சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்துள்ளதோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வவுனியா நகரசபைக்கு முன்னால் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட பந்தல்வரை பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதே நேரம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று காணாமலாக்கப்பட்டோரை மீட்டுத்தர வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை ஒழுங்கு செய்திருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு “போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம்” என குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ். ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
