நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்கச் சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடியது. எனினும் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகிய சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குறிய பல பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும் – பேருந்தின் சாரதிகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதும் – தொலைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை செலுத்துவதும் – பாதையில் சரியான திசைகள் செய்பவர்களை இடித்து விபத்துக்கு உள்ளாக்குவதும் என்று எந்தளவு தூரத்துக்கு முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இலங்கை போக்குவரத்து சபை இயங்கிக் கொண்டிருக்கின்றது.
பயணத்தின் போது இரண்டு சில்லுகள் தனியே கழன்று செல்லும் அளவிற்கு பயணிகள் தொடர்பில் கிஞ்சித்தும் அக்கறை காட்டாது சாரதிகள் செயற்படுவதும் – இதனை கண்டிக்காது இ.போ.ச உயர்அதிகாரிகள் இருப்பதும் உண்மையிலேயே வெட்கக்கேடானது. தனியார் பேருந்துகளில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகளை மக்கள் அதிகம் நாடுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை கூறிய பேருந்துகளில் சாரதிகளின் அசமந்த போக்கு பயணிகளின் உயிர் தொடர்பான நிலையை ஆபத்துக்குள்ளானதாக மாற்றி விடுகின்றது.
பேருந்தில் பயணச்சீட்டை ஒழுங்காக எடுத்து விட்டோமா என அடிக்கடி பேருந்தில் ஏறி சோதனை செய்து அதன் மூலமாகவும் மக்களிடமிருந்து மீதியாக உள்ள பணத்தையும் எடுத்துக் கொள்ளும் இ.போ.ச அதிகாரிகளே தயவு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.