ஆசிரியர்களுக்கு பெற்றோல் கிடைத்தால் போதும் – ஏனையோருக்கு பெற்றோல் தேவையில்லை..? – ஆசிரியர்களின் மனோநிலை தான் என்ன..?

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோல் வழங்கக் கோரி இன்று திங்கட்கிழமை ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்தியில் போராட்டம் மேற்கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக இருபக்கமும் வீதியினை மறித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வருகை தந்து ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று நான்கு பக்கமும் உள்ள வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து சுமார் இரண்டரை மணி நேரம் போராட்டம் மேற்கொண்டனர்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை வழமை போன்று இயங்குமாறு மாகாணப் பணிப்பாளர் அறிவித்த நிலையில் பாடசாலைக்கு செல்வதற்கு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி கோட்டத்தில் 27 பாடசாலைகளில் ஏழு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் தூர இடங்களில் உள்ள நிலையில் இங்கிருந்து செல்லும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக பாடசாலை வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தங்களுக்கு உரிய எரிபொருளிளை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எழுத்தறிவித்தவன் நடுத்தெருவில் அவமானம், வேண்டும் வேண்டும் எரிபொருள் வேண்டும். இல்லையேல் போராட்டம் தொடரும், கல்வியை சீரழிக்காதே எரிபொருள் வழங்கு, ஆசிரியர் சமூகத்தினை சீரழிக்காதே, பாடசாலை செல்ல அதிபர், ஆசிரியருக்கு பெற்றோல் வழங்கு என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
………………………………………………………………
எழுத்தறிவித்தவர்களுக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் – அரச சேவைக்கு பெற்றோல் கொடுக்க வேண்டும் என எண்ணுவதெல்லாம் ஒரு பக்க சார்பான மனோநிலை மட்டுமே. இந்த போராட்டங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை.
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்ற வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர்(படம்)
அண்மை நாட்கள் வரை வைத்தியர்களுக்கு பெற்றோல் அவசியமானது பேசிக்கொண்டிருந்தார்கள். வைத்தியர்களிலும் பலர் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெரு இடையிலேயே வைத்து பெற்றோல் வாங்கிச்சென்ற சோகங்களும் பதிவாகியிருந்தன். இந்த நிலையில் நேற்றையதினம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்.ஏ.கேதீஸ்வரன் நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருந்து தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக் கொண்டிருந்தததை நேற்றைய செய்திகளில் அதிகம் கண்டிருந்தோம். ஆரோக்கியமான முன்மாதிரியாக அவர் செயற்பட்டிருந்தார்.
இங்கு அரசு வேலைகள் செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வாத – விவாதங்கள் ஏற்க முடியாதவை. மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவ பெற்றோல் தாருங்கள் – சுயநலம் பார்க்காது நாம் வேலை செய்கிறோம்.” என பெற்றோலுக்காக பேராடும் இதே ஆசரியர்கள் தான் சம்பளம் கேட்டு பாடசாலைகளுக்கே போகாது இருந்தார்கள். அப்போது மாணவர்களினுடைய எதிர்காலம் நாசமாகவில்லையா..?
அடுத்த முக்கியமான விடயம் இவர்கள் என்ன அடிப்படையில் தொழில்களை வகைப்படுத்துகிறார்கள்..? எது அத்தியவசியமானது..? எதற்கு பெற்றோல் வழங்க வேண்டும் என்கிறார்கள்… எல்லாம் முழுமை முரணானது.
நாளாந்தம் கூலி வேலைக்கு செல்பவனின் வீட்டில் அடுப்பு எரிய வேண்டும் என்றால் அவன் தினமும் வேலைக்கு போக வேண்டும். அவன் வேலைக்கு போக வாகனம் தேவை. அதற்கு பெட்ரோல் ல் தேவை. அவன் கூலிக்கு செல்லாமல் தான் 5 நாட்களுக்கும் மேலாக தெருவிலேயே காத்துக்கிடக்கிறான்.   அவன் குடும்பமும் முழுப்பட்டினி தான். அப்படியானால் அவர்கள் அரசாங்க ஊழியர்கள் இல்லை என்பதால் எக்கேடு கெட்டால் என்ன..? என்ற மனோநிலையை கொண்டுள்ளாமா என்ற பக்கமும் உள்ளது.
எல்லாமும் எல்லோர்க்கும் சமனாக கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை எல்லா தளத்திலும் உருவாகும் வரை – எல்லோர் மனதிலும் உருவாகும் வரை – உருவா்கப்படும் வரை சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கும். இந்த வரிரசகளும் இன்னமும் நீளும் !
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • BC
    BC

    மிகச் சரியான கட்டுரை.
    சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் செயல் அருமை.

    Reply