“அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அரசுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
5ஆவது நாளாக கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மிகவும் அமைதியான முறையில், நேர்த்தியாக அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் அவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இவர்களில் எவருமே பேருந்துகளிலோ அல்லது பாரவூர்திகளிலோ கொழும்பிற்கு வரவில்லை. சுயமாக ஒன்றிணைந்துள்ளனர்.
ஜனாதிபதியையும் , நாடாளுமன்றத்தையும் பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்பதாகத் தெரியவில்லை.
பாரியதொரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் இளைஞர்களின் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அது நிச்சயம் வெற்றி பெறும்
உங்களால் முடியாவிட்டால் எம்மிடம் கையளித்துச் செல்லுங்கள்’ என்பதே அவர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறும் செய்தியாகும்” என்றார்.