“தேவைப்பட்டால் கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. எல்லோருமே ஆதரவு தரதயார்.” – பஸில் ராஜபக்சவிடம் எம்ஏ.சுமந்திரன் !

நிலுவையில் இருக்கும் மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்தார்.

இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணையைக் கையில் எடுத்து புதிய மாற்றங்களோடு அதை விரைந்து நிறைவேற்றுவதற்கு ஆராயப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்தத் தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்றைய கூட்டத்துக்கு முதல் தடவையாக சமுகம் தந்தனர். அச்சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என பஸில் ராஜபக்ச கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது எனவும், அதற்காக
மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் அவர் அங்கு சொன்னார்.

இந்த விடயத்தில் சில சமயங்களில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அச்சமயம் அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அத்தகைய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல என்று விளக்கினார்.

இது தொடர்பில் தாம் ஒரு தனிநபர் சட்டமூலம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கின்றேன் எனவும், கால விரயத்தைத் தடுப்பதற்காக அதையே தேவையான மாற்றங்களோடு சமர்ப்பித்து நிறைவேற்றலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்துக்களை கூட்டத்தில் பங்குபற்றிய சட்டமா அதிபரின் பிரதிநிதியும் அங்கீகரித்தார். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல என்று குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி., அப்படி தேவைப்பட்டாலும் கூட, கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. எல்லாமே ஒரேயடியாக ஆதரவு தர முன்வந்து இருக்கின்றன என்பதால் மூன்றில் இரண்டு பங்கு அல்ல, அதையும் தாண்டி முழு நாடாளுமன்றத்தின் ஆதரவுடனும் இத்தகைய சட்டமூலத்தை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார். ஏனைய உறுப்பினர்களும் அந்தக் கருத்தை அங்கீகரித்தனர்.

இதேவேளை, இதுவரை இருந்த தேர்தல் சட்டத்தை அப்படியே மீண்டும் சட்டமாக்கினால் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விடயம் அதில் வராது என்பதைச் சுட்டிக்காட்டினார் பஸில் ராஜபக்ச.

முதலில் பழைய சட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து, பின்னர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைப் புதிய சட்டம் மூலமாகச் சமர்ப்பித்து நிறைவேற்றலாம் என்றார் சுமந்திரன். அந்தக் கருத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

புதிய சட்ட மூலங்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களத்துடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபடும் எனத் தெரியவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *