யாழில் அதிகரிக்கும் ஹெரோயின் ஊசிக்கலாச்சாரம் – அடுத்தடுத்து உயிரிழக்கும் இளைஞர்கள் !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் உள்ள உயர்தரம் பயிலும் பாடசாலை மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் பலரிடமும் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளதை அண்மைய கால செய்திகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.

ஐஸ் போதைப்பொருள்ள பாவித்த இளைஞன் மரணம் என்ற தகவல்கள் இலங்கையின் வேறு எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்ட நிலை மாறி  இப்போது அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து பல இளைஞர்கள் வடக்கு – கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.

30வருட யுத்தத்தை முடித்தோம் என மார்தட்டும் இந்த இராணுவத்தினதும் – கடற்படையினதும்  கட்டுக்காவல்களையெல்லாம் மீறி ஏதொவொருவகையில் வடக்கு இலங்கையினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வண்ணமே உள்ளன. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதில் யாழ். பொலிஸார் பெரிதாக சிரத்தை காட்டுவதாக தெரியவில்லை. பாடசாலைகளிலும் மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை சார்ந்த விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பறுவதாக தெரியவில்லை. இந்த நிலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் சமூகம் வடக்கில் சுயநல மனப்பாங்குடன் செயற்பட ஆரம்பித்து விட்டது போலவே தோன்றுகிறது. அண்மையில் கூட முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண்  மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்படுத்தி பின்பு அவர்களை  பயன்படுத்தி மாணவிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு. இந்த நிலையில் இது தொடர்பாக பெரிதாக வடக்கு மாகாண ஆசிரியர் சங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவர்கள் எங்கே இந்த பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடை செய்ய முயற்சிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியே மீதமாகவுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான நகர்ப்புற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவனிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்படட்தாக தகவல்கள் வெளியான போது யாழ். சமூக கல்விமான்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து விட்டு  அடங்கிவிட்டனர்.

போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அவர்கள் ஏதேனும் களச்செயற்பாடுகளை மேற்கொண்டதாக எந்த பதிவும் இல்லை. இது யாழ்ப்பாண சமூகம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் இன்னமும் எந்த செயற்பாடும் இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவில்லை என்பதே கவலையான உண்மை.

இந்த நிலையில் கடந்த வாரம் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் நமது தமிழர் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை இன்னுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்புத்துறையில் கடந்த  20ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார் என்பது இங்கு இன்னமும் வேதனையான விடயம். இளைஞர்கள் குழுவாக இருந்து ஹெரோயின் எடுத்துக்கொள்ளுமளவிற்கு தைரியமான ஒரு சூழல் நமது பகுதிகளில்  உருவாகியுள்ளது இன்னமும் வேதனையளிக்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் பாடசாலை ஆசிரியர்களும் தங்களுடைய மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை தொடர்பான முறையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர பெற்றோர் தங்களுடைய வீட்டு இளைஞர்களின் போதைப்பொருள் பாவனையை அவர்களின் காட்டுக்கூச்சலுக்கு அஞ்சாது கண்டிக்க வேண்டியதுடன் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பாவனையின் தீமையான பக்கங்களை புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் கல்வியில் மட்டுமே கவனம் வந்த யாழ் சமூகமானது இன்று வெளிநாட்டு மோகத்திலும் – சுயநல மனோநிலையிலும்  சிக்குண்டு தனது கல்வி அடைவு மட்டத்தை தொலைந்துவிட்டது. கல்வியின் மீதான யாழ் சமூக மாணவர்களின் – இளைஞர்களின் நாட்டம் குறைவடைந்தது இன்று ஆவா வாள்வெட்டு  போன்ற குழுக்களின் தோற்றத்தையும் – போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பையும் தூண்டியுள்ளது.

யாழ் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் விரைந்து போதைப்பொருள் பாவனையிலிருந்து நமது சமூகத்தை மீட்க – நமது இளைஞர்களை மீட்க இயங்க வேண்டும். நாம் சுதாகரித்து போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஆரோக்கியமற்ற இளைஞர் தலைமுறை ஒன்று உருவாவதற்கு நாமும் காரணமாகிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

நாம் சமூகத்தை திருத்த கூட களமிறங்க  தேவையில்லை. அவரவர் தத்தமது வீடுகளில் உள்ள இளைஞர்களிடம் இது தொடர்பில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதுமானது. சிறுதுளி பெருவெள்ளம் போல ஆகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்..!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *