Wednesday, December 8, 2021

“புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும்” – நத்தார் தின வாழ்த்துச்செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

“புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில்  ,

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி. யாரும் யாருக்கும் அடிமைகள் என்றில்லாத எமது உரிமையை வெல்லும் திசை நோக்கி எமது மக்களை வழிநடத்தி செல்லவே நாம் இந்த பூமிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். எமது நிலங்கள் யாவும் எமது மக்களுக்கே சொந்தம். எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும்.

எமது மக்களின் நியாயமான உணர்வுகளை ஏற்று நாம் என்றும் பரிசுத்தமாகவே உழைத்து வருகின்றோம். ஆகவேதான், துயரச்சிலுவைகளை எமது மக்கள் சுமந்து நடந்த இரத்தப்பலிகளுக்கு மத்தியிலும், அடுத்தவர்களை போல் எமது மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் எமது மக்களுடனேயே நீரில் வாழும் மீன்களைப்போல் இடையறாது நாமும் வாழ்ந்து வந்திருக்கிறோம்.

முட்களிலும் கற்பாறைகளிலும் நடந்து வதைபட்ட எமது மக்களின் பாதங்களின் வலி தடவி, பசுந்தரையின் பாதை நோக்கி அவர்களை அழைத்துவர நாம் அயராது உழைத்து வந்திருக்கிறோம். எமது மக்களை நேசித்து நாம் கட்டியெழுப்ப நினைக்கும் சமத்துவ சமாதான கனவுகளுக்காக நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும், கொள்கைகளும், அதற்கான யதார்த்த பூர்வமான நடைமுறைகளும்.

எமது தீர்க்கதரிசனங்களும் மழை நீரால் அரித்துச் செல்லப்படும் மணல் மீது இடப்பப்பட அத்திவாரங்கள் அல்ல.மாறாக எந்த காட்டாற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கல்மலைகள் மீதே எமது கொள்கைகளின் அத்திவாரங்களை நாம் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

புறாக்களைப்போல் கபடமில்லாமலும், சர்ப்பத்தைப்போல் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் எமது மக்கள் இருக்க வேண்டும். ஏனெனெனில், எமது மக்கள் மீது பாசத்தை காட்டுவதாக பாசாங்கு செய்து கொண்டும், திட்டங்களும் வழிமுறைகளும் இல்லாமல் வெற்று வீர முழக்கமிட்டுக்கொண்டும், சாத்தான்கள் போல் வேதம் ஓதிக்கொண்டும், ஆட்டுத்தோல்களை போர்த்திக்கொண்டு ஓநாய்களாகவும் எல்லோரும் எமது மக்களிடம் இன்னமும் வருகிறார்கள்.

அவர்கள் எமது மக்களை துயரங்களில் இருந்து ஒரு போதும்மீட்க மாட்டார்கள். நித்திய வெளிச்சத்தை நோக்கி மக்களை வழி நடத்தி செல்லவும் மாட்டார்கள். மாறாக, எமது மக்களின் மீது நீடித்த அவலங்களையும் அக்கிரமங்களையும் மறுபடி சுமத்தவும், அவைகளின் மீது ஏறி நின்று அரசியல் சுயலாபம் நடத்தவுமே அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.

அவலங்கள் நடக்காத, அழுகுரல்கள் கேட்காத, நோய் பிணிகள் இல்லாத,.பஞ்சம் பசி பட்டினி வறுமை இல்லாத, அடிமைத்தனங்களும் ஒடுக்குமுறைகளும் இல்லாத, உயர்வென்றும் தாழ்வென்றும் இரு வேறு சமூகங்கள் இல்லாத, எமது மக்கள் எவரிடமும் கையேந்தி நிற்காத சமத்துவ சாம்ராச்சிய கனவொன்றே எமதும் எமது மக்களினதும் ஆழ்மன இலட்சிய கனவாகும்.

அதற்காக நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் எமது வழிமுறைகளும் ஒரு போதும் ஒழிந்து போகாது.

எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கை தரும் சாத்தியமான வழிமுறைகளுமே இன்று எல்லோராலும் ஏற்கப்பட்டு வெல்லப்பட்டும் வருகின்றன.

இனிவரும் காலங்களிலாவது மக்கள் எமக்கு வழங்கும் ஆணையின் பலத்தில் ஒளி பிறந்த தேசமாக எமது சொந்த பூமியை சொர்க்க பூமியாக மாற்றிட உறுதி கொண்டு எழுவோம்.

விசுவாசங்களையும், நேசிப்புகளையும் வேறோர் இடத்தில் மதிமயங்கி கொட்டி விட்டு, நித்திய வெளிச்சத்தின் விடியலை இன்னோர் இடத்தில் தேடிக்கண்டு விட முடியாது, இது இயேசு பாலன் பிறப்பெடுத்த இத்தினத்தில் நான் உங்களுக்கு கூறும் அறிவுரையாகும்.

இவ்வாறு தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிறந்திருக்கும் நத்தார் தினத்தை வல்லமையுடையவர்கள் மகிமையானவற்றை தருவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *