாகல ரத்நாயக்கா மற்றும் உணவுத்துறை ஆணையாளர் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி உட்பட சிரேஸ்ட உத்தியோகத்தர்களும் ஏனைய பலரும் கலந்துகொண்டனர்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளதன் படி,

9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா  மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் இத்தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. 2022 மே 18ஆம் திகதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது.

தற்போது கையளிக்கப்பட்டுள்ள இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள நலிவான மற்றும் தேவைகளை எதிர்கொண்டிருக்கும் பிரிவினருக்கு இலங்கை அரசாங்கத்தால் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் இன்னும்பல மனிதாபிமான உதவித்திட்டங்களும் ஏனைய உதவிகளும் இந்தியாவிடமிருந்து வழங்கப்படவுள்ளன. இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் முன்னெடுக்கப்பட்டும் இவ்வாறான பல்பரிமாண திட்டங்கள், இலங்கைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுவதுடன் இலங்கை மக்களின் நலன்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறையினையும் பிரதிபலிக்கின்றன. 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகள், தடுப்பூசிவிநியோகம், சோதனை அலகுகள், கொவிட்-19 பெருநொய்க்கு எதிரான போராட்டத்துக்காக கிட்டத்தட்ட 1000 மெட்ரிக்தொன் திரவநிலை ஒட்சிசன் வழங்கியமை, கடல் அனர்த்தங்களை தணிப்பதற்காக இந்திய கடற்படை மற்றும் கரையோரக் காவல் படையால் வழங்கப்படும் உடனடி பதிலளிப்பு நடவடிக்கைக்கள் முதலான ஆதரவுகள் இலங்கைக்கு வழங்கப்படுகின்றன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *