“கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்குக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.” – உதய கம்மன்பில

“முன்று தலைமுறைகளாக கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனவும்  கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறும்  பிவித்தூறு ஹெல உறுமய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தமது யூரியூப் சமூக வலையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ் இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.

குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்தூர் விகாரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல. குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.

இதனடிப்படையில், அங்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொள்ள கஜேந்திரகுமாரருக்கு முடியாது. விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது. இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய, குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தையும் முன்வைக்கிறார்கள். இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது. ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும். பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்க்கையை வாழ்கிறார்.

அவர் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்கு நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.

தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.

ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

இதில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *