“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் அவ்வாறு செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது” எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏதேனுமொரு வகையில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பார் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.
எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு ஹிட்லரைப் போன்று செயற்படாமையின் காரணமாகவே அவர் மீது குற்றஞ்சுமத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டிலுள்ள சில துறைகளின் செற்பாடுகளால் ஜனாதிபதி ஹட்லராகும் நிலைக்கு தள்ளப்பட்டால் அவர் அவ்வாறு செயற்பட வாய்ப்புள்ளது என்று நான் எண்ணுகின்றேன். அவ்வாறெனில் யாரும் அவர் மீது குற்றஞ்சுமத்தமாட்டார்கள்.
தேர்தல் காலத்தில் மகா சங்கத்தினரும் ஹிட்லர் ஆட்சியானாலும் கவலையில்லை என்றவாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் அவர் ஹிட்லரைப் போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.