தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றில் வலியுறுத்திய நாமல்ராஜபக்ஷ – ஆக்கபூர்வமாக பயன்படுத்துமா..? தமிழர் தரப்பு !

“பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.” என  வியைாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (22.06.2021) உரையாற்றிய போதே  விளையாட்டுத்துறை அமைச்சர்  ஒரு கோரிக்கையாக இதனை முன்வைத்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இந்த சந்தர்ப்பத்தில் எழுந்து கருத்து வெளியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான நாமல் ராஜபக்ச, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் பலர் இன்றும் சிறைகளில் உள்ளனர். வழக்கு விசாரணைகளின் பின் 35 பேரே தண்டனை பெற்று தொடர்ந்தும் சிறையில் இருப்பதோடு அவர்கள் பெற்ற தண்டனைக் காலத்திற்கும் மேலதிகமாகவே தண்டனை கிடைக்கும் முன்னர் சிறையில் களித்துவிட்டனர். அத்துடன் 20 வருடங்களுக்கும் மேலதிகமாக சிலர் தடுப்பில உள்ளனர். எந்த வழக்கும் தொடரப்படாத நிலையி்ல 13 பேர் உள்ளனர். வழக்கு விசாரணை நிறைவுபெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத 116 பேர் உள்ளனர். அவ்வாறு பல இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவுறுத்த வேண்டும். அல்லது விடுவிக்கப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 12000ற்கும் அதிகமானவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதோடு 3500 பேருக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வாய்ப்பும் பெற்றுள்ளனர்.

நான் சிறைச்சாலையில் இருந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த பலரை சந்தித்தேன். அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற காலம் எனது வயதை விடவும் அதிகம். இன்றுவரை அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு முடியாமலிருக்கின்றது. அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிறைச்சாலையில் நான் சந்தித்த ஒருவருடைய கதை ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு பிரபலம் ஒருவரது படுகொலை வழக்கில் இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார் குறித்த கைதி, செய்த குற்றம் என்னவென்றால், மரமொன்றில் கிளையை வெட்டியமையாகும். கிளையை வெட்டியவர் சிறையில், ஆனால் பிரதான குற்றவாளி வெளியே சுதந்திரமாக உள்ளார்.

அதனால், 12500 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்தமை மற்றும் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க எம்மால் முடியும் என்றால், இந்த விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது புனர்வாழ்வுத்திட்டத்தின் ஊடாக இவர்களுக்கு நீதியை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவொரு மன உளைச்சல் பிரச்சினையாகும். எமது அரசாங்கம் எவருக்கும் அநீதியை செய்யாது என்பதையும் குறிப்பிடுகின்றேன்” எனத் தெரிவித்தார்.

……………………………………………………………………………………………………………………………………… விமர்சனங்கள் அனைத்துக்கும் அப்பால் அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை தமிழர் அரசியல் தரப்பினரால் ஒரு பெரும் அரசியல் லாபத்துக்கான விடயமாகவே நீண்டகாலமாக பயன்படுகின்றது.  இந்நிலையில் கடந்த நல்லாட்சி காலத்தில் அரசுடன் கைகோர்த்திருந்த கூட்டமைப்பினர் கூட ஆக்கபூர்வமான எந்த நகர்வையும் இது தொடர்பாக மேற்கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில்சர்வதேசம் தலையிட்டோ – அல்லது இந்தியா தலையிட்டோ எந்த ஒரு மாற்றமும் செய்து விட முடியாது. பெரும்பான்மை மக்களின் அதிக பலத்துடன் ஆட்சி கட்டில் ஏறிய அரசியல் தலைமைகளினால் மட்டுமே அது முடியும் என்பதே உண்மை. அதற்கான நகர்வுகளை முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடிக்கொண்டு மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் வைத்து அரசியல் மட்டும் செய்கிறார்களே  தவிர வேறு மாற்றங்கள் எவையும் இல்லை.

இவ்வாறானதொரு நிலையில் அரச தரப்பில் இருந்து முக்கியமாக அரச தரப்பின் அடுத்த அரசியல்தலைமையான கருதப்படக்கூடிய  நாமல்ராஜபக்ஷ அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றில் பேசியுள்ளார். இது நல்ல ஒரு வாய்ப்பு. பார்க்கலாம் இந்த வாய்ப்பினையாவது பயன்படுத்தி அரசியல்கைதிகள் விடுதலையை முனைப்போடு நம்மவர்கள் மேற்கொள்வார்களா..?  அல்லது வழமை போல அரசை எதிர்க்கிறேன் என்று கூறிக்கொண்டு இந்த வாய்ப்பையும் நழுவவிடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் !

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *