நாடாளுமன்றில் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்த போது தமிழ்தரப்பு யாருக்கு சார்பாக நிற்க போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தமிழ்தேசியம் பேசிய மூன்று கட்சிகளும் மூன்று விதமான முடிவுகளை எடுத்திருந்தன. முன்னணி தேர்தலை புறக்கணிக்க – கூட்டமைப்பினர் டலஸ் அலகப்பெருவுக்கும் – சி.வி விக்கினேஸ்வரன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வாக்களித்தனர். இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரனுக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என அரசியல்வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தன. கடந்த காலங்களில் முக்கியமான பதவிகளில் இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் எடுத்திராத நிலையில் விக்கினேஸ்வரன் தனித்து இந்த முடிவை எடுத்ததது குறித்து பலரும் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சி.வி விக்கினேஸ்வரன் ஆதரித்த ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் கோரிக்கை வைப்போம் என்றும் சி.வி.விக்னேஷ்வரன் கூறினார்.