நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் உருவாகின்றது என பௌத்த கற்கைநெறிகளிற்கான வல்பொல ராகுல நிர்வாகத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் பௌத்தமத குருமார்களை காடையர்கள் போன்று வளர்த்தது, ஊக்குவித்தது, பல்வேறு இடங்களில் அவர்களை பயன்படுத்தியது. அதுமட்டுமன்றி பொறுப்புக்கூறல் என்பது அரசமைப்பிலோ அல்லது நீதித்துறையிலோ உள்வாங்கப்படவில்லை சேர்க்கப்படவில்லை.
நல்லிணக்கம் என்பது செயலமர்வுகளை நடத்துவது அறிக்கைகளை வெளியிடுவது டொலர்களை பெற்றுக்கொள்வதில் இல்லை. ஆனால் இம்முறை அரசியலமைப்பு ஆபத்தான விதத்தில் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இவர்கள் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாக சித்தரித்தனர். சிங்கள பௌத்தவர்களை தனியான குழுவாகவும் ஏனைய சமூகத்தினரை எதிரிகளாகவும் காண்பித்தனர்.
இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கவசத்தை தனது நலனிற்காக அதிகளவிற்கு பயன்படுத்தியது.
அதேபோன்று முன்னைய அரசாங்கங்களும் சிங்கள பௌத்த கொள்கையை பயன்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.