மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

Kumaran_PathmanathanPirabakaran Vதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதக்கொள்வனவாளரும் வே.பிரகாரனினுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து  கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டார்.

7ஆம் திகதி சனிக்கிழமை டெய்லிமிரர் பத்திரிகையில் வெளியான இப்பிரத்தியேக செவ்வியின் தமிழ் வடிவம் இது :-
 
கேள்வி: கடந்த வருடம் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

பதில்: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால், நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது.
 
துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.  இப்போது NERDO (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கேள்வி: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?
பதில்: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கேள்வி: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?
பதில்: இல்லை நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கேள்வி: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?
பதில்: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன் என்பதாகும்.

கேள்வி: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?
பதில்: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதியிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துக்கொண்டது. ஒருவர் ‘வெரி சொரி மிஸ்டர் கே.பி’. என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் (2 பகல்களும் 2 இரவுகளும்) அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்க வேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடு கடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்கா? இந்தியாவுக்கா? அமெரிக்காவுக்கா? அல்லது வேறெங்குமா? கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின், நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு  பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கேள்வி: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன?  2007ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

பதில்:  நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது.

உண்மையில் நான் 2007இல் கைது செய்யப்படவில்லை.  என்னை கைது செய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

கேள்வி: நீங்கள் கொழும்புக்கு வந்தவுடன் என்ன நடந்தது? பாதுகாப்புச் செயலருடன் முதல் சந்திப்பிலேலேயே சிறந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாக நான் சில கதைகள் கேள்விப்பட்டேன்.
பதில்: கொழும்பு நோக்கிய விமான பயணத்தின்போது இலங்கை அதிகாரியுடன் நான் நீண்ட நேரம் கதைத்தேன். அவர் மிக சினேகபூர்வமானவர்.  இலங்கை அதிகாரிகளால்  நான் நாகரிகமாக நடத்தப்பட்டேன். அது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆனாலும் இலங்கை அடைந்தபின் என்ன நடக்குமோ என அப்போதும் இதயத்தில் கவலை இருந்தது. பாதுகாப்புச் செயலாளர் குறித்து மிக கவலை கொண்டிருந்தேன்.  அவர் கடுமையாகப் பேசும் சிங்கள கடும்போக்குவாதி என்ற அபிப்பிராயத்தையே நான் கொண்டிருந்தேன். அதனால் அவருடனான சந்திப்பு குறித்து உண்மையில் அச்சம் கொண்டிருந்தேன்.

ஆனால், பாதுகாப்புச் செயலரின் இல்லத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டபோது சில விடயங்கள் நடந்தன. பின்னணியில் ஒளி பளிச்சிட புத்தர் சிலையொன்று அங்கு இருந்தது. நான் சில நிமிடங்கள் நின்று புத்தர் சிலையை நோக்கிவிட்டுச் சென்றேன். அதனால் எனது மனம் ஆறுதலடைந்தது. தாய்லாந்தில் நான் எனது மனைவியுடன் அடிக்கடி பௌத்த ஆலயங்களுக்குச் செல்வேன். எனது வீட்டில் புத்தர் படம் உட்பட அனைத்து மத கடவுள்களின் படங்களும் உள்ளன. அதனால் எனக்கு பேராபத்து எதுவும் வராது என நான் நினைத்தேன்.

பாதுகாப்புச் செயலாளர் ஏனைய அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன் அவர் எழுந்து என்னுடன் கைகுலுக்கிவிட்டு ‘பிளீஸ் சிட் டவுண்’ என்றார். ஏனைய அதிகாரிகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். திரு. கோட்டாபய மிக கண்ணியமானவராக இருந்தார். எதற்காகவும் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் அப்போது சரியாக என்ன சொன்னேன் என்று நினைவில்லை. ஆனால் “நுழைவாயிலில் நான் புத்தர் சிலையை கண்டேன், பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கிறேன்” என்பதுபோல் ஏதோ கூறினேன்.

கேள்வி: நீங்கள்  குறிப்பிடும் புத்தர் சிலை சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள  உங்களை விமர்சிப்பவர்கள், புத்தரை புகழும் துரோகியென உங்களை சித்தரிப்பதற்கு ஏதுவாகலாம்?
பதில்: எனக்குத் தெரியும். நீங்கள் கூறுவது சரி. ஆனால் நான் உண்மையில் என்ன நடந்து என்பதையே சொல்கிறேன். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு வந்த 9 பேர் கொண்ட புலம்பெயர் தமிழர் தூதுக்குழுவொன்றிடமும் நான் இந்த புத்தர் சிலை  பற்றி சொன்னேன். 

எனது வீட்டு சூழல் காரணமாகவும் எனது மனைவியின் மத நம்பிக்கை காரணமாகவும் எனக்கு புத்த வழிபாடு, ஆலயங்கள் பரீட்சியமானவை. எனவே புத்தர் சிலையை கண்டமை உணர்வு ரீதியில் எனக்கு உதவியது. இது தான் உண்மை. அதற்காக அவர்கள் என்னை தாக்க விரும்பினால் அதை செய்யட்டும். நான் புத்தருக்கோ பௌத்தத்திற்கோ எதிரானவன் அல்லன்.

கேள்வி: உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். பாதுகாப்புச் செயலாளருடனான உங்கள் சந்திப்பு எவ்வாறு தொடர்ந்தது?
பதில்: கேக், தேநீர் பரிமாறப்பட்டன. பிரச்சினையை அமைதியான வழியில் அவர்கள் தீர்க்க முயற்சித்ததாகவும் ஆனால் முழுமையான யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார். அவர் சில கேள்விகளை கேட்டார். நான் உண்மையாக பதிலளித்தேன். எனக்குத் தெரியாத விடயங்களை கேட்டபோது அது பற்றி சொன்னேன். எனது பதில்களில் அவர் திருப்தியடைந்தவராகக் காணப்பட்டார். அதேவேளை, என்னைப் பொறுத்தவரை யுத்தம் நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது எனவும் இப்போது எனது ஒரே குறிக்கோள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை வாழ உதவுவதே எனவும் கூறினேன்.

பாதுகாப்புச் செயலரின் நடத்தைகள் எனக்கு உண்மையில் வியப்பாக இருந்தன. தொலைக்காட்சி நேர்காணல்களைப் பார்த்து அவர் ஒரு சிங்கள கடும்போக்குவாதி என்ற விம்பமே என் மனதில் இருந்தது, என்பதையும் அவரின் நடத்தை எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்பதையும்  ஒரு கட்டத்தில் நான் அவரிடம் சொன்னேன்.  அவர் சிரித்துவிட்டு “நான் எப்போதும் இப்படித்தான். சில ஊடகவியலாளர்கள் என்னை எரிச்சல்படுத்துகின்றனர். அதனால்தான் நான் அப்படி கோபமடைகிறேன் ” என்றார்.

நீண்ட உரையாடலின் பின்னர் அவர் ஒரு குறித்த அதிகாரியை எனக்கு அறிமுகப்படுத்தியதுடன், அவர் தான் எனக்குப் பொறுப்பாக இருப்பார் என்றார். சகல விடயங்கள் குறித்தும்  அந்த அதிகாரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேவையானால் அவரூடாக தனக்கு  எழுத்து மூலம் எதுவும் தெரிவிக்கலாம்  எனவும் கூறினார்.  அவர் மீண்டும் என்னுடன் கை குலுக்கினார். நான் கொழும்பிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன். எனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது? நீங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் பற்றி அரசாங்கத்துக்கு தகவல் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளும் தகவல்களும் வெளியாகின?

பதில்: இது பற்றி என்னை தெளிவாகச் சொல்ல விடுங்கள். இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

போராட்டம் இப்போதும் தொடர்ந்து அத்துடன் எனது தலைவரும் உயிருடன் இருந்திருந்தால் நான் அரசாங்கத்தை எதிர்த்து ஒத்துழைக்காமல் இருந்திருக்கலாம். நான் எத்தகைய பின்விளைவையும் சந்தித்திருப்பேன். ஆனால் நிலைமை அப்படியில்லை. எல்லாமே முடிந்துவிட்டது. எனவே எதிர்ப்பதில் அர்த்தமில்லை. எனவே நான் ஒத்துழைப்பதை தெரிவு செய்தேன்.
 
இன்னொரு விடயத்தையும் நான் நினைவுபடுத்த வேண்டும். நான் 2003 ஜனவரியிலிருந்து 2008 டிசெம்பர் வரை நான் இயக்கத்திற்கு வெளியே இருந்தேன். எனக்கு 2003 ஆம் ஆண்டிற்கு முந்தைய விசயங்கள் மட்டுமே தெரிந்திருந்தது. அக்காலப் பகுதியில் கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட நபர்களிலும் எனக்குப் பின்னால் வந்தவர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதைத் தெளிவாக புலனாய்வு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறினேன். அவர்கள் எனது நிலையை புரிந்துகொண்டனர்.

நாங்கள் பேசும்போது வேடிக்கையான விடயமொன்று நடந்தது. ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர்.  “உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது” என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.

இலங்கை புலனாய்வுத்துறை எமது மக்களில் சிலர் எண்ணுவதைப்போல் முட்டாள்தனமானது அல்ல. அதேவேளை ஏனைய நாடுகளின் புலனாய்வுத் துறையுடனும் அதிக பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேள்வி: ஆனால் புலம்பெயர்ந்தோர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை நீங்கள் அரசாங்கத்திற்கு வழங்குவதாக, நெடியவன் தலைமையிலான காஸ்ட்ரோ சார்பு குழுவும் சில ஊடகங்களும் உங்களுக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன?
பதில்: அது எனக்குத் தெரியும். ஆனால், உண்மை சற்று வித்தியாசமானது. புலனாய்வு ஆட்களால் பல்வேறு வட்டாரங்களிலிருந்து தகவல்கள் பெறப்படும் அதேவேளை, அவர்களுக்கு காஸ்ட்ரோவின் ஆட்களாலும் அதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

கேள்வி: அது எப்படி?
பதில்: எனக்கு சொல்வதற்கு சற்று தயக்கமாக இருக்கிறது. ஆனால் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இராணுவம் விசுவமடுவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது காஸ்ட்ரோவும் அவரின் பிரிவினரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். எனவே புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் இப்போது அதிக தகவல்கள் உள்ளன. அவர்களிடம் கணினிகள், தகவல் திரட்டுகள் உள்ளன. புலிகளுக்குப் பணம் கொடுத்தவர்களின் பட்டியல்கள், திகதிகள், தொகைகள் என்பன உள்ளன. அவர்களிடம் வரி பற்றுச்சீட்டுகளின் பிரதிகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் யார் நிதி சேகரிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். புலிகளினால் முதலீடு செய்யப்பட்ட வர்த்தகங்கள், சொத்துக்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வன்னிக்குச் சென்ற அனைவரின் விசிட்டிங் கார்ட்டுகள்கூட அவர்களிடம் உள்ளன. ஆனால், தகவல் கொடுப்பவன் என மக்கள் என்னை தூற்றிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?

கேள்வி: காஸ்ட்ரோவின் பிரத்தியேக டயரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அது உண்மையா?
பதில்: நான் எந்த டயரியையும் பார்க்கவில்லை. ஆனால் புலனாய்வு ஆட்கள் உத்தியோகபூர்வமற்ற விதமாக நட்பு ரீதியில் என்னுடன் உரையாடிய போது காஸ்ட்ரோவின் 20 வருடகால டயரிகள் தம்மிடம் இருப்பதாகக் கூறினர். அவர் (காஸ்ட்ரோ) வெளிப்படையாக பல விடயங்களை அந்த டயரிகளில் எழுதியுள்ளார். ஒரு தடவை அதிகாரியொருவர் என்னிடம் சிரித்துக் கொண்டே காஸ்ட்ரோவுக்கு காதல் தொடர்பொன்று இருந்ததா எனக் கேட்டார். எனக்கு அது பற்றி தெரியாது என்றேன். அவர் சிரித்துக்கொண்டு முழுக்கதையையும் சொன்னார். காஸ்ட்ரோ அது பற்றிகூட எழுதியுள்ளார்.

கேள்வி: தமிழிழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பில் நீங்கள் மிக சக்தி வாய்ந்த நபராக விளங்கிய காலமொன்று இருந்தது. ஆயுதக்கொள்வனவு, புலிகளின் கிளைகள் நிர்வாகம், நிதி சேகரிப்பு, மூன்று முக்கிய பிரிவுகளுக்கு நீங்கள் பொறுப்பாக இருந்தீர்கள். 2003 ஆம் ஆண்டில் நீங்கள் இந்த இயக்கத்திலிருந்து விலகியபின் நீங்கள் உங்கள் செல்வாக்கை இழந்துவிட்டதைப் போன்றும், 2009 ஆம் ஆண்டு மீண்டும் அதில் இணைந்தபோது உங்களை மீள நிலைநிறுத்திக் கொள்வதற்கு சிரமப்பட்டதைப் போன்றும் தோன்றியது. அப்போது என்ன நடந்தது? ஏன் விலகினீர்கள்? நீங்கள் திருமணம் செய்ததுதான் காரணமா?

பதில்: இல்லை இல்லை. எனது திருமணம் காரணமல்ல. நான் கடந்த நூற்றாண்டின் 90களின் முற்பகுதியில் திருமணம் செய்தேன். இந்த நூற்றாண்டில் அல்ல. எனது மகள் இப்போது தனது பதின்மர் பருவத்தின் கடைசியில் இருக்கிறாள்.

எனவே, நடந்தவை வேறு. 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

ஆனால், அப்போது பல நாடுகளின் புலனாய்வு வலைப் பின்னல்களால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் நான் முன்னிலையில் இருந்தேன். 2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்’ ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. நான் பல நாடுகளின் புலனாய்வு முகவரகங்களால் குறிவைக்கப்பட்டுள்ளேன் என்பதை எனது சொந்த தகவல் வட்டாரங்களின் மூலம் அறிந்திருந்தேன். எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு சினமூட்டியது.

மற்றொரு விடயம் எனக்கும் இயக்கத்திற்கும் தலைவருக்கும் இடையிலான இணைப்பில் (லிங்க்) மாற்றம் ஏற்பட்டது. 15 வருடகாலமாக வேலு என்பவர் எனக்கும் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தொடர்பாடல் இணைப்பாக அவர் செயற்பட்டார். திடீரென அவர் மாற்றப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டார். நான் வேலுவுக்கு பழக்கப்பட்டிருந்ததால் புதிய நபருடன் அஜஸ்ட் செய்துகொள்ள எனக்கு கடினமாக இருந்தது. ஒரு வழியில் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டன.

அதேவேளை, புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் போர் நிறுத்தத்தை தமது அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்துவதில் அக்கறையாக இருந்தனர்.

புலிகளின் கப்பல்களை கடற்புலிகளின் கட்டுப்படுத்த வேண்டுமென கடற்புலிகளின் தளபதி சூசை விரும்பினார். அதுவரை அக்கப்பல்களுக்கு நான் பொறுப்பாக இருந்தேன். அரசியல் பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். காஸ்ட்ரோ வெளிநாட்டு நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்தார். அவர் அனைத்து வெளிநாட்டுக் கிளைகளினதும் முழுக்கட்டுப்பாட்டை பெற விரும்பினார். நிதிக்குப் பொறுப்பாக இருந்த தமிழேந்தி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் அதிக பங்கு வகிக்க விரும்பினார். 

எனவே அவர்கள் அனைவரும் பிரபாகரன் எனது அதிகாரத்தை குறைத்து  அவற்றை தமக்கு வழங்க வேண்டும் என விரும்பினர். போர்நிறுத்தம் காணமாக புலம்பெயர்ந்த மக்கள் பலர் வன்னிக்கு அடிக்கடி வன்னிக்குப் பயணம் செய்தனர். எனவே தம்மால் சகல விடயங்களையும் தொலைபேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மூலம் நேரடியாகக் கையாள முடியும் என பிரபாகரனுக்கு புலிகளின் ஏனைய சிரேஷ்ட தலைவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் எனக்கு அதிக பொறுப்புகள் காரணமாக பளுமிகுந்துள்ளதாகவும் எனவே சில நடவடிக்கைகளிலிருந்து நான் ஓய்வுவெடுக்க வேண்டும் எனவும் அவர் பிரபாகரன் தெரிவித்தார்.  நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் ஓய்வு பெற்றேன்.

கேள்வி: உங்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள உங்கள் நெருங்கிய சகாக்களுக்கும் எதிராக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா?
பதில்:  ஆம். சில குற்றச்சாட்டுகள் இருந்தன. சில பெண்களை வன்னிக்கு அனுப்பி எனக்கும் பாரிஸிலுள்ள மனோ, ஒஸ்லோவிலுள்ள சர்வே ஆகியோருக்கும் எதிராக புகாரிடச் செய்யும் அளவுக்கு அவர்கள் சென்றனர். சில பெண்கள் பிரபாகரனுக்கு முன்னால் சத்தமிட்டு அழுததாகவும் நான் கேள்விப்பட்டேன்.

கேள்வி: இதன் பின்னால் யார் இருந்தார்கள்?
பதில்:  அது ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது?
ப:  நான் முன்பு கூறியதைப் போல தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான்  ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

கேள்வி: ஆனால் அப்போதும் நீங்கள் ஆயுதக் கொள்வனவுக்குப் பொறுப்பாக இருந்தீர்கள். ஏன் அது மாறியது? எப்படி ஆனந்தராஜா அல்லது ஐயா உங்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்?
பதில்: அது இன்னொரு கதை.  ஐயா மிக விவேகமான மனிதர். அவரிடம் சிறந்த பயண ஆவணங்கள் இருந்தன. சுதந்திரமாகப் பயணிப்பார். அத்துடன் அவர் தகுதிபெற்ற கணக்காளர். எனவே எனது அறிவுறுத்தலின்படி அவர் எமது கணக்குகளை தணிக்கை செய்வதற்காக அவர் சகல நாடுகளுக்கும் செல்வார்.

