Friday, August 6, 2021

தவறான தெரிவுகளால் சிதைவுறும் உள்ளூராட்சி கட்டமைப்புகள்

செய்தி 1- பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி விற்பனை
மிகிந்தலை பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது.
செய்தி 2 – ஆலய முன்றலில் வாள்வெட்டு – வலி மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் கைது
செய்தி 3 – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தற்கொலை!

இவையெல்லாம் கடந்த சில வாரங்களில் கண்ணில் பட்ட செய்திகள்.  இவற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள். அதிலும் இறுதி இரண்டு செய்திகளும் யாழ்ப்பாண மாவட்டத்தோடு தொடர்புபட்டவை.

பொதுவாகவே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகுந்த அசமந்தப் போக்குடன் செயற்படுவது வழமை. அதிலும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளைத் தெரிவதில் அது மிகவும் அதிகம்.

உள்ளூராட்சி சபைகளின் முக்கியத்துவம் அவற்றின் வகிபங்கு தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வதில்லை. அவை தொடர்பில் அவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குரிய விடயமே.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது வேட்பாளருடைய தகமை, திறமை, அவர் தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்வார், சமூகப் பொறுப்புள்ளவரா, தனிப்பட்ட ரீதியில் சிறந்த நடத்தையைக் கொண்டிருப்பவரா என்று எல்லாம் யோசிப்பதில்லை.

மாறாக அவர் தெரிந்தவரா, சொந்தக்காரரா, எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், வேலை எடுத்துத் தருவாரா, செலவு இல்லாமல் வேலை முடித்துத் தருவாரா என்று சிந்தித்தே பெரும்பாலான மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.

உள்ளூராட்சி சபைகள் நாட்டின் மிக அடிப்படைக் கட்டமைப்புகள். மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் இவற்றின் பிரதிநிதிகளே. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், சமூக அபிவிருத்தி தொடக்கம் கழிவகற்றல் முகாமைத்துவம் வரை நாட்டில் அடிப்படை வசதிகளுடன் தொடர்புபட்டு பணியாற்றுபவர்கள் இவர்களே. பிரதேசத்தின் சகல விதமான அபிவிருத்திகள், தேவைகள் என்பவற்றைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டியவர்கள் இவர்களே.

உள்ளூராட்சி சபைகள் மக்கள் நலன் சார்ந்து உரிய வகையில் செயற்பட்டால் மட்டுமே குறித்த பிரதேசம் வளம் பெற முடியும். ஆனால் எமது சமூகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ளூராட்சி சபைகளை மக்கள் தெரிவு செய்வதில் காட்டிய அசமந்தப் போக்கு ஒட்டுமொத்த சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.

ஒரு மக்கள் பிரதிநிதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது உயிரை மாய்த்துக்கொள்கின்றார் என்றால் அவரால் எவ்வாறு சமூகத்தின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்? இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விடயம் ஒரு வருடத்துக்கு முன்பும் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணமும் தற்கொலை என்றே தெரிவிக்கப்பட்டது.

ஒருவரால் தன் ஊரில் ஒரு கோவில் பிரச்சினையைக் கூட சுமூகமாகக் கையாள முடியாமல் வாளெடுத்து வெட்டப் போகிறார் எனில் அவரால் சமூகத்தில் நிநோக்கற்றகழும் வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? அதற்குப் பதிலாக இவர்களே வன்முறைகளைத் தூண்டுவோராக உள்ளனர். தம்முடைய மனவெழுச்சிகளையே கையாள முடியாத கையறு நிலையில் உள்ளவர்கள் எப்படி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி உடையவர்களாக இருக்க முடியும்? இவ்வாறானவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறல்லவா?

நாட்டில் மீண்டுமொரு தேர்தலுக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களும் தம் மாகாண சநோக்கற்றபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. வெறுமனே தேர்தல் கால பிரச்சாரங்களை மட்டும் கொண்டு வாக்களிக்காமல், நீண்ட கால அவதானத்தின் அடிப்படையில் சரியானவர்களைத் தெரிவு செய்ய மக்கள் முன்வரவேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *