திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
சீனக்குடா எண்ணெய் தாங்கியை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து இந்த மனுக்களை எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக தேரர் மற்றும் வக்முல்லே உதித்த தேரர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களில் திருத்தத்துக்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை வகிக்காத காரணத்தினால் அவரை தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க நீதிமன்றில் அனுமதி கோரினார். இதற்கு உடன்பட்ட நீதிமன்றம் கோட்டாபயவை பிரதிவாதியாக இணைக்க இணக்கம் வெளியிட்டது.
இதேவேளை மனுக்கள், நவம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன