யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன.
இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார்.