பின்னர் நான் அதிகமாக அறியப்பட்டு பல புலனாய்வு முகவரகங்களால் தேடப்பட்ட போது எனது பயணங்களையும் நடமாட்டங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனவே நான் அவரை ஆயுதச் சந்தையில் ஆயுதங்களை வாங்கக்கூடிய இடங்களுக்கும் அனுப்பத் தொடங்கினேன். ஆந்த இடங்களுடன் அவர் பரிட்சியமானார்.
பின்னர் பிரபாகரனிடமும் எனது பிரதிநிதியாக அவரை நான் அனுப்பினேன். அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவர் எனக்கு விசுவாசமாக இருப்பார் என நினைத்தேன். ஆனால் வன்னியிலுள்ள எனது நண்பர் ஒருவர் ‘இவர் உண்மையாகவே உங்களுடைய ஆளா? அவர் உங்களுக்கு எதிராக தலைவரின் மனதில் நஞ்சூட்டிக்கொண்டிருக்கிறார்’ என்று கூறியபோது அதிர்ச்சியடைந்தேன். ஐயா தானே சகல ஆயுதக்கொள்வனவுகளையும் மேற்கொள்வது போலவும் அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என்பதுபோலவும் காட்டிக்கொண்டதாக அறிந்தேன். அதன்பின் ஐயா பற்றி பாலா அண்ணை சொன்னது சரி என்று உணர்ந்தேன். 

கேள்வி: பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்), ஐயா பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?
பதில்: பாலா அண்ணையும் அடேல் அன்ரியும் 1999 ஆம் ஆண்டில் வன்னியிலிருந்து கடல் வழியாக வெளியேறியபோது அவர்கள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தங்குவதற்கும் லண்டனுக்குச் செல்வதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறவும் நான் ஏற்பாடு செய்தேன். நான் அப்போது இந்தோனேஷியாவில் இருந்ததால் அவர்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஐயாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால் மனிதர்களை மிகச்சரியாக எடைபோடும் பாலா அண்ணை பின்னர் என்னிடம் “‘நீ இந்த ஆளை நம்புகிறாய். ஆனால் இருந்துபார் ஒருநாள் உனது இடத்தை அவர் பிடித்துக்கொள்வார்” எனக் கூறினார். பாலா அண்ணையின் மதிநுட்பத்தை நான் உணர்ந்தபோது கால தாமதமாகியிருந்தது.

கேள்வி: ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட, வெளிநாட்டுக் கொள்வனவுப் பிரிவிலிருந்து நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். அதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டது?
பதில்: நான் முன்பே சொன்னதைப்போல் தலைவரை சந்திப்பதற்காக நான் இலங்கைக்குச் செல்லவில்லை. பல புலனாய்வு நிறுவனங்களின் பட்டியலில் மேல் இடத்தில் நான் இருந்ததால் பயணம் செய்வது ஆபத்தானது என உணர்ந்தேன். இந்நிலையில் நான் ஆயுதம் வாங்குவதற்காக பயணம் செய்து ஆபத்துக்குள்ளாவதை தான் விரும்பவில்லை என பிரபாகரன் கூறினார். சில காலத்திற்கு ஓய்வெடுக்குமாறும் அங்கு வருவதற்கும் தன்னை சந்திப்பதற்கும் முயற்சிக்குமாறும் அவர் கூறினார்.

இதன்பின் நான் எனது கடமைகளை விடுவிப்பதைத் தவிர எனக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எனக்குப் பதிலாக நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்தும் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள் எனவும் பிரபாகரன் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை.

கேள்வி: இது எப்போது நடந்தது. உங்களுக்கும் பிரபாரகரனுக்கும் இடையில் பிரிவொன்று ஏற்பட்டதா? அதன்பின் என்ன நடந்தது?
பதில்: இது 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து நான் இயக்கத்தின் அன்றாட செயற்பாடுகளிலிருந்து நான் விலகியிருந்தேன். ஆனால் நான் ஒருபோதும் முறையாக இயக்கத்திலிருந்து விலகவில்லை. அது பென்ஷன் இல்லாமல் ஓய்வெடுப்பது போலத்தான்.

அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. அவரிடமிருந்து பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். அத்துடன் எனக்கு ஓர் மூத்த சகோதரன் போல. ஆனால் நடந்த விசயங்களால் நான் வருத்தமடைந்தேன். முன்புபோல் நான் அவரை அடிக்கடி தொடர்புகொள்ளவில்லை. நான் அதைச் செய்யவேண்டுமென அவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. நாம் இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் திசைத்திரும்பியிருந்தோம். ஆனால் ஆனால், ஒரு போதும் பிளவு ஏற்படவில்லை. எமக்கிடையிலான பரஸ்பர அன்புணர்வு நீடித்தது. 

கேள்வி: அப்போது உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களில் ஒரு பகுதியாக,  பிரபாகரனுக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது எனவும் நீங்கள் துரோகி என அவரால் கருதப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பதில்: அது எனக்குத் தெரியும். நான் 2003 ஆம் ஆண்டு புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருந்த பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலிகளின் புதிய தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு என்னைப் பற்றியயோ கடந்த காலத்தைப் பற்றியோ தெரிந்திருக்கவில்லை. எனவே எனக்கெதிராக எதுவும் சொல்லப்பட்டிருக்கலாம்.

உண்மை என்னவென்றால், நாம் விலகியிருந்தாலும் எம் இருவருக்கிடையிலும் மிகுந்த அன்பும் பாசமும் இருந்தது. ஒரு சம்பவம் காரணமாக பிரபாகரன் எழுத்து மூலம் என் மீதான அன்பை வெளிப்படுத்தியிருந்தார். வெளிநாட்டிலிருந்த புலிகளின் வான்படைப் பிரிவு செயற்பாட்டாளர் ஒருவருக்கு சில விடயங்களுக்காக என்னுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டியிருந்தது. அதற்கு தலைவர் அனுமதியளிப்பாரா என்று அவருக்குத் தெரியாமலிருந்தது. எனவே அவரின் முன்னாள் நண்பர் கே.பியுடன் தொடர்புகொள்ளலாமா என்று கேட்டு அவருக்கு ஒரே மெசேஜ் அனுப்பினார். பிரபாகரன் தனது எழுத்து மூல பதிலில், அதை செய்யலாம் என்று கூறியதுடன் கே.பி. தனது முன்னாள் நண்பன் அல்லவெனவும் ‘இன்றும் என்றும் நல்ல விசுவாசமான நண்பன்’ எனவும் வலியுறுத்தியிருந்தார்.

கேள்வி: எனவே நீங்கள் புலிகள் அமைப்பிலிருந்து ஓய்வுபெற்றீர்கள். அப்போது உங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான எல்லா விசயங்களும் முடிந்துவிட்டது என எண்ணினீர்களா?
பதில்:  அவ்வேளையில் நான் அப்படித்தான் நினைத்தேன். நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி எனது மனைவியிடம் சொன்னது நினைவிலுள்ளது. இப்போது அவளுடனும் எமது மகளுடனும் அதிக காலத்தைச் செலவிட முடியும் என்று கூறினேன். ஆனால் அவள் “உங்களால் உண்மையாக அப்படி செய்ய முடியுமா? மீண்டும் வி.பி. (வேலுப்பிள்ளை பிரபாகரன்) உங்களை அழைத்தால் மீண்டும் திரும்பிச் செல்லாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டாள்.

எனக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான பிணைப்பை எனது மனைவி உணர்ந்திருந்தாள். அவள் பிரபாகரனின் மனைவி மதிவதனியுடன் தொலைபேசியில் பேசுவாள். அவர்கள் இருவருக்கும் தமது கணவர்களுக்கிடையிலான நெருங்கிய நட்பு தெரிந்திருந்தது.

கேள்வி: நீங்கள் மீண்டும் திரும்பிய விடயம் எப்படி நடந்தது? எப்படி ஏன் இந்த இயக்கத்தில் நீங்கள் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் கடைசி நாட்களில் உங்கள் பாத்திரம் என்ன?
பதில்: அது மற்றொரு நீண்ட கதை.

(அடுத்த வாரம் தொடரும்)

DBS Jeyaraj 

(தமிழில்: ஆர்.சேதுராமன்)

நன்றி தமிழ்மிரர்

கொழும்பில் தனியார் ஊடக நிறுவனம் மீது முகமூடி கும்பல் கடும் தாக்குதல் – செய்தியறை தீக்கிரை மூவர் காயம்

siyatha.jpgகொழும்பு02  ஹுணுப்பிட்டிய லேக் வீதியிலுள்ள வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனத்தின் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை முகம்மூடி அணிந்த இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்நிறுவனத்தின் செய்தி அறையும் அடித்து உடைத்தும் எரித்தும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் இருவரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் குண்டர்கள் கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருப்பதாக அந்த நிறுவன பணியாளர்கள் தெரிவித்தனர். “வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் வெற்றி எவ்.எம்., வெற்றி ரி.வி., சியத்த எவ்.எம்., சியத்த ரி.வி., ரியல் ரேடியோ ஆகிய 5 ஊடகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வெற்றி ரி.வி.யைத் தவிர ஏனைய 4 ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றுக்கான செய்தி அறை மீதே நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் ஊடக நிறுவனப் பணியாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பிரகாரம் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது நேற்று அதிகாலை 1.20 மணியளவில் இரு வாகனங்களில் அந்த ஊடக நிறுவனத்துக்குச் சென்ற இனந்தெரியாத கும்பலொன்று நுழைவாயிலருகில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரிடம் செய்தி அறை எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளது. வந்தவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாத வகையில் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கட்டியிருந்ததுடன், கைகளில் துப்பாக்கிகளும் இரும்புக் கம்பிகளும் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

எனினும் பாதுகாப்புக் கடமையில் இருந்தவர் செய்தி அறையைக் காட்டாமல் யார் என்று வினவிக் கொண்டிருக்கவே அவரை அந்தக் குழுவினர் தாக்கியுள்ளனர். அதில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் சத்தமிட்ட போது குண்டர்கள் நுழைவாயில் கதவைப் பலவந்தமாகத் திறந்துகொண்டு உள்ளே புகுந்துள்ளனர். அங்கு செய்தி அறை அடங்கலான ஒரு கட்டிடத்தொகுதியும் எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான இன்னுமொரு கட்டிடத் தொகுதியும் இருந்ததால் குண்டர்கள் இரண்டு பக்கமும் சென்றுள்ளனர். இதன்போது எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத்தொகுதியின் கீழ்ப்பகுதி கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் சத்தத்தையும் கண்ணாடி உடைக்கப்படும் சத்தத்தையும் கேட்டு செய்தி அறைக்குள் இருந்த ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்துள்ளார். இதன்போது வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவைச் சேர்ந்த இருவர் மட்டுமே செய்தி அறைக்குள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் வெளியில் வந்த போது கதவின் இரு மருங்கிலும் பதுங்கியிருந்த குண்டர்களில் இருவர் அவரைப் பிடித்து செய்தி அறை எதுவென்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் செய்தி அறைக்குள் இருந்த மற்றையவர் வெளியில் விபரீதம் நடைபெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டு கதவை மூட முயற்சித்திருக்கிறார். இதன்போது வெளியில் இருந்தவர் உள்ளே வர கதவைத் திறக்குமாறு தட்டியதை அடுத்து உள்ளிருந்தவர் கதவைத் திறக்க, வெளியில் சென்றவருடன் சேர்ந்து குண்டர்களும் செய்தி அறைக்குள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு ஒருவரைத் துப்பாக்கிப் பிடியாலும் மற்றவரை இரும்புக் கம்பியாலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது செய்தி அறைக்குள் இருந்த கணினிகள், பிரின்டர்கள், போட்டோ கொப்பி மெஷின், ஸ்கேனர் என அனைத்தையும் இரும்புக் கம்பிகளால் குத்தியும் அடித்தும் உடைத்து நொருக்கியுள்ளனர். இதேபோல் செய்தி அறைக் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கலன்களில் கொண்டு வந்திருந்த பெற்றோலை செய்தி அறை முழுவதும் தெளித்துள்ள குண்டர்கள் பின்னர் பெற்றோல் குண்டுகள் சிலவற்றை பற்ற வைத்து செய்தி அறைக்குள் வீசி விட்டுத் தப்பிச் செல்லமுயற்சித்துள்ளனர். எனினும் தீ அதிகமாக பரவவே, அங்கிருந்த வெற்றி எவ்.எம்.செய்திப் பிரிவுப் பணியாளர்கள் இருவரையும் வெளியில் இழுத்து வந்து விட்டு விட்டு வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

செய்தி அறை அடித்து உடைக்கப்படும் சத்தம் கேட்டு எவ்.எம்.நிகழ்ச்சிகள் ஒலிபரப்புக்கான கட்டிடத் தொகுதியில் இருந்த பணியாளர் அந்தக் கட்டிடத்தின் மின் விநியோகம் முழுவதையும் நிறுத்தியுள்ளார்.

செய்தி அறை கட்டிடத்தொகுதிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பற்றி 119 பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தொலைபேசி மூலம் உடனடியாக அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் சுமார் 45 நிமிடம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்ததாக வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை சுமார் 6 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் செய்தி அறை மட்டுமே எரிந்து நாசமாகியிருந்தாலும் அதற்கு மேல் மாடிகளில் இருந்த பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் ரி.வி., ஸ்ரூடியோ என்பன புகையினால் பாதிப்படைந்திருப்பதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வெற்றி எவ்.எம். செய்திப் பிரிவின் உதவி செய்தி ஆசிரியர் கே.ரஜினிகாந்த், ஊடகவியலாளர் லெனின் ராஜ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகிய மூவரே காயமடைந்துள்ளனர்.இதில் லெனின் ராஜ் துப்பாக்கியினால் தாக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது அவர் கைகளைக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சித்ததில் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்த் மீது இரும்புக் கம்பியைக் கொண்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு விட்டதாகவும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மட்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடக நிறுவன பணியாளர்கள் கூறினர்.இதேநேரம், இச்சம்பவம் தொடர்பில் கொம்பனி வீதி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பி.ஜயகொடி தெரிவித்தார். அத்துடன், சம்பவத்தை அடுத்து வொய்ஸ் ஒவ் ஏசியா நெற்வேர்க் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நன்றி:தினக்குரல்

கலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்

cover-03-1.jpgஇலங்கை மத்திய மலைநாட்டில் தலைநகர் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள சிற்றூரில் பிறந்து வாழ்ந்துவரும் கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் என் நெஞ்சங் கவர்ந்த எழுத்தாளர். உலக அளவில் நினைவுகூரப்பட வேண்டிய செய்திகளை இவர் இணையதளங்களில் எழுதியமை கண்டு வியந்துபோனேன். இணையத்தால் இணைந்தவர்கள் நாங்கள்.

தமிழில் இதுவரை 170 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1960 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் பீர்மொகமது, சைதா உம்மா ஆகியோரின் புதல்வராகப் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டம் பெற்றவர். மேலும்,  ஊடகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, கல்லூரி முதல்வராகவும், பின்பு மத்திய மாகாண கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றி 45 வயதிலேயே ஓய்வுபெற்றவர். இவர், தற்போது முழுநேர ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும், சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பதறிந்து மகிழ்கிறேன்.

1970களில் சிறுகதை மூலம் இலக்கியத்துறையில் நுழைந்த இவரின் முதலாவது நூல் 1979 ஆம் ஆண்டில் “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. அன்றிலிருந்து இன்றுவரை சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான அரசறிவியல் நூல்கள், தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், க.பொ.த.சாதாரண தரம்; மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், ஆய்வு நூல்கள்….. என பலதுறை சார்ந்த 170 இற்கும் அதிகமான நூல்களைத் தமிழில் எழுதி, வெளியிட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தாமரை, தீபம், கணையாழி, கலைமகள் போன்ற இலக்கிய ஏடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவரின் ஆக்கங்கள் பல்கலைக்கழக மட்டத்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த பத்தாண்டு காலமாக இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை ஈழத்து முன்ணணித் தேசிய ஏடுகளுள் ஒன்றான ‘ஞாயிறு தினக்குரலில்’ எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து இதுவரை 15 தொகுதிகளாக நூலுருப்படுத்தியுள்ளார். தேசிய, பன்னாட்டு நிலையில் பலவற்றை ஆவணப்படுத்திவரும் இவரின் இப்பணி ஈழத்து இலக்கியப் பயணத்தின் இமயமாகத் திகழ்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி மூல நூல்களை வெளியிடுவதில் வெளியீட்டுப் பணியகங்கள் குறைவு என்பதை உணர்ந்து ‘சிந்தனைவட்டம்’  எனும் பெயரில் பதிப்பகம் ஒன்றை உருவாக்கி இதுவரை 320 இற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுப் பணியகத்தினூடாக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்றப்பட்ட கணித,  அறிவியல் ஆசிரியையான எம். எச். எஸ். மஸீதாவின் அன்புக் கணவரான இவருக்கு சஜீர் அகமது,  பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்.

‘சர்வதேச நினைவு தினங்கள்’ எனும் தலைப்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய, சர்வதேச அச்சு ஊடகங்களிலும், இணைய ஊடகங்களிலும் இவர் எழுதியுள்ளார். அவற்றைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக நூலுருப்படுத்தி வெளியிடும் இம் முயற்சி இவரின் தமிழ் எழுத்துப் பணியின் மற்றுமொரு பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றது. இவரின் முயற்சிகள் வெற்றிபெற மனதார வாழ்த்துகின்றேன்.

http://muelangovan.blogspot.com/

P.M.PUNIYAMEEN
P.Box 01
POLGOLLA
Srilanka.

cover-01.jpg

cover-02.jpg

cover-03.jpg

cover-04.jpg

கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான் : ஐ.நாவிடம் புகார் கொடுக்கும் அதிமுக – ஜெயலலிதா.

jaya.jpgமுதல்வர் கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்ஸ அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால்,  இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஸவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன் நேர்காணல்

க.முகிலன் வியாழன், 24 ஜூன் 2010 02:38 (கோபால்ஜி, மாவோயிஸ்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர். அல்பா ஷா, இலண்டன் பல்கலைக் கழகத்தின் கோல்டு ஸ்மித் கல்லூரியில் மானுடவியல் பிரிவில் பணியாற்றுபவர். அல்பாஷா ஜார்கண்டில் காட்டில் கோபால்ஜியை சந்தித்து உரையாடினர். அந்த நேர்காணல் க.முகிலனின் தமிழாக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மூலம் : எக்கனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, மே 8, 2010).

அல்பாஷா: உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?

கோபால்ஜி: சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் – இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்யூனிஸ்ட கட்சியின் தலைமையின் கீழ் இப்புரட்சி நடக்கும்.

பெருமளவில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்பட நீண்டகாலம் தேவைப்படும். முதலாளியத்திற்கு நிலப்பிரபுத்துவ சமூகத்தை வெல்வதற்கு 400 ஆண்டுகளாயிற்று. அப்படியிருந்தும், பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்காக முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தனர். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் உள்ள பல நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையிலான உழைக்கும் மக்களின் புரட்சிகளைத் தடுப்பதற்காக முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, ‘முதலாளியத்துக்கு மாற்று இல்லை’ என்கிற முதலாளியக் கூற்று அதன் மதிப்பை இழந்துவிட்டது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் பல அறிஞர்களும், மக்களில் பலரும் காரல்மார்க்சு எழுதிய மூலதனத்தைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். மார்க்சியத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதையும், சோசலிசமும் கம்யூனிசமும் இன்றியமையாத தேவைகள் என்பதையும் அண்மைக்கால நிகழ்வுகள் எண்பித்துள்ளன. சோசலிசத்தாலும் கம்யூனிசத்தாலும் மட்டுமே வறுமையை, பட்டினியை, சமத்துவமின்மையை ஒழிக்க முடியும். மேலும் நாம் வாழும் இப்புவிக்குப் பேராபத்தாக உள்ள தட்பவெப்பச் சீர்கேடு முதலான சிக்கல்களைத் தீர்க்க முடியும்.

அல்பாஷா: சீனாவில் நீண்டகால மக்கள் போர் நடந்தபோது இருந்த நிலைமைக்கும் இந்தியாவில் உள்ள நிலைமைக்கும் இடையே உள்ள முதன்மையான வேறுபாடுகள் எவை?

கோபால்ஜி: நாங்கள் உதவி பெறுவதற்காக உலக அளவில் ஒரு சோசலிச நாடோ அல்லது தளமோ இல்லாத நிலையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்குப்பின், பல்வேறு நாடுகளில் எழுந்த தேச விடுதலைப் போராட்டங்கள், ஏகாதிபத்தியவாதிகளை, நேரடியாக ஆளுகின்ற பழைய காலனிய ஆதிக்க முறையைக் கைவிட்டு, புதிய காலனிய முறைகளில் புதிய சுரண்டல் வடிவங்களை மேற்கொள்ளச் செய்தன. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதிகாரங்கள் அனைத்தும், மய்ய அரசில் குவிக்கப்பட்டுள்ளன. இராணுவ வலிமை மிக்க நாடாக இப்போது இந்தியா இருக்கிறது. அதன் அதிகாரமும் படைவலிமையும் இந்தியாவின் எந்தவொரு மூலை முடுக்கையும் சென்றடையக் கூடியதாக உள்ளன. போக்குவரத்தும் தகவல் தொடர்பும் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

தங்களுக்கென தனியாகப் படை வைத்துக் கொண்டிருந்த இனக்குழுத் தலைவர்கள் சீனாவின் கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்தியாவில் அது போன்ற நிலைமை இல்லை. ஆனால் அருவருப்பான, மீற முடியாத பார்ப்பன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பு இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. அதனால் சமூக – பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தளங்களில் மிகவும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

‘சனநாயகம்’ என்று சொல்லப்படுகின்ற கட்டமைப்பில், இந்திய ஆளும் வர்க்கங்கள் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நகர்ப்புற குட்டி முதலாளிய வர்க்கத்தினரும், பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் வர்க்கத்தினரும் உள்ளனர். இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இவற்றின் வளர்ச்சியில் வேறுபாடுகள் இருக்கின்றன. பழைமை வாதச் செயல்களைப் போற்றுவதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இப் பழைமைவாதப் போக்குகள் உழைக்கும் மக்கள் மீது இன்றளவும் குறிப்பிடத்தக்க அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்பழைமை வாதிகள் இந்தப் பிற்போக்கான ஆட்சியை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

படையைக் கட்டியமைத்தல், தளப்பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன. சீனாவில் அவர்கள் முன்பே தளப்பகுதியும் படையும் பெற்றிருந்தனர். கம்யூனிஸ்டு கட்சி உருவாவதற்கு முன்பே, கோமின்டாங் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபத்துவத்துக்கும் எதிராக ஒரு பூர்ஷ்வா சனநாயகப் புரட்சியை நடத்தியது. இந்தியாவில் நாங்கள்செயல்படத் தொடங்கியபோது எங்களுக்கு தளப்பகுதியோ, படையோ இல்லை. சிறு எண்ணிக்கையில் போராடத் தொடங்கினோம். இன்று மக்கள் விடுதலை கொரில்லாப் படை யை உருவாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். எனவே, எங்கள் போராட்டம் நீண்டதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும்.

மேலும், இங்கு பெரிய சமவெளிப் பகுதிகள் உள்ளன. மலைகளிலும் காடுகளிலும் மேற்கொள்ளப்படும் போராட்ட உத்திகளிலிருந்து வேறுபட்ட நடைமுறைகளை சமவெளிகளில் கையாள வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் செயல்படுவதும், உழைப்பாளிகளை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதும் நம் நாட்டில் பெரிய பணியாக உள்ளது. நான்கு வர்க்கப் பிரிவினரையும் ஆற்றல் மிக்க அணியாக ஒருங்கிணைப்பதுடன், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், மற்றும் பல்வேறு தேசிய இனத்தவர் ஆகியோரையும் அணிதிரட்ட நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்திச் செயல்பட்டு வருகின்றோம்.

அல்பாஷா: உலகில் மிகப்பெரிய சனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று பெருமையுடன் கூறப்படுகிறது. நீங்கள் திட்டவட்டமாக எப்படி மறுக்கிறீர்கள்?

கோபால்ஜி: இந்தியா ஒரு முதலாளித்துவ சனநாயக நாடாகக்கூட இல்லை. உண்மையில் இது அரைக்காலனிய, அரைநிலப் பிரபுத்துவ அரசாக உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு சனநாயக உரிமைகள் இல்லை. 1947இல் ஆட்சி அதிகாரம், பிரிட்டிஷாரிடமிருந்து, காலனிய ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பெரிய பண்ணையார்களுக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆட்சி அதிகார மாற்றத்தால், வெகு மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. புதிய அரசு நிலச்சீர்திருத்தம் பற்றிப் பேசியது. ஆனால் உண்மையில் உழுதவனுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கவில்லை. கல்வி பெறுவதில், வேலை வாய்ப்பில், நலவாழ்வு வசதிகளைப் பெறுவதில், மக்களுக்கு சமமான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில் ஊழல் என்பது வாழ்க்கை நெறியாகிவிட்டது. தற்போது பல இலட்சம் மக்கள் பட்டினியாலும் நோய்களாலும் இந்தியாவில் மடிந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கும், அணிதிரள்வதற்கும் அரசு தடை போடுகிறது. ஆனால் அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை என்று பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பெரும்பாலான சட்டங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. நேற்றுவரை காலனி ஆட்சிக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த நிர்வாகத்துறை ஒரே இரவில், சனநாயகத் தன்மை கொண்டதாக, மக்கள் நலம் நாடுவதாக, நாட்டுப்பற்று உடையதாக மாறிவிடுமோ?

ஆகவே, 1947இல் பெற்ற சுதந்தரம் வெகு மக்களுக்கானதன்று. மேலும், இன்று இந்திய நாடாளுமன்றம் உலக வங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் கட்டளைகளுக்குச் கீழ்ப்படிந்து நடக்கிறது. உலக ஏகாதிபத்தியத்திற்குத் தலைவனாக உள்ள அமெரிக்காவின் ஆணைகளைத் தலைமேற்கொண்டு செயல்படுத்துகிறது.

இந்திய ஆளும் வர்க்கம், இந்தியாவை ஒரு கூட்டாட்சி என்றும் மதச்சார்பற்ற குடியரசு என்றும் சொல்கிறது. ஆனால் இது எந்த அளவுக்குக் கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இருக்கிறது? காஷ்மீர் மக்களிடம் தனிவாக்கெடுப்பு நடத்தி தனி காஷ்மீர் நாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். தனிநாடு கோரி வடகிழக்குப் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை இந்திய அரசு எவ்வளவு கொடுமையாக ஒடுக்கி வருகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நடுவண் அரசுக்கும் – மாநிலங்களுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து பாருங்கள். மாநில அரசுகள் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். உண்மையில் தில்லியில் தான் அதிகாரம் அனைத்தும் குவிக்கப்பட்டுள்ளன. மய்ய – மாநில உறவு என்பது நிலப்பிரபத்துவ காலத்து உறவாகவே உள்ளது. தன் அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என்பதில் மய்ய அரசு எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. மூலதனம், பெரிய தரகு முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது; இதற்கு ஏகாதிபத்தியம் பின்புலமாக உள்ளது; இந்தச் சூழலில் நடுவண் அரசு தன்னுடைய அதிகாரங்களை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? மதச்சார்பற்ற நாடு என்று கூறப்படுவதைப் பொறுத்த அளவில், கடந்த பல ஆண்டுகளாக அரசே சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவித்து உறுதுணையாக விளங்கி வருவதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தியா ஒரு சனநாயக, கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற குடியரசு என்று கூறப்படுவது ஒரு கேலிக் கூத்தேயாகும்.

அல்பாஷா: அப்படியாயின், சனநாயகம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

கோபால்ஜி: எங்களது உடனடியான குறிக்கோள், ஒரு புதிய சனநாயகப் புரட்சியாகும். புதிய சனநாயக இந்தியாவில், அதிகாரம் என்பது நான்கு வர்க்கங்களில் கூட்டணியிடம் இருக்கும். பாட்டாளிகள், விவசாயிகள், குட்டி முதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டணியாக அது இருக்கும். இதில் எந்தவொரு தனிவர்க்கமும் அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. புதிய அரசு விவசாயிகளை நிலப்பிரபுக்களின் பிடியிலிருந்து விடுதலை செய்யும். தேசிய மூலதனத்தைத் தரகு மூலதனத்திலிருந்து விடுவிக்கும். தரகு முதலாளிகளின் உடைமைகள் பறி முதல் செய்யப்படும். அயல்நாட்டுக் கடன்கள் இரத்து செய்யப்படும். பண்ணையார்களிடமிருந்து உபரி நிலம் கையகப்படுத்தப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் பிரித்தணிக்கப்படும். சமூகம், அரசியல், பண்பாடு ஆகிய தளங்களில் ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்து வத்தையும் ஒழிக்கும்.

புதிய சனநாயகப் புரட்சி உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக இந்தியாவை உருவாக்கும். அதில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னுரிமையும், பிரிந்து போகும் உரிமையும் அங்கீகரிக்கப்படும் புதிய சனநாயக அரசு எந்தவொரு மதத்தையும் ஆதரிக்காது. மதம் தனி மனிதரின் சொந்த விசயமாக இருக்கும். வேலை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் சமவாய்ப்பு இருக்கும் என்பதுடன் ஒவ்வொருவரும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படும்.

அல்பா ஷா: அரசின் வளர்ச்சித் திட்டங்களை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்?

கோபால்ஜி: பொது மக்களின் வளர்ச்சி பற்றி இந்திய அரசு குறைந்த அளவிற்குக்கூட அக்கறை இல்லாமல் இருக்கிறது. அரசின் கணக்குப்படி, 77% மக்கள் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதன்படி, 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். 62 ஆண்டுக்கால சுதந்தரத்துக்குப் பின் இத்தகைய கேவலமான நிலை! ஆனால் அதே சமயம் சில இந்தியர்கள் கோடீசுவரர்களாகி வருகின்றனர். இந்திய அரசு இதுபற்றிப் பெருமிதம் கொள்கிறது.

பங்குச்சந்தைக் குறியீட்டு எண், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தக் கூடாது. சில பணக்காரர்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்று அரசு கருதுகிறது. சாதாரண மக்களின் அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்பதில் அரசு அக்கறையின்றி இருக்கிறது. உலகவங்கி, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் அறிவுரைகளின்படி, தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. நம்முடைய இயற்கை வளங்களை, நிலங்களை, காடுகளை, இந்தியப் பெருமுதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய எசமானர்களுக்கும் விற்றிட முயல்கின்றனர்.

தற்செயல் நிகழ்வாக, மாவோயிஸ்டுகள் வலிமையுடன் உள்ள ஜார்கண்ட், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இயற்கை வளங்கள் மிகுந்து உள்ளன. இந்தியாவின் இயற்கை வளங்களில் 80% இப்பகுதியில் உள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கி, இப்பகுதியிலிருந்து விரட்டாத வரையில், நிலத்தையும் இயற்கை வளத்தையும் அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களுக்கு வெளிப்படையாக விற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அல்பா ஷா: கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று கூறுகிறீர்களா?

கோபால்ஜி: அப்படியில்லை. சுரங்கம் தோண்டுவது அல்லது ஆலைகள், தொழிற்சாலைகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நம்முடைய இயற்கை வளங்களும், தாயக நிலமும் இந்தியப் பெருமுதலாளிகளாலும், அவர்களின் ஏகாதிபத்திய எசமானர்களாலும், அவர்களுடைய சொந்த இலாபத்திற்காகச் சூறையாடப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். மக்களின் மேம்பாட்டிற்காக ஆலைகளையும் சுரங்கங்களையும் அமைக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவதில்லை. இப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று நெருக்குதல் தரப்படுகிறது. அவ்வாறு வெளியேறாவிடில், அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். நகரங்களில் இம்மக்கள் கூலியாட்களாக வாழும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முன்பு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டனர். அதைப் போலவே இப்போதும் நிகழும். பொக்காரோவிலும் மற்ற இடங்களிலும் பெருந்திட்டங்களைச் செயல்படுத்திய போது, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர்க்கு, நிலமோ, வீடோ, அங்குக் கட்டப்பட்ட ஆலையில் வேலையோ வழங்கப்படவில்லை. பல ஆயிரக் கணக்கில் பழங்குடியினர் வெளியேற்றப்பட்டனர்.

எனவே, மீண்டும் அதுபோல் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? எனவே இயற்கை வளங்கள் கொள்ளை போவதையும், சூறையாடப்படுவதையும் எதிர்த்திட நாங்கள் மக்களை அணிதிரட்டுகின்றோம். எங்களுடைய நிலமும், இயற்கை வளங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் இந்தியப் பெரு முதலாளிகளாலும் சூறையாடப்படுவதை அனுமதிக்க மாட்டோம். மாவோயிஸ்டு அரசில், ஆலைகளை, சுரங்கங்களை அமைப்பதற்குமுன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலில் சுரங்கங்களும் ஆலைகளும் நாட்டுடைமையாக்கப்படும். நாட்டின் நலனுக்காக அவை இயங்கும். முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக அவை செயல்படா. இரண்டாவது, பொதுவாகப் பயிரிடப்படும் நிலங்களைச் சுரங்கம் வெட்டுவதற்காகவோ, பிறவற்றுக்காகவோ எடுக்கக் கூடாது. மூன்றாவதாக, அவ்வாறு நிலங்களை எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளபோது, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்ததற்கு உரிய இழப்பீடும், வேலையும், வீடும், பயிரிடுவதற்கு சிறுபகுதி நிலமும் அளிக்கப்பட வேண்டும். புதிய சனநாயக அரசு இடம் பெயர்ந்த மக்களின் நலனுக்கு முழுப் பொறுப்பேற்றுச் செயல்படும்.

நான்காவதாக, இச்சுரங்கங்களும் ஆலைகளும் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையில் அமைக்கப்படும். அய்ந்தாவதாக, இத்திட்டங்களை அமைப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒப்புதல் பெறப்படும். சுரங்கங்களையும் ஆலைகளையும் நிர்வாகம் செய்வதில் அம்மக்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும். இந்தியாவில் புதிய சனநாயக அரசு அமையும் போது, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் அரசு செயல்படும்.

அல்பா ஷா: ஜார்கண்ட் பகுதியில் உங்கள் கட்சி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளின் திட்டவட்டமான சாதனைகள் எவை?

கோபால்ஜி: உழைக்கும் மக்களும், நிலமற்ற தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும் இந்தியாவில் ஓர் ஆற்றல் வாய்ந்த அரசியல், இராணுவ சக்தியாக உருவாகியுள்ளனர். இதுவே எமது முதலாவதும் முதன்மையானதுமான சாதனையாகும். நாங்கள் போராடும் பகுதிகளில் நிலப்பிரபுத்துவ அதிகாரம் என்பது பெரும்பகுதி தகர்க்கப்பட்டுவிட்டது. இப் பகுதியில் போராடும் மக்கள் தமக்கெனத் தனியாக கொரில்லாப் படையை அமைத்து உள்ளனர்.

காலங்காலமாக இழிவாக நடத்தப்பட்டு வந்த தலித்துகளும், பழங்குடியினரும் இப்போது சமூகத்தில் உரிய இடமும், மதிப்பும் பெற்றுள்ளனர். இது எமது இரண்டாவது சாதனை. பெண்களை, தலித்துகளை, பழங்குடியினரை இழிவாக நடத்தும் போக்குகளும், காட்டுப்பகுதிகளில் மேல்சாதியினரும் அயலாரும் செலுத்தி வந்த ஆதிக்கமும் வேகமாக மாறத்தெடங்கி உள்ளன. ஊழல் மலிந்த, கொடிய வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காடுகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மூன்றாவது சாதனை

யாகும். வனத்துறையின் கீழ்நிலை ஊழியர்கள்கூட கடுமையான ஒடுக்கு முறைகளை ஏவினர். ஆனால் இவர்கள் மாஃபியா கும்பலின், பண்ணையார்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இப்போது இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து காடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மக்கள் காடுகளில் சுதந்தரமாக நடமாடி, தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். காடுகள் அழிக்கப்படுவதை நாங்கள் தடுத்து வருகிறோம். நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டம் எமது நான்காவது சாதனையாகும். எங்கள் போராட்டப் பகுதிகளில் மக்கள் சனநாயக உரிமைகளைத் துய்க்கின்றனர். பண்ணையார்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பெரும்பாலான இடங்களில் பண்ணையார்களை கிராமங்களை விட்டு விரட்டியுள்ளோம். பல இடங்களில் நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். நிலத்தை இதற்கு முன் உழுது கொண்டிருந்த நிலமற்றவர்களுக்கும், ஏழை உழவர்களுக்கும் இந்நிலங்களைப் பிரித்து அளித்துள்ளோம்.

ஜார்கண்டிலும் பீகாரிலும் விவசாயக் கூலி மிகவும் குறைவாக இருந்தது. காடுகளில் டெண்டு இலைகளையும் பிற பொருள்களையும் பொறுக்கி எடுத்து வருவதற்கான கூலி மிகவும் குறைவாக இருந்தது. எனவே அதிகக் கூலி கேட்டுப் போராடுமாறு செய்தோம். எனவே தற்போது முன்னைவிட அதிகக் கூலி பெறுகின்றனர். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் திருட்டையும் வழிப்பறியையும் ஒழித்து விட்டோம். அத்துடன், அரசோ அல்லது பெரிய ஒப்பந்தக்காரர்களோ குளம், ஆற்றுப்படுகை, கடைவீதி, தோப்புகள் முதலானவற்றை ஏலம் விடும் முறைக்கு முடிவுகட்டி விட்டோம். எனவே இவற்றை மக்கள் தம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எங்கள் செல்வாக்கின் கீழ் உள்ள பகுதியில் வகுப்பு மோதல் இல்லை. சங்பரிவாரக் குண்டர்கள் எம் பகுதியில் வகுப்பு மோதலை உண்டாக்கத் துணியமாட்டார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் அவ்வாறு முயன்றபோது, ஒரிசாவில் கந்தமாலில் சாமி இலட்சுமானந்தாவைத் தண்டித்தது போல் தண்டனைகள் தருகின்றோம். மற்றொரு முக்கியமான சாதனை என்னவெனில், முதலாளிகள் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருவதாகும். எனவே, நிலத்தையும் கனிம வளங்களையும் கொள்ளையடிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தவரையில், நடுவண் அரசில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாத வரையில் அவற்றை முழுமையாகச் செயல்படுத்த இயலாது. இருப்பினும், எங்கெல்லாம் புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் மக்களுக்கு நலம் பயக்கும் பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். வேளாண்மையிலும் வேளாண்மை சார்ந்த பிற தொழில்களிலும் கூட்டுறவு முறையை ஊக்குவித்துள்ளோம். மிகவும் பின் தங்கிய பகுதிகளின், கூலியில்லா விருப்ப உழைப்பைக் கொண்டு கிணறுகள், குளங்கள், கால்வாய்களை வெட்டி வருகின்றோம். பள்ளிகளை மருத்துவமனைகளைத் திறந்துள்ளோம். குறைந்த விலையில் மருந்துகளை அளிக்கின்றோம். புரட்சிகர மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்ட இடங்களில் இப்பணிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஆயினும் இவை தொடக்க நிலைப் பணிகளேயாகும்.

அல்பா ஷா: இந்திய அரசு மாவோயிஸ்டு கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கோபால்ஜி: பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்திருப்பதன் ஒரு பகுதியே ஆகும். தெற்காசியப் பகுதியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக இந்திய ஆளும்வர்க்கம் உருவாகி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிரானது என்று கருதப்படுகின்ற எந்த ஒரு இயக்கத்தையும் அல்லது எந்தவொரு எதிர்ப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்துகின்றனர்.

இந்தப் பின்னணியில் தான், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன எழுச்சிப் போராட்டங்களையும், உழைக்கும் மக்களின் போராட்டங்களையும் பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பு என்று முத்திரை குத்துவதன் மூலம், மாவோயிஸ்டு கட்சியின் மக்கள் திரன் அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களை – சனநாயக உணர்வு கொண்டோரை எளிதில் கைது செய்ய முடியும். அரசின், சனநாயகத்துக்கு விரோதமான செயல்களை, அதன் ஒடுக்கு முறைகளைக் கண்டித்துப் பேசுவோரைக் காவல்துறை கைது செய்வதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளர்கள், மக்கள் உரிமை இயக்கத்தினர் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் போக்கை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இரண்டாவதாக, எங்களுக்கும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. கண்மூடித்தனமாகக் கொல்வது, அப்பாவி மக்களைக் கொல்வது பொதுவாகப் பயங்கரவாதச் செயலில் நிகழும். அத்தகைய கொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். குறிப்பாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிரானவர்கள் நாங்கள். கிராமப்புறங்களில் அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எச்செயலையும் நாங்கள் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆயுதமேந்திய எங்கள் படையினர் அத்தகைய தவறைச் செய்யும் போது நாங்கள் எமக்குள் கடுமையாக விமர்சனம் செய்து கொள்கிறோம்.

எங்கள் தத்துவம் மார்க்சியம் – லெனினியம் – மாவோயிசம் என்பதாகும். இந்தியாவை உண்மையான கூட்டாட்சி உடைய, மதச்சார்பற்ற, சனநாயகக் குடியரசாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எங்களை பயங்கரவாதிகள் எனக் கூறுவது வஞ்சமும் தந்திரமும் கொண்ட சூழ்ச்சியாகும். இவ்வாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றலாம் என்று இந்திய அரசு நினைக்கிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுவதால், எங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில் நாங்கள் தொடக்கக் காலம் முதலே தலைமறைவு இயக்கமாகச் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொது மக்களைக் குறிப்பாக, போராட்டப் பகுதிகளில் உள்ள மக்களைத் துன்புறுத்துவதற்கு காவல்துறைக்கு அதிக அதிகாரம் தருவதற்காகவேயாகும்.

அதேசமயம் இதன் இன்னொரு பக்கத்தையும் பாருங்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்லாயிரம் இராணுவத்தினரும் துணை நிலைப்படையினரும் என்ன செய்வது கொண்டிருக்கிறார்கள்? போலி மோதலில் அன்றாடம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்று கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் போராடுகின்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையும் என்ன செய்கிறார்கள்? நூற்றுக் கணக்கில் இளைஞர்களைக் கொல்கிறார்கள். ஆளும் வர்க்கத்தினர் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 1984 கலவரத்தில் சீக்கியர்களைக் கொன்று குவித்தார்கள். அண்மையில் ஒரிசாவில் கிறித்தவர்களையும், 2002இல் குசராத்தில் இசுலாமியரையும் ஆயிரக்கணக்கில் கொன்றனர். இக் கலவரங்களில் எத்தனை இந்து வெறியர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர்? 1947 முதல் காவல் துறையும் இந்தத்துவ சக்திகளும் கைகோத்துச் செயல்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில் அய்ந்து இலட்சம் விவசாயிகள் அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-09ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாடக் கூலிகளாக மாறிவிட்டனர். பட்டினியால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். உட்சா பட்நாயக் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு ‘வறுமைக்குடியரசு’. இச்சாவுகளுக்குயார் பொறுப்பு? பட்டினியாலும் பசியாலும் பிற நோய்களாலும் பல்லாயிரம் மக்கள் மடிந்து கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் அவலத்தை – இன்னலை கேட்பதற்கு யாருமில்லை! இந்திய மக்கள் மீது அரசு வன்முறையைத் திணிக்கிறது.

அல்பாஷா: போர் தீவிரமடைந்து வருகிறது. அரசும் தன்னுடைய இராணுவத் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளது. இருதரப்பினருக்குமான போரில் ஏழை விவசாயிகள் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். உங்களிடம் ஏ.கே.47 துப்பாக்கிகளும் கண்ணி வெடிகளும் உள்ளன. அதனால் உங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். இச்சண்டையில் சாதாரண கிராமமக்கள் மடியப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கோபால்ஜி: மன்னிக்க வேண்டும். உங்கள் கேள்வியே தவறான முறையில் கேட்கப்பட்டுள்ளது. இப்போர் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் அன்று. இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான போர். மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி என்பது என்ன? மக்கள் விடுதலை கொரில்லாப்படை என்பது என்ன? இவை மக்கள் வலிமையாக அணி திரண்டுள்ள அமைப்புகளே தவிர வேறு அல்ல. ஆகவே மாவோயிஸ்டுக் கம்யூனிஸ்டு கட்சியை – மக்கள் விடுதலை கொரில்லாப்படையை அரசுப்படைகள் தாக்குவது மக்கள் அணிதிரள்வதையே ஒடுக்குவதாகும். மக்கள் இதை உணர்த்திருக்கிறார்கள். எனவே இத்தகையபோர் என்பது எங்கள் கட்சிக்கு எதிரான போர் அன்று. இது மக்களுக்கு எதிரான போரேயாகும்.

அல்பா ஷா: மாவோயிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேறல்ல; மக்கள் வேறல்ல; இரண்டும் ஒன்றே என்று நீங்கள் கூறுவதைப் போலவே இந்திய அரசும் மக்களும் வேறு வேறானவர் என்று நீங்கள் பிரித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, உங்கள் தாக்குதலின் இலக்காக இருக்கின்ற காவல்துறையினர் – உங்களுடைய ஆதரவாளர்கள், கொரில்லாப்படையினர் எந்தக்குடும்பங்களிலிருந்து வந்துள்ளனரோ, அதே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகின்ற காவல்துறையினரை நீங்கள் ஏன் கொல்லுகிறீர்கள்?:

கோபால்ஜி: பொதுவாகப் போலீசுக்காரர்கள் கிராமப்புற ஏழைக் குடும்பங்களிலிருந்து வருகிறார்கள் என்பதும், எங்கள் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதும் உண்மை. போலீசுக்காரர்கள் எங்கள் பகுதியைக் கைப்பற்ற வரும்போது, எம்மீதான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போது, மக்களையும் மக்கள் இயக்கத்தையும் ஒடுக்க முனையும் போது மட்டுமே எங்கள் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். சில எடுத்துக் காட்டுகளைக் கூற விரும்புகின்றேன்.

காவல்துறையிலும் இராணுவத்திலும் பல இடங்களில் பணியாற்றும் பலபேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் குடும்பத்தினரின் பிள்ளைகள். இவர்களுடைய குடும்பத்தினர் எங்கள் ஆதரவாளர்களாக இருக்கின்றனர். விழாக்காலங்களிலோ, வேறு விடுமுறைகளிலோ காவல்துறையிலும் இராணுத்திலும் பணியாற்றுபவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து தங்கும் போது அவர்களை நாங்கள் தாக்குவதில்லை. அப்படியான ஒரு நிகழ்ச்சி கூட நடந்ததில்லை. அடுத்து பொதுவாக மாவட்ட அளவில் இயங்கும் போலீசாரை நாங்கள் தாக்குவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களைத் தாக்க வரும் போதும், மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒடுக்கப்படும்போது மட்டுமே நாங்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்துகிறோம்.

போரில் எதிரி, நம் சொந்த வர்க்கத்தினரையே நம்மீது ஏவிவிடும் போது, அவர்கள் தாக்குதலுக்குள்ளாவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. காவல்துறையிலும் இராணுவத்திலும் பணியாற்றுவோருக்கு எங்கள் வேண்டுகோள் இதுதான். நீங்கள் எந்த அரசுக்காகப் போராடுகிறீர்களோ, அது உங்களுக்கான அரசு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஆளும் வர்க்கத்திற்காகச் சேவை செய்கிறீர்களோ அவர்கள் உங்கள் குடும்பங்களின் நலனுக்கு எதிரானவர்கள். எனவே, பிற்போக்குத்தனமான இராணுவத்திலிருந்தும் காவல்துறையிலிருந்தும் விலகி மக்கள் விடுதலை கொரில்லாப் படையில் சேருங்கள் என்பதே எங்கள் அழைப்பாகும்.

(சிந்தனையாளன் ஜூன் 2010 இதழில் வெளியானது) – நன்றி கீற்று

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் – ஜெயலலிதா பரிந்துரை

1jaya.jpgஇலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 18 அம்சத்திட்டம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னரே உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படவேண்டுமென்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் அகதிகளாக அநாதைகளாக அடிமைகளாக முகாம்களில் கட்டாயமாக அடைக்கப்பட்டு அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த வருடம் இலங்கையில் போர் முடிந்தவுடன் கனிமொழி உட்பட தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கை ஜனாதிபதியை சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு வந்தனர்.

இலங்கை ஜனாதிபதியும் 2009 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.ஆனால், இன்னமும் அதே நிலைமை தான் அங்கு நீடிக்கிறது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்க இந்தியாவிற்கு வருகை புரிந்துவிட்டுச்சென்றார்.இலங்கை ஜனாதிபதி வருகிறார் என்றவுடனேயே இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80,000 இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்ப இலங்கை ஜனாதிபதியை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென பிரதமருக்கு வழக்கம் போல கடிதம் எழுதினார் கருணாநிதி.உடனே இந்தியப் பிரதமரும் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை ஜனாதிபதி தன்னிடம் உறுதி அளித்ததாக கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

உண்மை நிலையோ தலைகீழாக உள்ளது.வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தமிழ்ப் பெயரில் இருந்த வீதிகளுக்கு சிங்களப் பெயர்கள் வைக்கப்படுவதாகவும் தமிழ் ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் இடப்படுவதாகவும் இதன் மூலம் அங்குள்ள நிலங்கள் எல்லாம் சிங்கள நிலங்கள் என்று திரித்துக்கூற முயற்சி நடப்பதாகவும் போரின்போது சிதைந்துபோன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றைக் கட்டித்தர நடவடிக்கையெடுக்காமல் புத்த விகாரைகள் புதிது புதிதாகக் கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் தமிழ்ப் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. 1,000 கோடி ரூபா மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபா நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்தளவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

2009 ஆம் ஆண்டு தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று தமிழர்களின் மறுவாழ்வு குறித்துக் கேட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படுமென்று உறுதியளித்தார் இலங்கை ஜனாதிபதி.

தற்போது, இந்தியப் பிரதமரிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் 47,000 தமிழர்கள் குடியமர்த்தப்படுவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி செயற்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர் தெரிவித்துள்ள திட்டங்கள்:

1. இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

2. மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்.

3. அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

4. அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

5. மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்.

6. கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

7. புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

8. பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

9. போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

10. போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்.

11. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்.

12. கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

13. போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்.

14. ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

15. பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

16. வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

17. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

18. பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Dinamani

ஜாகிர் நாயக்குக்கு விசா மறுப்பு

jakkir1.jpgஇந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.  இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்
BBC

இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

ship.jpgகாசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.  இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில். ”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.

திங்களன்று நடந்த, குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.  இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை. இருந்த போதிலும், இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளது. ஆனால், சிப்பாய்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான மரியாதையும் கிடையாது என்பதையே காட்டுவதாக அரபு லீக்கின் தலைமைச் செயலாளரான அமர் மௌசா கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஸ்டொட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இஸ்ரேலின் பல இடங்களிலும், சுமார் 600 பாலத்தீன ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆயுதங்களை வைத்திருந்ததாக இஸ்ரேலால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்களில் சில செயற்பாட்டாளர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த இராணுவத் தாக்குதல் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்று லண்டனுக்கான இஸ்ரேலிய தூதுவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

நன்றி: BBC

மலசல குழியில் மனித சடலங்கள்

body.jpgஇலங் கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமம் ஒன்றில் மலசல குழியொன்றிற்குள் இருந்து மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கணேசபுரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகளும். த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்துள்ளனர்.

கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து, ஆறு சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக் கண்டதாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய சிவஞானம் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சடலங்கள் ஆணா பெண்ணா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இவ்வாறாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்தப் பகுதியில் மக்கள் பீதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் இந்தக் குழியைத் தோண்டி சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலங்கள் இருக்கும் காணிப் பகுதி பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நன்றி BBC

கொழும்பு விழா: நடிகர்களுக்கு எச்சரிக்கை

iifa-awards-logo.jpgகொழும்பில் நடத்தப்படக்கூடிய IIFA விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்கு எதிராக தென்னிந்திய திரைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச இந்திய திரைப்பட கழகத்தின் விருது வழங்கும் விழாவை ‘இரத்தக் கறை படிந்துள்ள’ இலங்கையில் நடத்தக்கூடாது என்று தென்னிந்திய திரைத்துறை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமது கோரிக்கையை மீறி கொழும்பில் விழா நடக்கும் பட்சத்தில், அதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடாமல் புறக்கணிக்கப்போவதாக தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் வெள்ளியன்று சென்னையில் நடத்திய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானம் கூறுகிறது.

“இந்த விருது வழங்கும் விழாவை வேறு எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்தப்படுவதைத்தான் தாங்கள் எதிர்ப்பதாக” அத்தீர்மானம் கூறுகிறது. ஆனால் திட்டமிட்டபடி ஜூன் 3-5 தேதிகளில் கொழும்பில் இந்த விழா நடக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

BBC