August

August

தன்னுடைய உடல்நிலை சீராகவில்லாமையால் பதவி விலகவுள்ள ஜப்பானிய பிரதமர்!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது உடல்நிலையை கருத்திற் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்றதற்கு பின்னர், அவரது உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

65 வயதான ஷின்சோ அபே, இன்னும் ஒரு வருடம் பதவியில் இருந்திருக்கலாம். பிரதான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடையவுள்ளது.

நிதி அமைச்சர் டாரோ அசோ, செயல் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அபேவின் இராஜினாமா ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில்; ஒரு தலைமைப் போட்டியைத் தூண்டிவிடும் என்பது உறுதி.

அபேயின் மருத்துவமனை வருகைகளில் ஒன்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நீடித்தது. மேலும் அவர் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியால் அவதிப்படுவதாக அறியப்படுகிறது. இது 2007ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஓரளவு காரணமாக இருந்தது.

அபே ஒரு மருத்துவ பிரச்சினை தொடர்பாக இந்த பதவியை விட்டு விலகுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஒரு வருடம் மட்டுமே பதவியில் இருந்தபின் 2007ஆம் ஆண்டு அவர் பதவி விலகியிருந்தார்.

கீழ் சபையில் ஒரு மகத்தான தேர்தல் வெற்றியின் பின்னர் அவர் 2012ஆம் ஆண்டு மீண்டும் பிரதமாக பதவியேற்றார். ஏழு ஆண்டு பதவிக்காலம் அவரை ஜப்பானின் மிக நீண்ட காலம் தலைவராக முன்னிறுத்தியுள்ளது.

“திறமையற்றவர்களிடையே திறமையானவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமையானவர்களிடையே திறமையானவர்களை உருவாக்குவிக்க வேண்டும்” :- விளாயாட்டுத்துறை அமைச்சர் நாமல்.

சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் விளையாட்டுப் பாடசாலைகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பாடசாலையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “திறமையற்றவர்களிடையே திறமையானவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமையானவர்களிடையே திறமையானவர்களை உருவாக்குவதற்கும், தேசிய மட்டத்தை மீறி சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பாடசாலை விளையாட்டினை மேம்படுத்த வேண்டும்.

குறித்த இலக்கினை அடைவதற்காக தற்போதுள்ள விளையாட்டுப் பாடசாலைகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு விளையாட்டுப் பாடசாலையின் முதன்மைத் தேவைகளைக் கண்டறிவதன் ஊடாக அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை நடைமுறையிலுள்ள விளையாட்டுச் சட்டத்தை மாற்றுவதற்கு ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மேம்பாட்டுத் திட்டத்தின்படி விளையாட்டுப்  பாடசாலைகள்  ஊடாக நாட்டிலுள்ள பாடசாலை விளையாட்டுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு பயிற்றுநர்களைப் புதுப்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல், விளையாட்டுப் பள்ளிகளில் தற்போதுள்ள தங்குமிட வசதிகளை மேம்படுத்துதல், வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, விளையாட்டுப் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதில் வகுப்பறை வசதிகள் போதாமை ஆகியவைகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, விளையாட்டுப் பாடசாலைகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுப்பதற்கு இதன்போது முன்மொழியப்பட்டது.

தென்சீனக்கடல் பகுதியில் 2 ஏவுகணைகளை செலுத்தி சீனா போர்ப்பயிற்சி.! – அமெரிக்காவுக்கு சீனா பதிலடி..?

தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வருணித்துள்ளன.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் பிறந்துள்ள நிலையில் இந்த ஏவுகணைச் சோதனையும் அதை அமெரிக்காவுக்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா வருணித்துள்ளதும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஹைனன் பகுதிக்கும் பாராசெல் தீவுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளைச் செலுத்தியது.

சீனாவின் ராணுவப் பயிற்சி இடத்துக்கு மேலே அமெரிக்க உளவு விமானங்கள் பறந்ததையடுத்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த தென் சீன மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் தன் செய்தியில் டி.எஃப் 26பி என்ற ஏவுகணையை வடமேற்கு குயிங்காய் மாகாணத்திலிருந்து சீனா ஏவியதாக தெரிவித்துள்ளது. மற்றொரு டிஎஃப்-21 கப்பல் அழிப்பு ஏவுகணை, அதாவது, ‘போர் விமானம் சுமக்கும் கப்பலை அழிக்கும்’ ஏவுகணை கிழக்குக் கடல் பகுதியான ஷீஜியாங் பகுதியிலிருந்தும் ஏவப்பட்டுள்ளது.

சீனா ஒரே நேரத்தில் போஹாய் கடல், மஞ்சல் கடல், கிழக்கு சீன கடல், தென் சீன கடல் ஆகிய 4 பகுதிகளிலும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கப்பல் அழிப்பு ஏவுகணையை சீனா செலுத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை செய்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம் அதனால் தென் சீனக் கடல் பகுதியில் சீன ராணுவப் பயிற்சி முகாம்கள் மீது உளவு விமானத்தை அமெரிக்கா பறக்க விட்டிருக்கலாம் என்று சீன ராணுவ வல்லுநர் ஒருவர் குளோபல் டைம்ஸில் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ழாவோ லிஜியான், “சீனா தன் பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகள் அதன் இறையாண்மைக்குட் பட்டதே. இதற்கு ராணுவமயமாக்கலுக்கும் தொடர்பில்லை” என்றார்.

ஆவா வாள்வெட்டுக்குழுவினர் எனும் சந்தேகத்தின் பேரில் ஆறுபேர் கைது!

ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றில் பிணையாக கையொப்பமிட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தலா 3 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வீனோதன் உள்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பிரகாரம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர். ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை.

எனினும் சந்தேக நபர்களின் சந்தேகமான நடமாட்டத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களில் வழக்கு நிலுவைகள் உள்ளனவா? என விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும்.

இதேவேளை, வாள்வெட்டு வன்முறைக் கும்பல் ஒன்றின் சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பீடிக்குள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து நுகர முயன்ற குற்றச்சாட்டில் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ – நோர்வே தூதுவர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (27.08.2020) இடம்பெற்றது.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன், தேர்தலை முறையாக ஏற்பாடு செய்து, சமாதானமான முறையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய முன்னெடுத்திருந்தமையையும் பாராட்டியிருந்தார். ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு, துரித கதியில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயலாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பதாக பிரதமரிடம் தூதுவர் எஸ்கடேல் குறிப்பிட்டதுடன், இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மை மற்றும் பரஸ்பர உறவுகளையும் பாராட்டியிருந்தார்.

இரு நாடுகளுக்கிடையேயும் கடல்சார் பொருளாதாரங்கள், தனியார் துறை கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பொதுவான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலு, சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் பிறப்பாக்கல் மற்றும் கடற்றொழிற்துறை போன்றவற்றில் நோர்வே நாட்டின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2013 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையின் மீன்பிடித் துறைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் மாதத்தில் இலங்கையுடன் மீன்பிடி நிர்வாக சாதனங்களை கட்டியெழுப்புவது தொடர்பில் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதார தாக்கங்கள் தொடர்பிலும் பிரதமர் ராஜபக்ச மற்றும் தூதுவர் எஸ்கடேல் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொவிட்-19 தொடர்பான ஐக்கிய நாடுகளின் பன்முக நன்கொடை நம்பிக்கை நிதியத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் சமூக-பொருளாதார தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நோர்வே மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம், இலங்கைக்கு இதுவரையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை பேண வேண்டிய தேவை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட தூதுவர், பிரதமரும் புதிய அரசாங்கமும் தமக்கு கிடைத்த தெளிவான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கை மக்களுக்கும் உள்ளார்ந்தமான சமூகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அன்னதானக்கந்தனின் கோயிலில் அன்னதானத்துக்கும் தாகசாந்திக்கும் தடை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

இதனால் நேற்று (27) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன.

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றில் இருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பருத்தித்துறை பிரதேச செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்த வகையில் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துவருதல் கட்டாயமானதாகும். இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும்.

சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும். கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

தாகசாந்தி, அன்னதானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி. விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவினால் மூத்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.

இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிருபம் கடந்த மே மாத முற்பகுதியில் வெளியிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்காக மே 15 ஆம் திகதி பதிவாளரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து – சுற்றுநிருபத்துக்கு அமைய இடம்பெற்ற மதிப்பீடுகளின் படி, கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற விசேட பேரவை அமர்வில் வைத்து திறமை அடிப்படையில் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா,  பேராசிரியர் கு. மிகுந்தன், பேராசிரியர் த. வேல்நம்பி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு, அவர்களின் விபரங்கள் ஜனாதிபதியின் தெரிவுக்காக அனுப்பப்பட்டிருந்தன.

பல்கலைக் கழகப் பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில், மூவரினது பெயர்களையும் கடந்த 13 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்தது.

பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப் பெற்றிருந்த பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமித்திருக்கிறார்.

டிவைன் பிராவோ டி20 போட்டித் தொடரில் 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி சாதனை !

மே.இ.தீவுகளில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தினார் டிவைன் பிராவோ. ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பிராவோ ஆடுவது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து பிராவோ சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் மலிங்கா 295 போட்டிகளில் 390 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். சுனில் நரைன் 339 போட்டிகளில் 383 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 295 போட்டிகளில் 374 விக்கெட்டுகளையும் பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் 339 போட்டிகளில் 356 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

 

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் ! – ஐ.நா

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறும்போது, “ஐ.எஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

கரோனா பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக ஈராக் அரசு அறிவித்தது.

அது போல சிரிய அதிபர் ஆசாத் அரசுப் படைகளால்  ஐ.எஸ் படைகள் பெருமளவு தோற்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள்.! – கருணாஅம்மான்

வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை நேற்று (26.08.2020) மாலை சந்தித்து கலந்துரையாடிய வேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக கூறிய அவர்  தனது கருத்தில், அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில் எனக்கு இருக்கின்றது. நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் கூறுகின்றேன்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன். அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்காலத்தில் எமது மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.