காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உறவினர்கள் போராட்டம் !

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் நடத்துவதற்காக 19 மற்றும் 20ம் திகதிகளில் 244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு அலுவலம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாரும் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என்றும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஒன்றுதிரண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிகாரிகள் வந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவத்தால், மற்றுமொரு வாகனத்தில் வந்த அதிகாரிகள் மாற்று பாதை ஊடாக உள்ளே சென்ற நிலையில், மக்கள் உள்ளே சென்று அதிகாரிகளை வெளியே சென்று பதிலளிக்குமாறு தெரிவித்து அனைவரையும் வெளியே அழைத்தனர்.

இறுதியாக அதிகாரிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடியுள்ளார். குறித்த விசாரணையை நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறியநிலையில், விசாரணைகள் எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு அதிகளவான காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள் வந்த நிலையில், தங்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *