“யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வத்தையும் தற்போது இழந்து கொண்டிருக்கிறார்கள்” என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெறும், கல்வி தொடர்பான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதத்தின் போது வடக்கில் அபிவிருத்திகள் ஏராளம் நடந்திருந்தாலும் கல்வி நிலை தொடர்ந்தும் பின்தங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டம் 19 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 25 ஆவது இடத்திலும் தீவக வலையம் இறுதி இடத்திலும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வமும் இல்லாது போய்க்கொண்டிருக்கும் சூழலில் கல்வியில் சிறந்ததொரு சமூகமாக வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற இந்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.