புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி – குடும்பத் தகராறே காரணம் !

புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்திற்கு குடும்பத் தகராறே காரணம் என கைதான சந்தேகநபர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைதான இளைஞர் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தான் சிறுமியைக் கடத்தவில்லை என்றும், தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிறுமியை அவரிடம் அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை, புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் பெண்மணி ஒருவர் தனது 10 வயதுச் சிறுமியை தனியார் கல்வி நிறுவனத்தில் இறக்கியுள்ளார்.

அதேநேரம் உந்துருளியில் வந்த 23 வயது இளைஞர் ஒருவர் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்ட வேளை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கைதான இளைஞரிடம் புதுக்குடியிருப்புப் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, சிறுமியின் தந்தையார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாக கூறியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள். தனது பிள்ளையைப் பார்க்க மனைவி அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு, சிறுமியின் தந்தை தன்னிடம் உதவி கோரியதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தையும், கைதான இளைஞரும் நண்பர்கள் என்றும், தனியார் வகுப்புக்கு வரும் போது, சிறுமியை அழைத்து வருமாறு தந்தை கேட்டதால், சிறுமியை அழைத்துச் செல்ல முற்பட்டதாகவும், சிறுமிக்குத் தன்னைத் தெரியாதால் கத்தி சத்தமிட்டதாகவும் இளைஞர் காவல்துறை விசாரணைகளில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் குறித்த செய்தி வெளியான போது பல மீடியாக்கள் சங்கிலிக்கோர்வையாக குறித்த செய்திகள் இடம்பெறுவது போன்றதான விம்பத்தை ஏற்படுத்தி செய்திகளை வெளியிட்டு இருந்தன. இது மட்டுமல்லாமல் இது போல கடத்தலுடன் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் பல வாட்ஸ் அப் குழுமங்களில் அதிகம் பரவியும் வருகின்ற அதே நேரம் மன்னார் பகுதியில் இடம்பெற்றதாக வெளியான கடத்தல் சம்பவத்தை தவிர ஏனைய பகுதிகளில் இடம்பெற்றதாக நடைபெற்ற சம்பவங்கள் கடத்தலுடன் தொடர்புடையனவாக அன்றி வேறு விதமானவையாக உள்ளன. களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவி கடத்தப்படவில்லை என்பதும் மாறாக அவர் பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடிருந்ததது. இதே வேளை கம்பளையில் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் போதைப்பொருளுக்கு அடிமையான நபரொருவரால் பணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கடத்தப்படவில்லை என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட குழுமங்களில் வெளியாகும் போலியான செய்திகளை பகிர முன் அதனுடைய உண்மைத்தன்மையை ஆராயுமாறு சமூக ஆர்வலர்கள் பலரும் இந்த செய்திகள் தொடர்பில் வலியுறுத்தி வருவது குறிப்படத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *