“நான் சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.” – அமைச்சர் டக்ளஸ்

“இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது, பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அதனை தரப்பினரும் துப்பிவிட்டனர். அன்று அதனை ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது, மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய அரசு அதிகாரமளிக்கும் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

கரைப்பவன் கரைத்தால் கல்லும் கரையும் என நீண்ட காலமாக நான் சொல்லியும் வந்திருக்கின்றேன். செய்தும் வந்திருக்கின்றேன். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியபோது நான்கு விடயத்தினை முன்வைத்திருந்தேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊடாக தேசிய நீரோட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டலாம் என நான் முன்வைத்து வந்தேன்.

அதனை நான் செய்தும் வந்தேன். துரதிஸ்டவசமாக மக்கள் ஆணை எனக்கு போதிய அளவு கிடைக்காமையால் என்னுடைய அரசியல் பலத்திற்கு ஏற்ப நான் செய்து வருகின்றேன்.

மேலும் மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்ப புள்ளி என சொல்லி வந்தேன். ஆனால் எந்த மண்ணில் பிறந்து எந்த மண்ணிலிருந்து பேட்டி எடுக்கின்றீர்களோ அங்கு இருந்த இயக்கமும், அதற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளும் அந்த செயற்பாடு துரோகத்தனமானது நடைமுறை சார்த்தியம் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்திய பிரதமர் மோடியிடம் மாகாண சபை தொடர்பில் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார்கள். நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது.

அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது, பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அதனை தரப்பினரும் துப்பிவிட்டனர். அன்று அதனை ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்பதை திரும்பவும், திரும்பவும் இந்த மண்ணிலிருந்து சொல்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *