எதிர்ப்பாளர்களை கலைக்கும் போது, தாம் காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் அவற்றை பயன்படுத்துவதில்லை என்று பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பொதுவாக, திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி கண்ணீர் புகைக்குண்டுகள் பெறப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எதிர்ப்பாளர்களை கலைக்க, காவல்துறையினர் காலாவதியான கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தியதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனினும் எந்தவொரு தயாரிப்பு காலாவதியானாலும், அது சிறந்த முடிவுகளைத் தராது. காலாவதி திகதிக்கு பின்னர் எரிவாயு உரிய வகையில் இயங்காது. எனவே அதனை பயன்படுத்துவதால் பயன் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின் கலகக் குழுவின் அதிகாரிகளின் கூற்றுப்படி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளே போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்தப்படுகின்றன. முன்னதாக, கடந்த வாரத்தில் கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதல் காரணமாகவே எதிர்ப்பாளர்கள் மூன்று பேர் இறந்தனர் என்று தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குற்றம்சுமத்தியிருந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள பொலிஸ் பேச்சாளர், மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்பதால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.