August

Sunday, January 23, 2022

August

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிடம் 04 மணிநேர விசாரணை!

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 4 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று (31) முற்பகல் 10.00 மணியளவில் குறித்த பிரிவில் ஆஜரான அவர், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, இன்று முற்பகல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான ஐ.தே.க. பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக அல்ல! – ஐக்கிய மக்கள் சக்தி

தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடு 2015 க்கு முந்தைய காலத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குடிமக்களின் உரிமைகளை வலுப்படுத்தவே அரசியலமைப்பு திருத்தம் தேவை என்றும் ஒரு நபரின் நலனுக்காக மாற்றங்கள் செய்யப்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

20 வது திருத்தம் புதிய நபர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் தந்திரமாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றது, நாட்டை 2015 க்கு முன்னர் இருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவதற்காக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் ஒழிப்பது என்பது ஒரு குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தை பகிந்துகொள்வதற்கான நோக்கம் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா – இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும்” – மனோகணேசன்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது அவரது தனிப்பட்ட கருத்து என்றே நான் கூறவேண்டும். சபாநாயகரே அதற்கு பதிலளித்துவிட்டார். எனவே, இனியும் இதனை விவாதப் பொருளாக கருதக்கூடாது.

ஏனெனில், இதற்கு முன்னரும் நாடாளுமன்றில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் மொழி என்பது இலங்கையின் மூத்த மொழியா – இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தமிழ் மொழி உலகிலேயே பழைய மொழியாகும். இதற்கான சான்றுகளும் உள்ளன.

எனவே, இதனை பெரிதுப்படுத்தக்கூடாது. இதனை இனவாதமாகக் கருதக்கூடாது. இனவாதமாக கருத்துக்களை வெளியிட்டு, மக்களை குழப்பியடிக்கவும் முடியாது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தீர்வுகள் எதுவுமின்றி பல வருடங்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்! – நேற்று தாய் ஒருவர் தற்கொலை முயற்சி!

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்களது கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய பேரூந்து நிலையத்தில் புறப்பட்டு மாவட்ட செயலகத்தை சென்றடைந்திருந்த நிலையில் தாய் ஒருவர் பகிரங்க வெளியில் கயிற்றை கழுத்திலிட்டு தற்கொலைக்கு முயன்றமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

எனினும் நீண்ட பிரயத்தனத்தின் மத்தியில் உயிருடன் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம்  அனுஷ்டிக்கப்படுகின்றது.  அந்த வகையில், நேற்று காலை 11 மணிக்கு வடக்கு கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கான மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வடமாகாணத்திற்கான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நகரில் நேற்று நடைபெற்றது.

இறுதி யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் பலர் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணமாலாக்கப்பட்டுள்ளனர் என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறததோடு பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களினை கண்டுப்பிடித்து தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகமெங்கும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களாகியும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு எங்கும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கான நீதி இதுவரை கிடைக்காததனையடுத்து தமது உறவுகள் தொடர்பாக நீதி வழங்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தி இன்று வடக்கு, கிழக்கில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை ஆரம்பித்து மாவட்ட செயலகம் முன்னதாக அதனை முடித்திருந்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் தொடரும் நுண்கடன் தற்கொலைகள்!

நுண்கடன் மற்றும் அது தொடர்பான வட்டி சுமையால் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் பல அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகை நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக மனைவி இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம், மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் 29.08.2020 இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் குணரத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த இளம் பெண்ணுக்கு ஆறு வயதில் ஒரு மகளும், 15 மாதங்களேயான ஒரு கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை, கணவன் மது போதையுடன் தலைக்கவசமின்றியும் மோட்டார் சைக்கிளின் சாரதி அனுமதிப்பத்திரம், இன்சூரன்ஸ் இன்றியும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததால் போக்குவரத்துப் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு 30 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான பணத்தை இன்னொருவரிடம் வட்டிக்குப் பெற்று தண்டப் பணம் செலுத்தியுள்ளார். அதேவேளை, வட்டிக்குப் பெற்ற பணத்தை மீளச் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார். அத்துடன் நகைகளும் அடைவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடும்ப பொருளாதார தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலைமை காரணமாக குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் பெற்றோர், சகோதரி வசிக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடனைத் தீர்க்க முடியாத மன அழுத்தம், கணவன் பிரிந்து சென்ற விரக்தி ஆகியவற்றால் அவர் கடுமையா பாதிக்கப்பட்டு எவருடனும் மனம் விட்டுப் பேசாது இருந்துள்ளார். இந்நிலையில், தான் குறித்த வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, தனது கைக் குழந்தையை குளிப்பாட்டி, படுக்கையறையில் உறங்க வைத்த பின்னர் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது” – ஆனந்தசங்கரி

என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாதான் என்பது அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது.

இந்த விடயம் நன்கு தெரிந்திருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ் மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பாராளுமன்றத்தில் சமீபத்தில், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீது தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் உரையொன்றை ஆற்றியிருந்தார்.

அதன் பின்னர் விக்னேஸ்வரனின் உரைக்குப் பதிலளிக்கும் விதத்தில் சரத் பொன்சேகா எம்.பி உரையாற்றியிருந்தார்.

“பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் அந்த உரையை வைத்துப் பார்க்கின்ற போது, விடுதலைப் புலிகளை முழுதாக அழித்தவர் சரத் பொன்சேகாதான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா எம்.பியின் உரையை உற்று நோக்கினால் விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக அழித்தவர் சரத் பொன்சேகா என்பது வெளிப்படையான உண்மையாகும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 2010ம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது தெரியாதா? தெரிந்திருந்தும் அவருக்கு வாக்களிக்கக் கூறிய கூட்டமைப்பும், வாக்களித்த மக்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இதை நான் அன்றே சொன்ன பொழுது என்னை துரோகி என்றார்கள். ஆனால், இப்போது சரத் பொன்சேகாவே பாராளுமன்றத்தில் ‘தேசியம், சுயநிர்ணயம் பேசி தமிழ் இளைஞர்களை தவறாக வழிநடத்திய அமிர்தலிங்கம், பிரபாகரனிற்கு நேர்ந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று கூறியுள்ளார். சரத் பொன்சேகாவின் கூற்றுப்படி அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் அன்றைய அரசினுடைய முழு ஒத்துழைப்போடுதான் நடந்தேறியதென்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இணைந்த வடக்குகிழக்கில் இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்து விடுவார் என்ற பயத்தில், அவரை ஒழிக்க வேண்டுமென்று எண்ணிய அன்றைய அரசுக்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் என்று தங்களை கூறிக் கொண்டவர்கள், விலை போனார்கள் என்பது இன்று சரத் பொன்சேகாவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே முதல் தோன்றிய மொழியும் மூத்தகுடியும் தமிழும், தமிழர்களும்தான் என்பது உலகிலுள்ள அனைத்து இன மொழி மக்களுக்கும் தெரிந்த ஒரு விடயம். தகவல் தொழில்நுட்பம் மிக வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் ஐந்து வயது சிறுவர்களுக்கே இந்த உண்மை தெரியும். நிலைமை இவ்வாறு இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், பாராளுமன்றத்திற்கு சென்றுதான் இதை பேசி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. கைத்தொலைபேசியிலேயே ஒரு தட்டுத்தட்டினால் தெரிந்து விடும். இதை பேசியதால் புதிய வடிவில் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தீர்வு மற்றும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்ற இந்த நேரத்தில், இதை நிரூபிப்பதற்காகத்தான் பாராளுமன்றம் அனுப்பினோமா என்று இவருக்கு வாக்களித்த மக்கள் விசனமடைந்துள்ளனர்.

எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுவதில் அர்த்தமில்லை. இப்போது எமது மக்களுக்கு என்ன தேவை? தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் இன்று அன்றாடம் பசி பட்டினியுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, உலகின் மூத்த மொழி எது? என்று இப்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த விவாதம் பாராளுமன்றத்தின் கால எல்லை முடியும் வரையும் தொடரும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளும் அவருக்கு அதிகரிக்கும்.

2010ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் தமிழ் தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பற்றி அக்கறையில்லாமல் செயற்படுவதால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்கள் ‘தமிழ் மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று தீர்க்கதரிசனமாக கூறினாரோ தெரியவில்லை.

இவ்வாறு வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்ைகயில் தெரிவித்துள்ளார்.

“ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம். அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது” – அமல்ராஜ் அமலநாயகி

இந்த நாட்டில் போராடக்கூட முடியாத சூழ்நிலையில் தமிழ் மக்கள் உள்ளதாகவும் சர்வதேசம் கண்திறந்து பார்க்க வேண்டும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தையிட்டு நேற்று மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “யுத்தம் மௌனிக்கப்பட்டதும் கடந்த 11 வருடங்களாக நாங்கள் எமது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு விதங்களில் எமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த மூன்று வருடங்களாக வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களில் உள்ள உறவுகள் அனைவரும் இணைந்து எமது உறவுகளுக்கான நீதியைக்கோரி தொடர் பேராட்டத்தினை நடத்தி வருகின்றோம்.

அந்தவகையில் உயிர் அச்சுறுத்தல்கள், தொலைபேசியில் அச்சுறுத்தல்கள், விபத்துக்கள் மூலமான அச்சுறுத்தல்கள், பின்தொடர்தல்கள் என பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் எங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். கடந்த அரசாங்க காலங்களில் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இதனை மேற்கொண்டு வருகின்றோம். இன்றைய தின பேரணி தொடர்பாக தற்போதைய கொரோனா சூழ்நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு நாங்கள் சுகாதாரப் பிரிவிடம் அனுமதிபெற்று பொலிஸாரிடமும் அனுமதிக்காகக் கொடுத்து அதனையும் பெற்றோம். இந்த அனுமதிகள் எல்லாம் ஒரு வாரத்திற்கு முன்னமே பெறப்பட்டுவிட்டன.

ஆனால், இன்று இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என என்மீது தடையுத்தரவு பெற்று பொலிஸார் அதனைத் தடுக்க முற்பட்டனர். ஆனால், என்மீதே தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமையால் எமது அம்பாறை மாவட்டத் தலைவியின் தலைமையில் பலரின் ஆதரவுடனும் நாங்கள் இந்தப் போராட்டத்தினை நடத்தியிருந்தோம்.

எனது கணவரைத் தொலைத்து 11 வருடங்களாக அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நாங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று என்னை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள தடையுத்தரவு பெறப்பட்டு அனுமதிக்கப்படவில்லை.

இன்று மட்டுமல்லாது இனிவரும் காலங்களிலும் இது தொடரும் விடயமாகும். இனி வடக்கு கிழக்கில் நாங்கள் எந்தவொரு போராட்டத்தையும் செய்யமுடியாத ஒரு நிலையையே இது வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இந்த அரசாங்கத்தினூடாக எமது உறவுகள் பற்றி அறியமடியுமா என்ற சந்தேகங்களும் எமக்குள் எழுகின்றன.

நாங்கள் அழிக்கப்படப் போகின்றோம். எம்மைக் கொல்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களால் இந்த நாட்டில் போராடக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும். எங்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதற்கும் எங்கள் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சர்வதேசம் முன்வர வரவேண்டும்.

சர்வதேசத்திலுள்ள புலம்பெயர் உறவுகள் இவ்விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளவேண்டும். இங்கு போராடிக் கொண்டிருப்பவர்களும் உங்கள் உறவுகளே. எங்கள் விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தும் அளவிற்குக் கொண்டு செல்லுங்கள்!

எதிர்காலத்தில் நாங்கள் இருப்போமா, அல்லது இனியொரு போராட்டத்தினை செய்வோமா என்றுகூட எமக்குத் தெரியவில்லை. ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கின்றது இந்த அரசாங்கம். அனைத்தையும் சிங்களப் பௌத்தமயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கின்றது.

எமது உறவுகள், எமது சந்ததிகளின் எதிர்காலம் மிகவும் பாரியதொரு அடக்குமுறைக்குள் தள்ளப்படப் போகின்றது. எனவே அனைவரும் இதனைக் கருத்திற்கொண்டு இவற்றை வெளிக்கொணர வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது விடயங்களைக் கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

சுருக்குவலை, டைனமைற் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி திருகோணமலையில் மீனவர் போராட்டம்!

திருகோணமலை மீனவ மக்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை, டைனமைற் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி இன்று (29.08.2020) மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை வீரநகர் சிறுவர் பூங்காவில் இப்போராட்டம் இன்று (29) காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி மீனவ மக்களுக்கான ஒரு தீர்வை கண்டதில்லை. ஆகையால், இம்முறை இரவில் சுருக்கு வலையையும் டைனமைற்றையும் நிறுத்தக்கோரி இம்முறை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூடிய விரைவில் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

பத்தாயிரம் மீனவர்கள் நன்மை பெறுகின்ற இக்காலகட்டத்தில் பத்து பேர் மாத்திரமே சிறப்பு வலைகளையும் தட்டுகளையும் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதினால், எதிர்காலத்தில் மீன்கள் அழியக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், உடனடியாக இதற்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கையில் ஜமாலியா, கிண்ணியா, புல்மோட்டை  மற்றும்  இறக்கண்டி போன்ற பகுதிகளிலேயே அதிகளவிலான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருகோணமலை மாவட்ட மீனவர்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை மற்றும் டைனமைற் பாவிப்பவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அர்ஜென்டீனாவில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா! கடந்த ஒருநாளில் 11,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா.

அர்ஜெண்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அர்ஜெண்டினாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் நெருங்குகிறது.

இதுகுறித்து அர்ஜெண்டினாவின் தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 11, 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,92,009 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ஒருப்பக்கம் கொரோனா தொற்று அதிகரிக்க கொரோனா இறப்பு எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் கொரோனா  மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 2 .2 கோடிக்கும் அதிகமான நபர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனாவைரஸ், 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை முடக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.