அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன – றிஸாட் பதியுதீன் தெரிவிப்பு

risard.jpgவிடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய செய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மீட்கப்படாத பகுதிகளிலிருந்து அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு இதுவரை 1,168 பேர் வந்து சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வவுனியா மெனிக் பாம் மற்றும் நெலுக்குளம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு செய்து கொடுத்து வருகின்றது.

அமைச்சின் நிதிமூலம் வவுனியா பிரதேசத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் தங்குவதற்கென தற்காலிக வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது 150 வீடுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 75 வீடுகளின் நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கமைய 47 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் தற்சமயம் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஏனையோரை மிக விரைவில் குடியமர்த்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்கப்படாத பகுதிகளிலிருந்து வந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், உடைகள், சிறுவர்களுக்கான உணவு வகைகள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகளுக்கென ரூபா 30 மில்லியன் நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.றாசிக் தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் நாட்களிலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *