கிண்ணியா குறிஞ்சாக்கேணி

Thursday, December 9, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி

கிண்ணியா படகு விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு !

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

கிண்ணியா படகு விபத்து – நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை !

அரசாங்கம் குறிஞ்சாக்கேணி பாதை சேவையைச் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தமையே அனர்த்தத்துக்குக் காரணம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து குறித்து மேலும் பேசிய அவர்,

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றன. எனினும், இந்த மக்களுக்கான மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப் பாலம் மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகரசபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நகரசபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை என்பதைப் பகிரங்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எனினும் பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது.

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா படகு விபத்து – நகர சபை தவிசாளர் கைது !

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று(வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பாலம் இன்மையால் படகுப்பாதை போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் படகுப்பாதையில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 19 பேர் தொடர்ந்தும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா படகு விபத்து – அதிகாரத்திலுள்ள குற்றவாளிகளை விட்டுவிட்டு படகு இயக்கியவர்களை கைது செய்துள்ள பொலிஸார்!

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸாரினால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரினால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பகுதியில் பாலம் கட்டப்படாமையே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை உடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

………………………………………………

உண்மையிலேயே குறித்த பாலம் கட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்திருக்காது. இந்த உயிரிழப்புக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ’குற்றவாளி இதற்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆவார். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க தவறிய இவரே இந்த உயிரிழப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவரும் இவர் தான். கைது செய்யப்பட வேண்டிய இவரை விட்டுவிட்டு நாட்கூலிகளை கைது செய்து அதிகாரிகள் வழமை போல அதிகாரத்துக்கு சாமரம் வீசியுள்ளனர். இது தொடர்பில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுதலே இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யக்கூடிய இறுதியான வேண்டுதலாக இருக்கும்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஒரு வருடமாக புனரமைக்கப்படும் பாலம் – அதிகாரிகளின் அசமந்த போக்கால் பறிபோன பள்ளிப்பிஞ்சுகளின் உயிர் !

படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் உள்ளடங்கலாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் நடந்த சோகம் - படகு கவிழ்ந்து மாணவர்கள் பலர் மரணம்சம்பவம் நேரத்தில் குறித்த படகு பாதையில் 17 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 23 பேர் பயணித்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிலர் நீந்தி சேர்ந்துள்ளனர் . இப்பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால் கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது. 4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் பயணித்த மேலும் 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் தீவிரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் பொலிஸார் ,கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவமானது கிண்ணியா பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாக பதிவாகியுள்ளது. குறித்த படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது. அங்கு கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் கிண்ணியா பகுதி சேர்ந்த ஒருவரை தேசம் நெற் சார்பாக தொடர்பாக கொண்டிருந்த போது அவர் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அவர் குறிப்பிட் போது “அப்பகுதியில் ஏற்கனவு பயணத்துக்காக இருந்த பாலம் சில காலங்களில் நீர் நிரம்பி விடுவதாக கூறப்பட்டு புதிய பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு வருடங்களுக்கு மேலாக பாலம் அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பாலம் அமைப்பு பணி விரைவில் முடிந்திருந்தால் அந்த பிஞ்சுகளின் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும். இங்கு சாவுகள் விழுந்தால் மட்டும் தான் மக்கள் பொதுப்பிரச்சினைகள் குறித்து கவலைப்படுகிறார்கள். இல்லாத போது அதை கவனிப்பதே இல்லை. உயிர் போய்விட்டது இப்போது போராடிக்கொண்டிருக்கிறார்கள் ” என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்ககது.