கிளிநொச்சிக்குப் போட்டி போட்டுப் பயணித்த இரு மலையகத் தலைவர்களும் இன்று அம்மக்கள் குறித்து பேசத் தயாரில்லை – திகாம்பரம் குற்றச்சாட்டு

up-cun.jpgயுத்த நிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு கிளிநொச்சிக்குப் பயணித்த மலையகத்தின் இரு பிரதான கட்சித் தலைவர்களும் இன்று அம்மக்களுக்காக குரல் கொடுக்கத் தயாரில்லையென குற்றஞ்சாட்டிய தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், அப்பாவிமக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்கு சாதமாக்கிப் பேசுவது தவறெனவும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் மற்றும் உதவி நிதிச் செயலர் உதயா ஆகியோருக்கு தலவாக்கலை நகர் பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய திகாம்பரம் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் 25 வருடகாலமாக யுத்தம் நடைபெற்று வருவதை யாரும் மறுப்பதற்கில்லை. அதேபோல, 50 வருடகால , 25 வருடகால அரசியல் தலைமைகளும் மலையகத்தில் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் வெற்றிபெற்ற காலத்தில் எல்லாம் யுத்தம் பற்றிப் பேசாத தலைமைகள் இன்று தமது தோல்விக்கு யுத்த சூழ்நிலையைக் காரணம் காட்ட முயல்கின்றன. அப்பாவி மக்கள் படும் துயரங்களை அரசியல் கண்ணோட்டத்தில் தமக்குச் சாதகமாக்கிப் பேசுவது தவறு . யுத்தநிறுத்த காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் கிளிநொச்சி பயணித்ததை மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால்,இன்று அந்த மக்களுக்காக குரல் கொடுக்க இவர்கள் தயாரில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்திற்கு தனது ஆதரவையே தெரிவித்து வருகின்றது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

எனவே, மத்திய மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை வெவ்வேறு காரணங்களைக் கூறி சமாளிப்பதை விடுத்து மக்கள் வழங்கிய தீர்ப்பினை ஏற்று செயல்படவேண்டும். மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். அடையாள அட்டை இன்மையால் தமக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு அடையாள அட்டை இல்லை என்பது இப்போது தான் இவர்களுக்குத் தெரிந்ததா? அடையாள அட்டை உள்ளவர்களே இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரிகிறது. அடையாள அட்டை இல்லாதவர்களின் வாக்குகளைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்’ என்றார்.

வெற்றி பெற்ற மற்றைய வேட்பாளரான உதயகுமார் பேசும்போது; “இன்று பள்ளிவாசலில் எமக்கு வரவேற்பளிப்பது ஒரு முன்னுதாரண நிகழ்வாகும். நாம் கட்சி இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம். மலையகத்துக்கான அரசியல் மாற்றத்தைக் கோரினோம். அதற்குக் கிடைத்த வெற்றியே எமது வெற்றி. இது மக்களின் வெற்றி. இதனை திரிபுபடுத்தி அலட்சியம் செய்பவர்கள் மக்களால் எதிர்வரும் தேர்தல்களில் மேலும் புறக்கணிக்கப்படுவார்கள்.

வருமானக் குறைவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மலையக மக்களுக்கு எப்போதுமே பாரிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இம்முறை கூட்டொப்பந்தத்தையும் தாமே முன்னெடுப்பதாக பிரதான தொழிற்சங்கம் ஒன்று அறிக்கை விடுத்துள்ளது. எமக்கு யார் முன்னெடுப்பது என்பதில் பிரச்சினை இல்லை. என்ன விடயம் முன்னெடுக்கப்படுகின்றது என்பதே முக்கியம். மக்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தால் மக்களும் ஆதரிப்பர். நாமும் ஆதரிப்போம். மாறாக நியாயமற்ற சம்பளம் முன்வைக்கப்படுமானால் மக்கள் போராட்டத்தை நாமே முன்னெடுப்போம்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *