பாக்குநீரிணையை தாண்டியும் மோடியின் ஆட்சி – கோட்டாபாயவை கட்டுப்படுத்தும் மோடி !

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயம் கோப் குழு (COPE) விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

COPE என்றழைக்கப்படும் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் இலங்கை மின்சார சபை நேற்று ஆஜராகிய போது இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டது.

மின்னுற்பத்தி செயற்றிட்டத்திற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்தை தெரிவு செய்த விதம் குறித்து , இலங்கை மின்சார சபையிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக COPE குழுவில் ஆஜராகிய இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினான்டோ குறிப்பிட்டுள்ளார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

இதே நேரம் நேற்றைய தினமே  காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான COPE குழுவின் விசாரணையில் மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை மறுப்பதாகவும் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை அளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இது பெரிய விடயமாகி பேசுபொருளாக ஆரம்பித்ததது. பல ஊடகங்களும் மின்சார சபை தலைவரின் கருத்தை மையச்செய்தியாக வெளியிட ஆரம்பித்தன். இது தொடர்பில் ராகுல் காந்தி தெரிவித்த போது ,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் , கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *