December

December

“உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணமில்லை” – குற்றப்புலனாய்வுத்திணைக்களம் 

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணம் இல்லை என தெரியவந்துள்ளது.

தீ தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் மின்சார சபையினால் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள் மற்றும் மேலும் சிலரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது முல்லை மீனவர் போராட்டம் !

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

IMG 6575 1

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 5 நாட்களாக இந்த போராட்டம் இடம்பெற்று வந்தது.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி இந்த போராட்டம் முன்னெடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

“சுமந்திரனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும் ” –  சி. வி விக்னேஸ்வரன்

சுமந்திரனால் எல்லாக் காலத்திலும் எல்லோரையும் முட்டாள் ஆக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன் வரைவு ஒன்றின் உள்ளடக்கம் பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இருவருமே சுமந்திரனின் வரைவு அரசுக்கான கால அவகாசம் வழங்குதாக கூறி அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.

இதற்கு “விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி கூறும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும்.

நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா? அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரியா? என்பதை அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கடித வரைவை மொழி பெயர்த்தால் தெரிந்துவிடும். அவர் அனுமதி அளித்தால் குறித்த கடிதத்தை மொழி பெயர்த்துக் கொடுக்க முடியும்.அதில் தமது சிபார்சுகள் என்று கூறி முதலில் அவர் அங்கு கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்லது மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒருகூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே.

அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இதில் எந்த மயக்கமும் இல்லை.

அவர் தமது சிபார்சுகளின் பின்னர் அதாவது சிபார்சுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்களினால் முன்னர் செய்த காரியங்களை அவர் குறிப்பிடுகின்றார். அதில் சிரியா பற்றியும் மியன்மார் பற்றியும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நாடுகள் சம்பந்தமாகச் செய்தது போல் இலங்கை சம்பந்தமாகவும் பொறிமுறைகளை இயற்றுங்கள் என்று எங்குமே அவர் கூறவில்லை. இதைத்தான் அளாப்பிறது என்று கிராமங்களில் கூறுவார்கள் சுமந்திரன் அளாப்புகின்றார்!

ஆனால் எம்மிடம் இருந்து பதில் வர முன்னரே குறித்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் ஏனையோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன். எம்மிடம் எமது கருத்துக்களைக் கோரிவிட்டு அதற்கு முன்னர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியது. ஆனால் இப்பொழுதும் அனைவரின் சம்மதத்துடன் புதியதொரு வரைவை அனுப்பலாம். அத்துடன் மைய நாடுகளுடனும் பேசவேண்டியிருக்கின்றது.
அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள்.

பொதுவாக இரண்டு விடயங்களைப் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள். ஒன்று ஐ.சீ.சி என்னும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது இலங்கைக்கென நியமிக்கப்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் முன் இலங்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனைச் சம்பந்தப்பட்ட ஒரு அங்கத்துவ நாட்டின் ஊடாகச் செய்ய வேண்டும். அடுத்தது சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவி அதைக் கொண்டு இலங்கையில் நடந்த மிக ஆபத்தான சர்வதேசக் குற்றங்களையும் சர்வதேசச் சட்ட மீறல்களையும் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுபடுத்தி, பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்யவும் அவை தொடர்பாக உரிய கோவைகளைத் தயாரித்து சர்வதேசச் சட்ட முறைமைக்கேற்றவாறு நியமிக்கப்படும் நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் நடைபெறும் குற்றவியல் நடவடிக்கைகளில் அக் கோவைகளை சமர்ப்பித்து நீதியும் சுதந்திரமானதுமான விசாரணைகளை விரைவாக நடத்த அனுசரணை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சமாந்திரமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு போவது பற்றியும் பரிசலிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையூடாக விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஆய்வாளர் ஒருவரை நியமிக்கக் கோரலாம்.

அதுமட்டுமல்ல. ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளை ஆராயுமாறும் கோரலாம். இவை பற்றி எல்லாம் ஆராய வெளிநாட்டு சர்வதேசச் சட்ட வல்லுநர்களுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன். மைய நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.தமிழ் தரப்பார் யாவரும் சேர்ந்து ஒரு கோரிக்கை விடுத்தால் நாம் அதன்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜெனிவாவில் இருக்கும் பிரித்தானியத் தூதுவர் கூறியுள்ளார். ஆகவே நாங்கள் மேலும் கால அவகாசம் கொடுக்காது, இலங்கைக்கு எதிராக செய்ய வேண்டியவற்றை மைய நாடுகள் துணை கொண்டு செய்ய வேண்டும். அதற்கு சகல தமிழ்த் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும். எமது ஒற்றுமையே இந்த தருணத்தில் எமக்குப் பலமாகும் என தெரிவித்துள்ளார்.

“ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் நாம் நேரில் பேச்சு நடத்துவோம்” – மாவை சேனாதிராஜா

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்துவோம். அத்துடன் எதிர்வரும் 23ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே யாழ். மாநகர சபையில் மேயருக்கு யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் எமக்குச் சில சபைகளின் வரவு – செலவுத்திட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கின. அந்த அடிப்படையில் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றிலும் அந்தக் கட்சியினரின் ஆதரவைக் கோரி இருந்தோம். ஆனால், அவர்கள் அந்தச் சபைகளில் எங்களைத் தோற்கடித்தனர்.

எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குறித்த சபைகளின் உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு சபைகளிலும் மேயர் மற்றும் தவிசாளர் பதவிக்கு யாரைப் பிரேரிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

அத்துடன் இரண்டு சபைகளிலும் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈ.பி.டி.பியுடனும் மீண்டும் பேச்சு நடத்துவோம். அந்தப் பேச்சு நேரில் நடைபெறும் என்றார்.

கிறிஸ்மஸ் ஸ்பெசல்: யேசுநாதர் – சிவபெருமான் – அல்லாஹ் உடன் சூம் மீற்றிங் பிரித்தானியர்கள் முட்டாள்களா அல்லது அவர்களது பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களை முட்டாள்கள் எனக் கருதுகின்றாரா?

பிரித்தானியா மீண்டும் ஒரு லொக் டவுனுக்குச் சென்றுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று சனிக்கிழமை மாலை பிரித்தானியப் பிரதமரால் வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக புதன்கிழமை டிசம்பர் 16 அன்று ‘மேரி லிற்றில் கிறிஸ்மஸ்’ என்ற பிரித்தானிய பிரதமர், ‘விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் வராது. லொக்டவுன் கொண்டு வருவது மனிதாபிமானமற்ற செயல்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தார். ‘கிறிஸ்மஸ் புத்தாண்டு காலத்தையொட்டி சமூக இடைவெளியயைப் பேணும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தவறு’ என்றும் ‘கொரோனா வைரஸ் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்றெல்லாம் அரசினுடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதனையும் செவிமடுக்கவில்லை.

தனது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் பிரிதானிய மக்களும் பிரித்தானிய பொருளாதாரமும் எதிர்கொள்ளும் கடுமையான நிலைதொடர்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அவரது கொன்சவேடிவ் கட்சியும் எதனையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. வெறும் வெற்று வாரத்தைகளின் சோடினையாலும் ‘பஞ்ஜ் டயலக்’ பேசியும் மக்களை வசீகரிக்கலாம் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். அவரது பேச்சுக்களில் ஒரு போதும் உள்ளடக்கம் இருப்பதில்லை. வார்த்தை ஜாலங்களை அப்புறப்படுத்தி உள்ளடக்கத்தைப் பார்ப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. ‘பஞ்ஜ் டயலக்’ தான் எஞ்சியிருக்கும்.

கிரீன்விச் பாடசாலை மீளத் திறப்பு – கவுண்டமணி – செந்தில் நகைச்சுவை:
டிசம்பர் 19ம் திகதி புதிய லொக் டவுன் அறிவிற்ப்பிற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக கிறீவிச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கு டிசம்பர் 14ம் திகதி விடுமுறையயை அறிவித்தது. அதாவது 17ம் 18ம் திகதிகளில் கிறிஸ்மஸ் கால தவணை விடுமுறையயை, வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக திங்கட் கிழமையே விடுமுறையயை வழங்கியது. அதற்குக் காரணம் லண்டனின் பல பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவுவதால், குறிப்பாக பாடசாலை மட்டத்தில் பல ஆசிரியர்கள் அரச விதிமுறைப்படி தனிமைப்படுத்தலுக்குச் சென்றனர். பாடசாலை வகுப்புகளை நடாத்த ஆசியர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் கிறின்விச் கவுன்சில் தனது உள்ளுராட்சிப் பிரிவில் உள்ள பாடசாலைகளை மூடுவதாக அறிவித்தது. பாடசாலைகள் பலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல வகுப்புகளை இடைநிறுத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உண்மையில் டிசம்பர் மாத ஆரம்பம் முதலே பாடசாலைகளில் மாணவர், ஆசிரயர் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலைகள் சீராக இயங்கவில்லை.

ஆனால் அரசு என்ன செய்தது? தொழிற்கட்சியின் அதகாரத்தில் இருந்த உள்ளுராட்சி சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி, மறுநாள் மூடிய பாடசாலைகளை மீளத் திறக்க வைத்தது. மக்களுக்கு எதிரும் புதிருமான தகவல்கள் வழங்கப்பட்டு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டனர். கிறின்விச் கவுன்சில் தலைவர் தனது முடிவு சரியானது தான் என்றாலும், அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் நிலையில் கிரின்விச் கவுன்சிலின் நிதியயை விரயமாக்க விரும்பவில்லை என்பதால், அரசின் வேண்டுகோளின்படி பாடசாலைகளை மீளத் திறக்குமாறு அறிவித்தார்.

டிசம்பர் 20 இன்று ‘ஜனவரியில் பாடசாலைகள் வழமைபோல் ஜனவரி 4இல் திறக்கப்படமாட்டாது’ என்றும் ‘இரு வாரங்களின் பின்னதாகவே பாடசாலைகள் திறக்கப்படும்’ எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த அரசின் கோமாளித் தனம் தமிழ்பட நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி – செந்திலின் நகைச்சுவையளவுக்கு மலிந்துவிட்டது.

ஒரு படத்தில் வீட்டிற்கு பிச்சை எடுக்க வந்தவரை ‘பிச்சை தர முடியாது’ என்று செந்தில் விரட்டியடித்துவிட்டடார். அப்போது அங்கு வரும் கவுண்டமணி, அதே பிச்சைக்காரரை திருப்பிக் கூட்டி வந்து பிச்சை கேட்கும்படி சொல்வார். அந்தப் பிச்சைக்காரரும் அதன்படி ‘பிச்சை போடுங்க தாயே ஐயா’ என்று இரந்து நிற்பார். உடனே கவுண்ட மணி ‘பிச்சை தரமுடியாது நாயே! வெளியே போ!’ என்று திட்டி துரத்திவிடுவார். இந்த நகைச்சுவைக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செய்யும் கோமாளி அரசியலுக்கும் ஏதும் வித்தியாசம் தெரிகின்றதா? பள்ளிக் கூடத்தை நீ பூட்டக் கூடாது நான்தான் பூட்டுவேன் என்ற மாதிரித்தான் கிரின்விச் விவகாரம் அமைந்தது.

பிரதமர் பொறிஸ் என் முகநூலையாவது படித்திருக்கலாம்:
தனக்கு கிடைத்த விஞ்ஞானபூர்வமான தகவலின் அடிப்படையில் தான், தனது முடிவை தான் மாற்றியதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது செயலை நேற்று நியாயப்படுத்தினார். ஒக்ரோபர் 31ம் திகதி எனது முகநூல் பதிவு இது: பிரித்தானியாவில் ஒரு நாளுக்கு 4 000 மரணங்கள் சம்பவிக்கலாம்!!! – கோவிட்-19 ஒரு நாளைக்கு நாலாயிரம் உயிர்களை பலி எடுக்கும் அபாயம் இருப்பதாக அரசின் விஞ்ஞான மருத்துவக்குழு எச்சரித்து உள்ளது. அரசின் விஞ்ஞான மருத்துவக் குழு விடுத்த இந்த எச்சரிக்கையயை பிரதமர் எங்கு சொருகி வைத்தார்? அன்று அனைவரும் கேட்டுக்கொண்டது இடைத் தவணை விடுமுறையயை இரு வாரங்கள் மேலும் நீடித்து முழுமையான லொக் டவுணைக் கொண்டு வந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, ரெஸ்ற் அன் ரேஸ் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி இருந்தால், இந்த கிஸ்மஸ் கால விடுமுறையயை மக்கள் ஓரளவு சந்தோசமாக களித்திருப்பார்கள். பிரித்தானியாவின் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான வாரமான இந்த வாரத்தில் பல நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை நடத்தி இருக்கும். ஏற்கனவே விளிம்புக்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்தில் வீழ்ந்துவிடாமல் தடுத்திருக்க முடியும். தேவைப்பட்டால் ஜனவரி முதல் ஒரு லொக்டவுணைக் கொண்டு வந்திருக்க முடியும். இது எவ்வித திடமிடலும் இன்றி எழுந்தமானமாக அவ்வப்போது வீட்டில் எழும் பிரச்சினைகளுக்கு கணவன் மனைவியர் எடுக்கும் கடுகதி எதிர்வினைகள் போல் தான் பிரித்தானியா பிரதமரின் ஆட்சி நகர்கிறது. விஞ்ஞானத்தை பின்பற்றுகின்றேன் பொருளாதாரத்தை காப்பாற்றுகின்றேன் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன் என்று சொல்லிச் சொல்லி அவற்றை அரசு சீரழித்து வருகின்றது.

அரசின் பொய்யும் புரட்டும்:
அரசின் விஞ்ஞான மருத்துவக்குழுவின் ஆலோசணைகளை அரசு உதாசீனப் படுத்தியது மட்டுமல்ல அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை; இதுவெல்லாம் கற்பனைக் கதைகள் என்றெல்லாம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரச தரப்பு கொன்சவேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். பிரித்தானிய பிரதமரும் கொன்சவேடிவ் கட்சியும் அவர்களது பிரச்சாரப் பீரங்கிகளான சன் மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களும்; 1980களில் தைப்பொங்கலுக்கு தமிழீழம் என்று தமிழ் இயக்கங்கள் ரீல் விட்டது போல கிறிஸ்மஸ் இற்குள் வைரஸ்யை வென்றுவிடுவோம் என்றெல்லாம் ரீல் விட்டன. புதிய வக்சினுக்கு விழுந்துகட்டி அனுமதியயை வழங்கிவிட்டு தாங்கள் தான் உலகத்திலேயே முதல் முதல் வக்சீன் போடுவதாக பீலாவிட்டனர். சினா, கொரியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் வைரஸ்யை முழுமையாக கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வரும் நிலையில் பிரித்தானிய அரசு இன்றும் ‘வாய்ச் சொல் வீரன்’ என்ற நிலையில் தப்பட்டம் அடிப்பவர்களாகவே உள்ளனர்.

சீனா, ரஸ்யா போன்ற நாடுகளும் புதிய வக்சீனை அறிமுகப்படுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் வக்சீன் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளாலும் நோயயைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் ரஸ்யாவின் ஸ்புட்னிக்-5 வக்சீனை பரீட்சித்துப் பார்க்க அஸ்ராசெனிக்கா என்ற பெரும் பார்மஸிட்டிகல் நிறுவனமும் முன்வந்துள்ளது. ஸ்புட்னிக் – 5 வக்சீனுக்கு பயன்படுத்திய கூறுகள் வைரஸ்ற்கு எதிராக கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அதன் கூறுகள் இயற்கையான வைரஸ் கூறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டதால் அந்த வக்சீன் நீண்ட கால பாதுகாப்பை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது. இவை பற்றியெல்லாம் பிரித்தானிய ஊடகங்கள் மூச்சுவிடுவதில்லை. நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக பிரித்தானியாவின் கோவிட்-19 மரணங்கள் இந்த ஆண்டு முடிவதற்குள் 70,000 தை தாண்டிவிடும் நிலைக்கு வந்துவிட்டது.

பிரித்தானிய அரசின் ஊழல் மோசடி:
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கையாள பிரித்தானிய அரசு 200 பில்லியன் பவுண்களை கடன் வாங்கியது. அதில் 10 வீதமான நிதி 20 பில்லியன் பவுண்கள் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு செலவிடப்பட்டது. இந்தப் பாதுகாப்பு அங்கிகளை வாங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பலவும் அது தொடர்பான எவ்வித முன் அனுபவங்களும் அற்ற நிறுவனங்கள் மட்டுமல்ல, அவைகளில் பெரும்பாலானவை கொன்சவேடிவ் கட்சியுடன் nநெருக்கமானவர்களின் நிறுவனங்களாகவும் இருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்கள் பாதுகாப்பு அங்கிகளை உற்பத்தி செய்வதனிலும் அதனை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளன. ஒரு சில பெனிகளுக்கு சீனாவிடம் இருந்து பொருட்களைத் தருவித்து, அதனை ஐம்பது முதல் ஆயிரம் மடங்கு வரை விலைகளை உயர்த்தி பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு விற்றுள்ளனர். 20 பில்லியனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அங்கிகளின் உண்மையான பெறுமதி 10 பில்லியன் பவுண்களே என மதிப்பிடப்படுகின்றது. உயிர்களைப் பணயம் வைத்து கொள்ளை இலாபம் ஈட்டிக்கொள்வதில் பிரித்தானிய ஆளும் கட்சி – கொன்சவேடிவ் கட்சி ஈடுபட்டு இருந்தமை நியுயோர்க் ரைம்ஸ் புலனாய்வுக் கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ‘ரெஸ்ற் அன் ரேஸ்’ போன்ற கோவிட்-19 பரிசோதணை செயற்பாடுகள் கூடி அனுபவமிக்க பல்கலைக்கழகங்கள், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படாமல் எவ்வித அனுபவமுமற்ற தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அவர்களுக்கு மில்லியன் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுமுறைகாலத்தில் மாணவர்களின் பட்டினியயைப் போக்க நான்கு மில்லியன் பவுண்களை ஒதுக்க மனமிரங்காத பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது நெருங்கிய வட்டங்கள் 10 பில்லியனை சூறையாடுவதற்கு அனுமதித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னதாக யுனிசெவ் பிரித்தானியச் சிறார்கள் பட்டினியயை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து விசேட் திட்டத்தை பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்த உள்ளனர். இவ்வாறாக பிரித்தானியச் சிறார்களை பட்டினியில் இருந்து காக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை கடந்த பத்து ஆண்டு கொன்சவேடிவ் ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டு உள்ளது.

பில்லியனெயர்களின் வருமானம் அதிகரிப்பு:
2020ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்தின் தலைமை அதிகாரியான டேவிட் பெய்ஸ்லிக்கு வழங்கப்பட்டது. அவருடைய கணிப்பின் படி கோவிட்ட-19 இன் பாதிப்பினால் உலகெங்கும் 270 மில்லின் மக்கள் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் பட்டினியயை நோக்கித் தளளப்பட்டு உள்ளனர். இவர்களை பட்டினியில் இருந்து மீட்க 15 முதல் 20 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வது மிகக் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் 2020 ஏப்ரல் முதல் யூலை வரையான நான்கு மாதங்களில் உலகில் உள்ள 2200 பில்லியனெயர்கள் – செல்வந்தர்கள் 2.7 ரில்லியன் டொலர்களைச் சம்பாதித்து உள்ளனர். அதாவது 1000 பில்லியன் ஒரு ரில்லியன். 2.7 ரில்லியன் சம்பாதித்தவர்களுக்கு ஒரு 20 பில்லியன் வழங்கி 270 மில்லியன் மக்களை காப்பாற்ற முடியாத ஒரு விலங்கினக் கூட்டத்தில் தான் நாங்கள் வாழ்கின்றோம்.

அதிஸ்ரவசமாக உழைத்த உழைக்காத அசையும் அசையாத சொத்துக்கள் எதையும் பரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாததால் இன்னும் மனித இனம் இப்பூமியில் வாழ முடிகின்றது. தசம் ஒரு வீத சொத்தை பரலோகம் கொண்டு செல்ல முடியும் என்றொரு நிலை இருந்திருந்தால் இந்த 2200 செல்வந்தப் பிசாசுகளும் ஒட்டுமொத்த மனித இனத்தையே அழித்து, சொத்துக்களை பரலோகம் கொண்டு போயிருக்கும். இந்தப் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாக்கள் சிவபெருமான், யேசுநாதர், அல்லா என்று இப்படி இன்னோரன்னவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் பதிவிடுங்கள் ஒரு சூம் மிற்றிங் போட்டு இதற்கான தீர்வு பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்!

“மக்களின் காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும்”  – பா.உ. வேலுகுமார்

“மக்களின் காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள காணிகளை வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கான அளவைப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இது பற்றி மக்களுக்கோ அல்லது உரிய தரப்புகளுக்கோ அறிவிக்காமல் மிகவும் சூட்சுமமான முறையிலேயே திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கண்டி மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களுக்கும் உட்பட்டதாக குறித்த தோட்டம் இருந்து வருகின்றது. இவ்வாறான நயவஞ்சக நடவடிக்கைகளால் இப்பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நல்லாட்சியின்போது பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தனி வீடுகள் அமைப்பதற்கான காணிகள் ஒதுக்கப்பட்டு, மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன், எஞ்சிய காணிகள் அம்மக்களுக்கே தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான திட்டமும் வகுக்கப்பட்டது. அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்வேளையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனினும், இந்தத் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஆளுங்கட்சி அமைச்சர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தனர். அவ்வாறு உறுதியளித்துவிட்டு இன்று காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பது பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லில் ஒன்றையும் செயலில் வேறொன்றையும் செய்யும் நயவஞ்சக ஆட்சியே இது என்பது தற்போது புரிந்துவிட்டது.

எமது மக்களுக்கான காணி உரிமையை தாரைவார்க்க முடியாது. எனவே, வெளியாருக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும். இல்லையேல் மக்கள் படை திரட்டி போராடவேண்டிய நிலை உருவாகும் என்பதனையும் கூறிவைக்க விரும்புகின்றோம்” – என்றுள்ளது.

“நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வந்துள்ளது ” – சிவாஜிலிங்கம்

நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்க கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று (20.12.2020) யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகங்களிடம் மேலும் அவர் கருத்து தெரிவித்த போது ,

எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் தமிழர் தரப்பில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் சம்பந்தமாக ஆலோசனை பெறுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டம் ஒன்று கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் மூன்று விடயங்களை முக்கியமாக ஆராய்ந்து இருந்தோம் . ஜெனிவா கூட்டத்தொடரில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் . டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் தீர்வு யோசனையை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்திருந்தோம்.

இதில் குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக தமிழர் தரப்பிலிருந்து 3 தமிழ் தேசிய பிரதான அணிகளும் சேர்ந்து அதனுடைய 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு யோசனை சமர்ப்பித்தால் அதே யோசனையை இங்கு இருக்கக்கூடிய சிவில் அமைப்புக்கள் மதப் பெரியார்கள் அதேபோல பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் புலம்பெயர் அமைப்புகள் ஏற்றுகொண்டால் அது ஒரு சிறந்த நிலைப்பாடாக இருக்கும் என்ற கருத்திலே நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றோம்.

அதிலே குறிப்பாக கருத்தொற்றுமை வருகின்றபோது கால நீடிப்பை மறைமுகமாகவோ நேரடியாகவோ வலியுறுத்துவதாக அமையக்கூடாது என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

இனிமேல் எக்காரணம் கொண்டு நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு வந்திருக்கின்றது.

நாங்கள் ஒரு யோசனை தயாரித்திருக்கின்றோம் இந்த யோசனை 3 தமிழ் தேசிய கட்சிகளிடமும் பிரஸ்தாபித்து எங்களுடைய கட்சியை தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் சமர்ப்பித்து எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எடுக்க கூடியவாறாக தீர்மானித்திருக்கிறோம்.

அதாவது முக்கியமாக இரண்டு கோரிக்கைகளை நாங்கள் வைத்திருக்கின்றோம் . அதேபோல தமிழ்தேசிய மக்கள் முன்னணி,கூட்டமைப்பு ஏதாவதுயோசனைகள் முன்வைப்பார்களாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு முடிவுகளை மாற்றலாம்.

ஆனால் எந்த விதத்திலும் எந்த காரணத்தைக் கொண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்குவதில்லை என்ற அடிப்படையில் கோரிக்கையை முன்வைக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“துறைமுகங்களை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே எமது துறைமுகங்கள் ” – அமைச்சர் சி.பி. ரத்னாயக்க

“துறைமுகங்களை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே எமது துறைமுகங்கள் ” என அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு இணையாக கொத்மலை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை இன்று (20.12.2020) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடாததால் நாட்டுக்கு நஷ்டம் எனவும், கடன்களை பெறமுடியாது எனவும் விமர்சிக்கப்படுகின்றது. நாம் கடன் வாங்கியது போதும். தேசிய பொருளாதாரத்தை மையப்படுத்தியே இம்முறை வரவு – செலவுத்திட்டம்கூட தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

துறைமுகத்தை இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ வழங்குவதற்கு நாம் தயாரில்லை. எமது நாட்டு தேவைக்காகவே துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கம்தான் 99 வருடகால குத்தகைக்கு துறைமுகமொன்றை வழங்கியது. கடந்த ஆட்சியின்போதே பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இதனால்தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறமாட்டார் எனவும், அவருக்கு சிறுபான்மையின மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.இந்நிலைமையும் மாற்றியமைக்கப்பட்டது.

ராஜபக்சக்களுக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரமுடியாது என அன்று குறிப்பிட்டனர். ஆனால் ராஜபக்சக்கள் அதனை செய்துமுடித்தனர். நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது எனவும் சுட்டிக்காட்டினர். எனினும் அபிவிருத்தியையும் செய்து காட்டினர். அதுமட்டுமல்ல சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெறமுடியாது என்றனர். ஆனால் ராஜபக்சக்கள் வெற்றிநடைபோட்டனர்”  என அவர் குறிப்பிட்டு்ளார்.

“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் திட்டம் விரைவில் ” –  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை குறைக்கும் நோக்கில் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகிறது. இதன் காரணமாகவே முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் வேலைத்திட்டத்தை தமது அமைச்சின் ஊடாக மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவு நீர் கொண்டு போகும் யாழ்ப்பாணமும் மறைந்து போய்விட்ட பொது நல சிந்தனையும் ! – அருண்மொழிவர்மன்

இங்கு பதிவிடப்பட்டுள்ள படங்கள் யாவும் யாழ்ப்பாண மாநகர வடிகால் துப்புரவுப்பணியின் போது குவிந்த பிளாஸ்டிக் உட்பட்ட கழிவுகள் மட்டுமேயாகும். இது போல துப்புரவு செய்யப்பட்ட இடங்கள் யாவிலும் அளவுக்கு அதிகமாகவே இந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

 

 

 

சரி விடயத்துக்கு வருவோம். இந்த படங்களை பதிவிட்டு பகிர்ந்து கேலி பேசிவரும் எம்மில் பலர் அதற்கு அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகர சபை மட்டுமே பொறுப்பு – ஒழுங்காக கழிவுகளை அகற்ற அவர்கள் தவறி விட்டார்கள் , Filter system அறிமுகம் செய்யப்படவில்லை என ஆளாளுக்கு அரசின் மீதும் ஏனையோர் மீதும் பழிகளை போட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ள பார்க்கிறோமே தவிர சரி இனிமேலாவது “குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போட முயற்சிப்போம் ” என எந்தக்கருத்துக்களையும் யாரும் முன்வைப்பதாக தெரியவில்லை.
அவ்வளவு தூரம் சுயநல சிந்தனையுள்ளோராக நாம் குறுகிவிட்டோம் என்பதை இம்முறை அதிகரித்த மழை நாட்களினுடைய யாழ்ப்பாணத்தின் நிலை தெளிவாக எடுத்துக்காட்டி நிற்கின்றன.
முக்கியமாக யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறப்புறங்களில் போகவழியில்லாது மழைநீர் தேங்கி வீடுகளே குளம் போல காட்சியளித்தது. தெருக்கள் அனைத்திலும் நிறைந்த தண்ணீர் போக வழியில்லாது வைத்தியசாலையையும் நிறைத்ததது. அதன் போதும் அரசின் மீதே பழிபோட்டு நகர நாம் முற்படுகிறோமே தவிர முறையான கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றி ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணரத்தவறிவிடுகின்றோம்.
அதிலும் இம்முறை யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறங்கள் தொடங்கி நல்லூர் , மானிப்பாய், என பல இடங்களில் தேங்கிய நீர் நம்முடைய மனதும் பொதுநல சிந்தனையும் எவ்வளவு சுருங்கிப்போய்விட்டது என்பதை தெளிவாக காட்டியது. நகர கட்டமைப்பும்,  அதிக சனத்தொகையும் கொண்ட கொழும்பு, களுத்துறை, உள்ளிட்ட நகரங்களில் கூட இம்முறை பெரிதாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் கடல் பகுதி அண்மையிலுள்ள யாழ்ப்பாணத்தில் தண்ணீர் போக இடமில்லாத அளவுக்கு எங்களுடைய சுயநலம் தண்ணீரை மறித்து தேக்கி வீடுகளுக்குள் அனுப்பி விட்டது என்பதே உண்மை.
Image may contain: outdoor, nature and water
வாய்க்கால்கள் இருந்த – இருக்க வேண்டிய இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து நீண்டு கொண்டே செல்லும் எங்களுடைய கடைகள் மற்றும் கட்டிடங்களின் எல்லை , தண்ணீர் ஓட வழியே விடாது முழு நகரத்தினதும் சந்து பொந்துகளை கூட விடாது ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ள மதில்கள், காணாமல் போன – போய்க் கொண்டிருக்கும் குளங்கள்,  குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போட இடம் கொடுக்காத மெத்தப்படித்த மேதாவித்தனம் என இப்படி எத்தனையோ காரணங்களின் சேர்க்கையே நாம் எதிர்கொண்ட இந்த வெள்ளப்பெருக்கின் பின்னணி.  அதிலும் கொடுமை பலர் இதற்கும் அரசை திட்டியது தான்.
யாழ்.நகரத்தின் எல்லா பகுதிகளிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு குப்பைகளை யார் இந்த வாய்க்கால்களுக்குள் கொட்டியது ..? நாம் ஒவ்வொருவரும் தான். அதிலும் பிளாஸ்டிக் போத்தல்களே அதிகம்.  யாரும் சமூக சிந்தனையோடு செயற்பட யோசிப்பதில்லை. நாம் சிறுக சிறுக வீசியெறிந்த போத்தல்களும் பொலித்தீன் பைகளுடைய சேர்க்கையுமே இந்த மழைநீர் தேக்கமும் அதன் மூலமான இடர்களும்.
Image may contain: outdoor
 நகரவடிகாலமைப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியதற்கு பொறுப்பாக உள்ளவர்களுடைய மெத்தனப்போக்கும் இதற்கான ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணமில்லை. முடியுமானவரை சூழல்பாதுகாப்பு தொடர்பாக கவனமாக இருப்போம்.
நீர் நிறைந்து வெளியேற வழியில்லாது உள்ளது என அலட்டிக்கொள்ளும் நாம் நம்முடைய வீடுகளை சுற்றிவர அடைத்துவிட்ட மதில்கள் பற்றி சிந்திப்பது கிடையாது. நம்மைப் போல ஒவ்வொருவரும் அடைத்து விட்ட இந்த மதில்களே பாதிக்காரணம் நீர்த்தேங்கி நின்று இடர் ஏற்பட. ஒருகாலம் வேலிகள் பயன்பாட்டில் இருந்த போது இப்படியான பிரச்சினைகள் எவையுமே ஏற்பட்டதில்லை. குளங்களை அழித்து விட்டோம். அது பற்றி சிந்திப்பதில்லை. குளத்து நிலங்கள் எல்லாம் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளன. நீர் ஓடாத படிக்கு வாய்க்கால்களை குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட முடியாத  நம்முடைய மெத்தனத்தனத்தால் நிரப்பி விட்டோம். பிறகு என்ன..? நீர் வெளியேறவும் வழியிருக்காது. நீர் தேங்கவும் குளமிருக்காது.
சிந்திப்போம். அமெரிக்காவின் கமலாஹாரிஷ் தமிழர் என்று பாராட்டிக்கொண்டும் அமெரிக்காவில் உயர் பதவி வகிக்கும் யாழ்ப்பாணத்து தமிழர் என்றும் பெருமை பாடிக்கொண்டிருக்கும் நாம் தான் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது செயற்படுகின்றோம்.
சரி பிறவிடயங்களை விடுவோம் இந்த குப்பைகள் வாய்க்கால்களில் அடைத்துப்போய் விட்டால் அதனை அள்ள வேண்டிய பணியில் ஈடுபடுவோரும் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்து கொண்டாலே போதுமானது.
Image may contain: outdoor
ஈரான் – அமெரிக்க பகையை ஆருடம் கூறி முன்னெச்சரிக்கையாக வாகனங்களில் பெற்றோலை நிரப்பி வைத்துக்கொள்ளும் அளவிற்கு எதிர்காலம் பற்றி சிந்திக்க தெரிந்த நாம் , கல்வி கற்ற சமுதாயம் என நம்மை நாமே பெருமை பாராட்டிக்கொள்ளும் நாம்  இந்த கழிவகற்றல் முகாமைத்துவம் என்கிற விடயத்தில் அவ்வளவு சுயநலமாக நடந்துகொள்கிறோம் என்பது அவ்வளவு வேதனைப்பட வேண்டியதும் வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும்.
இனிவரும் காலங்களில் சரி சிந்தித்து செயலாற்றுவோம். இப்போதும் சிந்தித்து செயலாற்ற தவறுவோமாயின் கடல்கொண்டு போன மதுரை நகர் போல  கழிவுநீர் கொண்டு போன யாழ்ப்பாண நகர் என எதிர்கால சந்ததியினர் நகைக்க இடமுண்டு. எனவே நாம் சூழல் நேயமுள்ளோராக மாறுவதுடன் நம்மை சுற்றியுள்ளோரையும் சூழல்நேயமுள்ளோராக்க முயற்சிப்போம்…!