“வெளிநாட்டில் தங்கியிருக்காது நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்யப்பழக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது”  – பிரதமர் மகிந்த ராஜபக்ஷ

“வெளிநாட்டில் தங்கியிருக்காது நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்யப்பழக வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது”  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய நாட்டிற்கு புதிய ஒளடதம் எனும் எண்ணக்கருவிற்கமைய அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் புதிதாக உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட ப்ளுகோஷைலின் ஒளடத மாத்திரையை பிரதமரிடம் வழங்கி, அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று(23.12.2020) இடம்பெற்றது.

இதில், அமைச்சர்களான பவித்ரா வன்னி ஆராச்சி, காமினி லொகுகே, சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே, சன்ன ஜயசுமன, சீதா அரம்பேபொல, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச்.முணசிங்க, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் உத்பல இந்திரவங்ஷ, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு பேசும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய பிரதமர்,

“வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்தல் மற்றும் நிறுத்துவதுடன் நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருக்கின்றது.

விசேடமாக 2012ஆம் ஆண்டிலேயே இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டது. அன்று 4470 மில்லியன் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் திறன் இரட்டிப்பாகியுள்ளது. அதனால் இந்நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து நான் புதிதாக எதையும் கூற தேவையில்லை. எனினும், நாம் 70 வீதமான ஒளடதங்களை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். நாம் அவ்வாறு இறக்குமதி செய்கின்றோமாயின், அந்த ஒளடதங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான பொறுப்பு எமக்குள்ளது. அதனை செய்வதற்கான ஞானம் மற்றும் அறிவு மிகுந்தவர்கள் எம்மிடம் உள்ளனர்.

அதனால், அவ்வாறான ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும் என நம்புகின்றோம். இந்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால் அதற்கான வேலைத்திட்டங்களை நாம் அனைத்து துறைகளிலும் செயற்படுத்த வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *