நாட்டில் ஏற்பட்டுவரும் வறுமையை சமாளிக்கும் முகமாக, பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ், உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் அக்கரைப்பற்று சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் இன்று (26) நடைபெற்றது.
தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் சமுர்த்தித் திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
மரவள்ளி மற்றும் வற்றாளை போன்ற கிழங்குப் பயிர்கள் நடுகை செய்யப்பட்டன. இத் திட்டம் கிராம மட்டத்தில் பொதுமக்களிடையே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
………………………………………………………………..
இது போன்றதான செயற்றிட்டங்களை எல்லா மாகாணங்களிலும் கிராமமட்டத்தில் இயங்கும்அமைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டையும் – வறுமையையும் எதிர்காள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வறுமையை தாக்குப்பிடிக்க இருக்க கூடிய சில வழிமுறைகளில் ஒன்று தான் சிறு பயிர் செய்கையை மேற்கொள்வது. கிழங்கு , கீரை விதைப்பு , வாழை மர நடுகை என முடியுமானவரை சிறிது சிறிதாக தற்சார்புக்கு திரும்புவது நம்மையும் நம்மை சூழ உள்ளோரையும் பாதுகாக்க மேற்கொள்கின்ற அறிய முயற்சியாகும்.