“பாரதிய ஜனதா கட்சியின் இலங்கைப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,
இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் ஷா கூறினார் என வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை.
நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்டவேளையில் அருகில் இருந்தவர் களுக்குக் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும்.
பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை. தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.
ஆனால் அவர்களால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது. எவ்வாறெனின், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையைப் பரப்பி
அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள் இன்று வரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர்.அவர்களுக்காக முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும்,புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றன.
தேசியக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கட்சியை உருவாக்கினாலும் வாக்களிக்க வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. மக்கள் ஆதரிக்க வேண்டுமே ”என அவர் மேலும் தெரிவித்தார்.