“இனப்பிரிவினைகளை மறந்து எங்களுடன் இணைந்து செயலாற்ற உடன் வாருங்கள் என தேசிய நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டின் பகுதிகளை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிப்பதற்காக தம்முடன் இணைந்துகொள்ளும்படி கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குறித்த அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகளுக்கு எமது நாட்டிற்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்கு சந்தர்ப்பமும் உருவாகும். மேற்குலக நாடுகளும், சக்திகளும் இலங்கையிலுள்ள எரிபொருள் வளங்களை கொள்ளையிடக் கங்கணம் கட்டித்திரிகின்றன.
பொஸ்பெயிட் உள்நாட்டு உர உற்பத்தியாலையை வைத்துக்கொண்டு உள்நாட்டில் உரப்பற்றாக்குறையை சொல்கின்றனர். இதனையிட்டுக் கவலையடைகிறேன். இப்போதாவது இந்த நாட்டை எமது கைகளுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு நாட்டை ஒப்படைத்து, அழிவுகளே இன்றுவரை எஞ்சியிருக்கின்றன.
அவற்றை தொடர இடமளிக்கக்கூடாது. சுமார் 20 அரச நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் காணிகளை கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப் போகின்றார்கள். அதனால் தமிழ் மக்களும் எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன். அண்மையில்கூட தமிழ் மக்கள் சிலர் என்னை சந்தித்ததோடு இலங்கையில் உள்ள மலே பிரஜைகளும் என்னை சந்தித்திருக்கின்றனர்.
முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைய வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளுக்கு அப்பாற்சென்று மூன்றாவது தரப்பு சக்தியொன்றை உருவாக்கி அதனூடாக விடுதலைப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தற்போது செயற்படும் விதத்தை நான் அனுமதிக்கமாட்டேன் என மேலும் தெரிவித்தார்.