“கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோகாதீர்கள்.” – பட்டத்திருவிழா தொடர்பில் கஜேந்திரர்கள் விசனம் !

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ ஆக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானது தொடக்கம்  பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

முக்கியமாக,  இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி ,

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது. வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *