2009

2009

முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதைகள் இனி மூடப்படாது

கொழும்பில் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் பாதைகள் இனிமேல் மூடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமுக மானதையடுத்தே இத்தகைய தடைகளை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூறிய பிரிகேடியர், இனிமேல் எம்.பிக்கள், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அதி முக்கியஸ்தர்கள் பயணம் செய்வதற்காக வீதிகள் மூடப்படமாட்டாதெனவும் தெரிவித்தார். பாராளுமன்றம் செல்லும் வீதி உட்பட அனைத்து வீதிகளிலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைக்கு ஒப்படைப்பு

gachandrasri.jpgவவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப் பட்டிருந்த சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் தற்காலிகமாக வவுனியா மாவட்ட பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டனர். சிலர் படிப்படியாக நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.

மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுவதால் பாடசாலைகளில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்கள் நிவாரணக் கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள 18 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகாக ஒப்படைக்கப் பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதற்கு ஹெல உறுமய கடும் எதிர்ப்பு

முன்னாள் இராணுவத்தளபதியான ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதையோ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதையோ ஹெல உறுமய ஆதரிக்கவில்லையெனவும் ஆனால் அவர் அரசியல் பிரவேசம் செய்து ஆசி வேண்டி எம்மிடம் வந்தால் அவருக்கு நல்ல ஆலோசனை வழங்கி பிரித்நூல் கட்டுவதற்கு தயங்கமாட்டோம் என்று ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான உடவத்தே நந்ததேரோ நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களான உடவத்தே நந்ததேரோ, அக்மீமன தயாரத்ன தேரோ, அளவ்வை நந்தாலோக்க தேரோ, அப்பரெக்க புன்னானந்த தேரோ, உடுவே தம்மாலோக்க தேரோ ஆகிய ஐந்து பேரும் செய்தியாளர் மாநாட்டை நடத்தினர் . ஜெனரல் சரத்பொன்சேகாவை தேசத்தை காத்த வீரராகவே நாம் மதிக்கின்றோம். அவரைத் தேசிய வீரராகவே நாட்டுமக்கள் மதிக்கின்றனர். ஆனால் அவர் சில தீய சக்திகளின் வலையில் சிக்கி தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளப்போகிறார். ஜெனரல் சரத்பொன்சேகா ஒரு சிறந்த இராணுவீரர். அவருக்கு யுத்த உபாயம் நன்கு தெரியும். ஆனால் அவரால் நாட்டை ஆளக்கூடிய தகைமை கிடையாது. நாட்டை ஆள்பவருக்கு பொறுமை மிக அவசியம். அந்தப் பொறுமை அவரிடம் கிடையாது. சர்வதேச சதிகாரர்களின் உள்ளூர் முகவர்களுடன் சேர்ந்து நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் நோக்கத்துடன் அரசியலுக்கு வரும் ஜெனரல் பொன்சேகாவை நாம் எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாது எனவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினர்.

மீள்குடியேறிய ஆசிரியர்கள் கிழக்கு பாடசாலைகளில் இணைப்பு

sri-lanka-teacher.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட 72 ஆசிரியர்கள் தற்காலிகமாக கிழக்குப் பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி 72 பேரின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைத்தள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கரண்ணாகொடவை விட பொன்சேகாவுக்கே அதிக பாதுகாப்பு

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை விட முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே அதிக பாதுகாப்பும் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று தெரிவித்தது.

அட்மிரல் வசந்த கரண்ணாகொட தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராகவும் அரசாங்கத்தின் உயர் பதவியை தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றபோதிலும் ஜெனரல் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகாவைவிட அட்மிரல் வசந்த கரண்ணாகொடைக்கு பாதுகாப்பும், வாகனங்களும் அதிகமாக வழங்கப்பட்டுள் ளதாக சில ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புரம்பானது என்று அவர் மேலும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் தகவல் தருகையில், ஜெனரல் பொன்சேகாவுக்கும் அட்மிரல் கரண்ணாகொடைக்கும் ஒரே ஒரு வித்தியாசமே உள்ளது. ஜெனரல் பொன்சேகா ஓய்வுபெற்ற இராணுவ உயர் அதிகாரி. அட்மிரல் கரண்ணாகொட தொடர்ந்தும் அரசின் இரு உயர் பதவிகளை வகித்து வருபவர். எனினும் பொன்சேகாவுக்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குண்டு துழைக்காத கார்-01, மோட்டார் சைக்கிள்- 04, டிபென்டர் ஜீப் வண்டிகள்- 04, வான்- 01, கடற்படை அதிகாரிகள் – 02, மற்றும் கடற்படை வீரர்கள் 40 பேர் என்ற அடிப்படையிலேயே கரண்ணா கொடைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் நானே உண்மையான பொது வேட்பாளர் – ஜனாதிபதி

mahinda0.jpgஇலங் கையில் வாழும் சகல சமூகத்தினதும் அங்கீகாரத்தைப் பெற்ற நானே நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் நேற்றுக் காலை அரசாங்க மற்றும் தனியார்துறை ஊடக முக்கியஸ்தர்களுடனான   சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வடக்கு,  தெற்கு என்றில்லை அனைவரும் எனது மக்களே. சகல மக்களினதும் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய கடப்பாடு எனக்குண்டு”. இந்த வகையில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அவர்களும் வாக்களிப்பதற்கான உரிமையைக் கொண்டவர்கள்

நாட்டின் அபிவிருத்தியே எமது பிரதான இலக்கு. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்து நாம் மக்கள் ஆணையைப் பெற்றோம். மஹிந்த சிந்தனை அபிவிருத்திக் கருத்திட்டம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் பத்தாண்டு திட்டமாக அதனை முன்னெடுப்பதே எமது நோக்கம்.

வதந்திகள், சேறு பூசுதலை பெருவாரியாகக் கொண்டதாகவே இம்முறை தேர்தல் அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன். இதற்கான திட்டமிட்ட முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. எம்மைப் பொறுத்தவரை எவருக்கும் சேறு பூச வேண்டிய அவசியம் எமக்கில்லை.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் அபிவிருத்தி தொடர்பாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றவும் என்னால் முடிந்துள்ளது. இது எமக்கான பெரும் வெற்றியாகும். மக்கள் எம் பக்கமே உள்ளனர். மக்கள் எமக்கே தமது ஆதரவை வழங்குவர். நாம் நூற்றுக்கு 95 வீதம் என்ற ரீதியில் வெற்றி பெறுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

புதுக்குடியிருப்பில் விமான உபகரணங்கள் ஆயுதங்கள் மீட்பு!

புலிகளின் விமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகள் மிகவும் சு10ட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே விமானப் படையினர் நடத்திய தேடுதலின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு பொருத்தப்படும் அதிசக்தி வாய்ந்த என்டனாக்கள் – 02, வி 8000 ரக தகவல் பரிமாற்ற கருவிகள் – 04, கனரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 300,  பிஸ்டல்கள் – 02,  9 மி.மி. ரக துப்பாக்கி ரவைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் தொலை நோக்கிகள் என்பன மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

mythili.jpgஇன்று வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற தமிழ்மாணவி அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று  சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள யாழ்.மாவட்டம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவனான, அன்டன் கிறிஸ்டர்ஸ் ஜோன் நிராஜ் கணிதப் பிரிவில், அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டது பொன்சேகா மட்டுமல்ல – இராணுவத் தளபதி

jagath_jayasuriya.jpgவிடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள சரத்பொன்சேகா மட்டுமல்லாது அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாடுபட்டுள்ளனர் என்றும் பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பான பொன்சேகாவின் கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதன்று எனவும் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, இராணுவத்தின் 58ஆவது படையணியின் தலைமையத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளராக சரத் பொன்சேகா- ஸ்ரீ.ல.சு.க.மக்கள் பிரிவு – ஐ.தே.க. தீர்மானம்

sara-pon.jpgஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது