பழனி திகாம்பரம்

பழனி திகாம்பரம்

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – பழனி திகாம்பரம் உறுதி !

“மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின விழா, நேற்று ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

” மலையக மக்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டாலும், மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

இன்னும் 20 வருடங்கள் இந்த அரசை அமைக்கமுடியாது. தங்களுடன் வந்துவிடுங்கள் என எமக்கும் ஆளுங்கட்சியின் அழைப்பு விடுத்தனர். நம்பி சென்றிருந்தால் இன்று மலையக அமைச்சர் போன்று, மாவு அமைச்சராகவே இருந்திருக்க வேண்டும். 20 வருடங்கள் என சூளுரைத்தனர். இன்று இரண்டு வருடங்களிலேயே வீடு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சி என்பது மலையகத்துக்கு பொன்னான காலம். 50 வருடங்கள் அரசியல் செய்தவர்களுக்கு மத்தியில் நான்கரை வருடங்களில் மலையகத்தில் பாரிய வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தோம். உரிமை அரசியலையும் வென்றெடுத்தோம்.

மலையக பெருந்தொட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சஜித் தலைமையில் அதனை நாம் நிச்சயம் செய்வோம்.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய போராட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும். அதன்பின்னர் ஏப்ரல் 03 ஆம் திகதி தலவாக்கலையிலும் நடைபெறும். அதில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.” – என்றார் திகா.

“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” – திகாம்பரம் சபதம் !

“என்னை நம்புங்கள். பெருந்தோட்ட மக்களான உங்களை எதிர்க்காலத்தில்  சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது ஹட்டன் புரூட்ஹில் தோட்டத்தில் ஏழு பேச்சஸ் காணியில் புதியதாக நிர்மானிக்கப்பட்ட 50 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

 

மனிதனுக்கு வீடுகள் கட்டிகொடுத்து தண்ணி இல்லை என்றால் அதில் குடியேற முடியாது. ஆகவே இந்த வேலைத்திட்டம் மிகப்பெரிய வேலைத்திட்டம். இதனை செய்து கொடுத்த போதகர் பெருமாள் நாயகத்திற்கு நன்றி கூற வேண்டும். நான் அரசியலுக்கு வந்ததே மலையக மக்களுக்கு எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்பதை தவிர நாம் எதுவும்  தேடிக்கொள்வதற்கல்ல. காலம் காலமாக மலையக மக்களை லயத்திலேயே வைத்திருந்த தலைவர்கள் கடந்த 20 வருடத்தில் எனக்கு 2015 ஆண்டு தான் அரசியல் பலம் கிடைத்தது.

கடந்த தேர்தலின் போது தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு எங்கள் மூன்று பேரையும் மக்கள் கொண்டு வந்தார்கள். அவர்களை எங்கள் உயிர் இருக்கும் வரை மறக்க மாட்டோம். இன்று நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது மின்சார துண்டிப்பு,மா இல்லை அரிசியில்லை,நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு.மக்கள் வாழ முடியாத நிலை உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட அந்தந்த நாடுகள் அந்த மக்களை நன்றாக தான் வைத்துள்ளார்கள்.

ஆனால் நமது நாட்டில் இந்த அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கின்றது.அதற்கு காரணம் கொரோன அல்ல என இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே தெரிவிக்கிறார்கள் பொய்யா ஆசை வார்த்தைகளை காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினை அவர்களுக்கு வாக்களித்த மக்களே இன்று இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு அதிகமாக பேசுவதற்கு அவசியமில்லை எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வரும் அரசாங்கத்தில நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு மலையக தக்களுக்கும் கட்டாயம் நல்லது நடக்கும் .அதில் ; மீண்டும் அமைச்சுப்பதவியினை பெற்று விட்டுச்சென்ற வேலைகளை தொடர்வோம். வடக்கில் இன்று மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள்.

நாம் ஆயிரம் ரூபாவுக்காக போராடுகிறோம். ஆயிரம் ரூபா ஒரு பிரச்சினையல்ல இங்குள்ள தொழிற்சங்கங்கள் தாத்தா பேரன் கொள்ளுபேரன் வந்து இந்த கூட்டு ஒப்பந்தத்தை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பொறுத்த வரையில் மலையக மக்களை கடந்த அரசாங்கத்தில் சிறு தோட்ட உரிமையாளர்களாக ஆக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன் அரசாங்கம் தோல்வி கண்டதனால் செய்ய முடியாது போய்விட்டது.

என்னை நம்புங்கள் காலி மாத்தறை பகுதியில் தோட்டங்களை பிரித்து கொடுத்து எவ்வாறு சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றினார்களோ அதே போன்று எதிர்க்காலத்தில் உங்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன். கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் இரண்டு இலட்சம், நாலு லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு பிரதேசசபைகள் தான் இருந்தன அதனை நான் அதிகரித்து கொடுத்தேன். வீடு கட்டிக்கொடுத்து அதற்கு அசல் ஒப்பனையினையும் பெற்றுக்கொடுத்தேன். இதனை வைத்து நீங்கள் வங்கி கடனை கூட பெற்றுக்கொள்ளலாம் ஆகவே எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ராம், உள்ளிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

“தாத்தா, அப்பா ஏமாற்றியதுபோல பேரனும் எமது மக்களை ஏமாற்றுகிறார்.” – பழனி திகாம்பரம் சாடல் !

” அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்த போது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகின்றது.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறிய போது ,

” நல்லாட்சியே மலையகத்துக்கு பொன்னான காலம். அக்காலத்தில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய கோட்டா அரசானது, மலையகத்துக்கு மட்டுமல்ல முழு இலங்கைக்குமே சாபக்கேடானதாகும். மக்களுக்கு பல பிரச்சினைகள். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

கூட்டு ஒப்பந்தம் இருந்தால்தான் மலையக மக்களின் பிரச்சினை தீருமென சிலர் கொக்கரித்து வருகின்றனர். தாத்தா, அப்பா ஏமாற்றியதுபோல பேரனும் எமது மக்களை ஏமாற்ற முற்படுகின்றார். அதனால்தான் நாங்கள் கட்டிய வீடுகளுக்கு, திறப்பு விழா நடத்துகிறார். அதுவும் சாவிகளை பலவந்தமாக பறித்தெடுத்து மீள வழங்கப்படுகின்றது. எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வருங்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச மீண்டும் வழங்கியுள்ளார். இந்த ஆட்சியின் கீழ் எமது மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. புதிய ஆட்சியின்கீழ் மலையக மக்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” – பழனி திகாம்பரம் 

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என அரசு சொல்வது ஏமாற்று வித்தையே” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல்ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வானொலி நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை நாட் சம்பளமா? என்பது பற்றி விபரிக்கப்படவில்லை.

இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்கமாட்டார்கள்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.