பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 12 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் திலக் பண்டார தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு உட்பட்டு அந்த மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்ற மாணவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இதே நேரம், பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.இதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.