இம்ரான் மஹ்ரூப்

Wednesday, December 8, 2021

இம்ரான் மஹ்ரூப்

கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுக்கிறார்கள்.” – இம்ரான் மஹ்ரூப்

“அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை கையிலெடுத்தே அந்த அதிருப்தியை மறைக்கிறார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம்(18.04.2021) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிங்கள அமைப்புக்கள் எதனையும் தடைசெய்யாது முஸ்லிம் அமைப்புக்களை மாத்திரம் தடை செய்துள்ளனர். ரமழான் மாதத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சால் முஸ்லிம்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயலில் நூறு பேருக்கு மேல் ஒன்றுகூட முடியாது. நோன்பு கஞ்சி பகிரமுடியாது என அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கடை வீதிகளிலும் பொது இடங்களிலும் ஆயிரக்கணக்கில் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடியதை நாம் கண்டோம். மதுபான சாலைகளில் பெரிய கூட்டமே கூடி இருந்தது. ஆகவே புத்தாண்டில் தடைகளை விதிக்காத அரசு ஏன் ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தடைகளை விதிக்க வேண்டும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் கொரோனா தொற்றுவது போன்று முஸ்லிம்களுக்கு மட்டும் தடைகள் விதிக்கப்படுவது ஏன் என்றே நாம் கேட்கின்றோம். இதற்கு பின்னாலும் பெரிய இனவாத நிகழ்ச்சிநிரல் உள்ளது.

இந்த காலத்தில் இடம்பெறும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதே இந்த அரசின் நோக்கம். மே மாதத்தில் கொரோனாவின் மற்றொரு அலை உருவாக்கலாம் என இராணுவ தளபதி ஏற்கனவே அறிவித்து விட்டார்.

ஆகவே மே மாதத்தில் இடம்பெறும் பெருநாள் வியாபாரத்தை முடக்க அரசு திடடமிட்டுள்ளதா என்ற சந்தேகம் இதனால் இப்போது எழுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடையால் முஸ்லிம் வியாபாரிகள் பலரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களை பழிவாங்கவே இந்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் காபட் வீதி மற்றும் பாலங்களில் இருந்து வரும் கொமிஸ்களுக்காக சிலர் பசில் வந்தால் சரியாகும் நாமல் வந்தால் சரியாகும் என ஊருக்குள் கூறி திரிவது வேடிக்கையானது எனவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” – இம்ரான் மஹ்ரூப்

“கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன” என திருகோணமலை மாவட்ட பாராளுமன்றளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இந்த நினைவு தூபி அழிக்கப்பட்டமை தொடர்பாக அவர் இன்று (09.01.2021) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி என்பது பலியான சகோதர சிவில் தமிழ் உறவுகளை நினைவூட்டும் ஆத்மார்த்த மனிதாபிமான சின்னம். அது பயங்கரவாதம் சார்ந்த அல்லது படையினரை சாடுகின்ற குறியீடு அல்ல. தென் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கூட கடந்த கால அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பலியானவர்களுக்கான நினைவுத்தூபிகள் உள்ளன.

ஆகவே யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது. இத்தகைய அரசின் இனவாதம் சார் செயற்பாடுகள் ஒருபோதும் நாட்டில் அமைதியை, அபிவிருத்தியை ஏற்படுத்த வழிசமைக்க மாட்டாது. கடந்த கால வரலாற்றில் அரசு எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இந்த உடைத்தல், எரித்தல் போன்ற இனவாதம் சார் அரச செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

அரசின் பொறுப்பற்ற, இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் செயற்பாடுகளை ஒரு பொறுப்புள்ள அரசியல் பிரதிநிதி என்றவகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.