இடம்பெயரும் மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல்:

basil.jpgவடக் கிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களை தங்க வைக்கும் ஒமந்தை, மெனிக்பாம், கட்டையடம்பன் முகாம்களில் கல்வி, சுகாதாரம், மின்சாரம், நீர் வழங்கல் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கினார்.

மக்களை தங்க வைக்கும் முகாம் பகுதியில் வங்கி நடைமுறைகள், கூட்டுறவு கடைகள், மருத்துவ நிலையம், தற்காலிக பாடசாலைகள், மலசலகூட வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம் வழங்கல் போன்றவற்றை விரைவில் ஆரம்பிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவை நாளை திங்கட்கிழமை வவுனியாவுக்கு புறப்பட்டுச் செல்லுமாறும் பசில் ராஜபக்ஷ எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த புதன்கிழமையன்று வவுனியா முகாம்கள் தொடர்பாகவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பசில் ராஜபக்ஷ எம்.பி. அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்ற விசேட கூட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனும் கலந்து கொண்டார். புதன்கிழமையன்று அதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனிடமும் கையளிக்கப்படும்.

வவுனியா, நெலுக்குளம் முகாம் வன்னியிலிருந்து வரும் மக்களை உடனடியாக தங்க வைக்கும் இடைத்தங்கல் முகாமாகவும், மெனிக்பாம் வடக்கு மெனிக்பாம் தெற்கில் இரண்டு முகாம்களையும் விரிவுபடுத்தி சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதே அரசின் நோக்கமென்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டார்.

இதேபோன்று வவுனியா வடக்கிலிருந்து வரும் மக்களை ஓமந்தையில் அமைக்கப்படும் முகாமிலும், மன்னாரிலிருந்து வரும் மக்களை கட்டையடம்பன் முகாமிலும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், மெனிக்பாம் வடக்கில் கிளிநொச்சியிலிருந்து வரும் மக்களையும் மெனிக்பாம் தெற்கில் முல்லைத் தீவிலிருந்துவரும் மக்களையும் தங்க வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாத்  தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகள் மீட்கப்பட்டதும் அங்குள்ள மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள், பொறி வெடிகள் போன்றவை நீக்கப்பட்டு மக்களை மீளக்குடியமர்த்த கூடிய நிலை உடனடியாக ஏற்படுத்த முடியாது என்பதாலேயே முகாம்களின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் படையினரின் உதவியுடன் முகாம்களுக்கு பூரண பாதுகாப்பும் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால, முன்னாள் எம்.பி. சுமதிபால, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலசூரிய, வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ், சுகாதார அமைச்சின் செயலர் கஹந்த லியனகே, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் ஏ. சி. எம். ராசிக், தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் செயலர் குமாரசிறி, கல்வி அமைச்சின் செயலர் உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *