நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

Wednesday, December 8, 2021

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ

”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” – ராஜபக்ஷ அரசின் வரவு செலவுதிட்டம் தொடர்பில் சிறீதரன் !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதைப் போன்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று (13) சபையில் தெரிவித்தார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வரவு – செலவுத் திட்டத்தினூடாக சொல்லப்படுகின்ற திட்டங்கள், அறிவிக்கப்பட்டுள்ள செலவீனங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை எந்த வருமானத்தில் இறுதியில் கையாளப்போகின்றீர்கள்? இந்த அரசு அதிகமான கடன்களையும் கடனுக்கான வட்டியையும் செலுத்த வேண்டியுள்ளது.

ஆகவே, கடனும்  வட்டியும் செலுத்த வேண்டிய அரசால் 2022ஆம் ஆண்டிலே எவ்வாறு அபிவிருத்திப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள முடியும்? குறிப்பாக 80 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் தலா வருமானம், தனி நபர் வருமானமெல்லாம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளை விடவும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது. ஆனால், இன்று இலங்கையில் தனிநபர் வருமானங்கள் எவ்வளவு தூரத்துக்குக் கீழ் நிலைக்கு வந்துள்ளன என்பதை அவதானிக்க முடியும்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் இவை மேல் நிலைக்கு வந்துள்ளன என்றால் அந்த நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை உணர்வுகளும் அங்கு கட்டி வளர்க்கப்பட்ட இன சௌஜன்யமுமே காரணம். ஆனால், இலங்கையில் 70 ஆண்டுகளுக்கு மேல் போரும் இனவாதமும் கைகூடியிருந்த காரணத்தால் இங்கு சரியான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி இன ஒற்றுமையோடு இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தலைவர்கள் உருவாக்கப்படாமை இந்த நாட்டின் மிகப்பெரும் துர்ப்பாக்கிய நிலை.

இனியும் இந்தச் சந்தர்ப்பத்தை இந்த நாடு இழக்கப் போகின்றதா? அல்லது சரி செய்யப்போகின்றதா? என்பதனை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இப்போதுகூட ஒரு காலம் கனிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய இனத்தை சிங்கள தேசிய இனத்துடன் இணைத்து தமிழ் மக்களுக்கான உரித்துக்களை வழங்கி பொருளாதாரத்தைக் கட்டி வளர்க்க முடியும் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

ஆனால், அவ்வாறில்லாமல்  இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் ”சத்திரசிகிச்சை வெற்றி – நோயாளர் மரணம்” என்பதாகவே உள்ளது” – என்றார்.

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” – நிதி அமைச்சர் பசில்

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் அதனுடன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில்  ஒவ்வொரு அமைச்சுக்கும்   உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது . நாட்டில் உணவுப் பற்றாக்குறையுடன் பஞ்சம் ஏற்படும் என்று சிலர் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.  அவர்கள் எதிர்பார்ப்பதைப்  போல் நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

நாம் இம்முறை வரவு – செலவு திட்டத்தில்  உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் கிராமத்துக்குப் பணம் அனுப்பும் முறையை உருவாக்கியுள்ளதாகவும்  உற்பத்தித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  இம்முறை வரவு – செலவு திட்டத்தில் கிராம மற்றும் பிரதேச செயலக மட்டத்தில்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.