தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை – அமைச்சர் வியாழேந்திரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இப்போது தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கிறது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கலையரசனின் பெயரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்த நிலையில் மாவை சேனாதிராஜாவுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர்,

“இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினை, இதில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி முன்வைக்கப்படும் போது ஒரு அபிப்பிராயத்தையும் கூறியாக வேண்டும்.

ஒரு தமிழ் மாவட்டம் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கும் போது அதற்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். என்றார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அரசியலுக்கு வந்து அதிலிருந்து விலகியமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

கட்சி அரசியல் என்பது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றும் பயணத்திற்கு துணை புரியும் ஒரு சாதனம்.

அந்தச் சாதனத்தினால் நமது தேவையை அடைய முடியாதென நமக்குத் தெரியும் போது எம்மால் அப்பாதையில் பயணிக்க முடியாது. அப்படியாயின் மாற்று வழியொன்றைத் தேடவேண்டும். எந்த மக்கள் என்னைத் தெரிவு செய்தார்களோ அந்த மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே நான் அதிலிருந்து விலகினேன்.

மக்கள் எத்தனை வருடங்களுக்கு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்வது? நன்றாகச் சிந்தித்தால் நான் தெரிவு செய்த பாதை சரியானது என்றார் அமைச்சர் வியாழேந்திரன் .

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *