வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

லண்டனில் புதிய உருவ அமைப்பை காட்டும் கொரோனா வைரஸ் – ஊரடங்கு மேலும் தீவிரம் !

பிரித்தானியாவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி மெட் ஹன்ஹாக் கூறியதாவது:-

லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் 3 அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், மால்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.

சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது. மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புகளையும், நீண்ட கால பிரச்சனைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பைடன் தான் – ட்ரம்ப் தரப்பின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி !

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். பைடன் 306 வாக்குகளும், நடப்பு ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர்.
அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர்.
அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்திட்டனர்.
தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை. அமெரிக்காவில் அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது.
இதன்படி,  கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன்  பெற்றார். இதன் காரணமாக  270 தேர்தல் வாக்குகளை பெற்று ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக  பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனெனில், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும். மேலும், தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.

பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகப்பேச்சுவார்த்தை மீள ஆரம்பம்! 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக நடைமுறைகள் வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்னர் தீர்வொன்றை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியா கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருந்த நிலையில் வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறைசாரா உறுப்பினராக உள்ளது.

இந்நிலையில், பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை தொடர்கின்றமை குறிப்பிட்டதக்கது.

“அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி ” – அறிவித்தார் ஜனாதிபதி ட்ரம்ப் !

உலகின் பிற எந்த நாட்டையும் விட கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசு நாட்டை பாடாய்ப்படுத்தி வருகிறது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி 1.58 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதித்து இருப்பதாகவும், 2.95 லட்சம் பேருக்கும் கூடுதலோனார் பலியாகி இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அங்கு கடந்த மாதம் 3-ந் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போது அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் தனது ஒப்புதலை வழங்கி இருப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “இன்று நமது நாடு ஒரு மருத்துவ அதிசயத்தை சாதித்துள்ளது. நாம் இந்த 9 மாதங்களில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒரு தடுப்பு மருந்தை வழங்கி உள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்றாகும். இது கோடானுகோடி உயிர்களை காப்பாற்றும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வரும். இந்த தடுப்பூசி அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 24 மணி நேரத்தில் முதல் தடுப்பூசி செலுத்தப்படும்” என கூறி உள்ளார்.

இதேபோன்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கமிஷனர் ஸ்டீபன் எம்.ஹான் கூறுகையில், “அமெரிக்காவிலும், உலகமெங்கும் உள்ள எத்தனையோ குடும்பங்களை பாதித்த இந்த பேரழிவு தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல், இந்த தடுப்பூசி” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தடுப்பூசி சோதனையில் நரம்பியல் பாதிப்பு – நிறுத்தப்பட்டது சீன தடுப்பூசி பரிசோதனை !

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு சீனாவின் சினோபார்ம் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பெரு நாட்டில், சீனாவின் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நரம்பியல் தொடர்பான பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு கைகளை அசைக்க முடியாத அளவுக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனை செவ்வாய்க்கு அழைத்துச்செல்லும் கனவுத்திட்டம் – வெடித்துச் சிதறியது ஸ்டார்ஷிப் !

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்ட ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

யார் இந்த எலன் மஸ்க்? - 21st Century Innovator | Biography | Success Story  | Elon Musk Biography in Tamil - Tech Tamilan

ஆனால் தனது சில நிமிட பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகையில், இந்த ரொக்கெட் தொழில்நுட்ப கோளாறில் வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்து எரிந்தது. இது செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எலான் மாஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

பிரித்தானியாவில் தடுப்பூசி போட்ட இருவருக்கு ஒவ்வாமை !

பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரித்தானியா அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது.
இந்நிலையில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்றும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியால் அலர்ஜி ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

“வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். ட்ரம்ப்க்கும் இது தெரியும்“ – இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் பகீர் !

வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தெரியும் என்று இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஹைம் இஷத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைம் இஷத் கூறும்போது, “வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். இருப்பினும் வேற்றுகிரக வாசிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர். ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு இணையாக விண்வெளியை அறிவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹைம் இஷத் இத்தகவலை இஸ்ரேலின் முக்கியமான நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இக்கருத்து குறித்து  அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

“தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும்” – சீனா எச்சரிக்கை !

தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா நீண்ட காலமாக கூறி வருகிறது. இதனால் தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தாவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் 280 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தாய்வானுக்கு நவீன ராணுவ தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தைவானின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசியல் ஸ்திரத்தன்மை ராணுவ சமநிலையை உறுதி செய்வதற்கும் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் முன்னேற்றத்தை பராமரிப்பதற்கும் உதவும். தைவானின் ராணுவ தகவல் தொடர்பு திறனை நவீனமயமாக்குவதிலும், அவர்களின் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியிலும் இந்த விற்பனை முக்கிய பங்கு வகிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையை ரத்து செய்யாவிட்டால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புச்செயலாளராக முதல் ஆபிரிக்க – அமெரிக்கர் கறுப்பினத்தவர் நியமனம் !

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற (ஜெனரல்) லாயிட் ஆஸ்டினை தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின பாதுகாப்புச் செயலாளராக லாயிட் ஆஸ்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவியில் லாயிட் ஆஸ்டின் அமர்ந்தால் பென்டகன் தலைவராக பொறுப்பு ஏற்கும் முதல் ஆபிரிக்க – அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இவர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் அமெரிக்க இராணுவத்தை மேற்பார்வையிடும் மத்திய கட்டளைக்கு தலைமை தாங்கிய முதல் கறுப்பின அமெரிக்கர் என்பதும் குறிப்பட்டத்தக்கது.