வலி வடக்கின் மக்கள் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இராணுவத்தினர் !

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அவற்றை நிரந்தரமாக சுவிகரிக்க முயற்சிப்பதாகவும்  குறித்த காணிகளில் தென்னை மரங்களை நாட்டி தொடர்ந்து நிலைகொண்டிருக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் வலி வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் 3500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மக்கள் தமது காணிகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மயிலிட்டி, பலாலி பகுதிகளில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் மயிலிட்டி மீனவர்கள் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விவசாயிகளும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் மக்களின் உறுதி காணிகளில் வளர்ந்துள்ள தென்னைகளை வெட்டும் படையினர் புதிதாக அங்கே அதிகளவு தென்னைகளை நடுவதற்கு குழிகளை வெட்டுகின்றனர். இதனால் அந்த நிலம் மக்களுக்கு மீள வழங்கப்படுமா என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களின் வீடுகள், பாடசாலை, தேவாலயங்கள், ஆலயங்கள், கன்னியர் மடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி மக்கள் குடியேற்றப்படாமல் உள்ள நிலையில் துறைமுகத்தை பெரும் செலவில் புனரமைத்தும் மயிலிட்டி மக்களுக்கு பயன் எதுவுமில்லை என சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 31 வருடகால மீள்குடியேற்ற ஏக்கத்தை தீர்ப்பதற்கு சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *