May

May

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தேர்வுக்குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

20க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்ற நிலையில் இலங்கையின் யோர்க்கர் நாயகன் லசித் மாலிங்கவை மீண்டும் அணிக்குள் இணைத்துக்கொள்ள இலங்கை அணியின் தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு பெற்றார். எனினும், ரி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த அவர் இறுதியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தேர்வில் லசித் மாலிங்க இருப்பதாக தேர்வுக் குழுவின் தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மோர்னிங் ஸ்போட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கருத்து வெளியிடுகையில்,

மாலிங்கவை இவ்வருடம் நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணத்தில் விளையாட வைக்க எதிர்பார்த்துள்ளோம். அவர் எமது அணித் தேர்வில் உள்ளார். இதற்காக அவரிடம் கூடிய விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படும் வடக்கின் பாடசாலைகள் !

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய  வவுனியா மாவட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள், ஓமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழ். மாவட்டத்தில் நாரந்தனை றோ.க. பாடசாலை என்பன முதல் கட்டமாக கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

இதேவேளை, வடக்கில்  மேலும் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

2014க்கு பின்பு மிகப்பெரும் போர் – காசாவில் 35பேரும் இஸ்ரேலில் 05 பேரும் பலி !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் தாக்குதல் நீடித்தது. குறிப்பாக இன்று அதிகாலையில் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி  நடத்திய தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் தரப்பில் 5 பேரும், காசா பகுதியில் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உலகின் 44 நாடுகளில் !

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியிருந்தது. இந்த அளவுக்கு வைரஸ் வேகமாக பரவுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் தான் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான். கடந்த ஒக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவைத் தவிர்த்து இந்தியாவில் உள்ள பி.1.617 உருமாறிய வைரஸ் பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்று கூறியதுடன், அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது.

முள்ளிவாய்க்காலில் நடுகை செய்ய கொண்டுவரப்பட்ட நினைவுக்கல் – சுற்றிவளைத்த இராணுவத்தினர் !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றல் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக இன்று கொண்டு வரப்பட்ட நிலையில், அந்தப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் வந்தது நினைனவுநடுகல்! - www.pathivu.com

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்மை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் , முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது .

முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல, எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது. கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண்.

மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என்ற வாஞ்சை ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்றது. எமது வளங்களை ஒன்றிணைத்து , கடந்த கால பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்று கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அழைப்புவிடுக்கின்றது.

சிங்கள-பௌத்த அரசு முள்ளிவாய்க்கால், இனப்படுகொலையை நிராகரித்து, இறுதிப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரித்து வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி வந்துள்ளது.

இறுதிப் போரை சிங்கள பௌத்ததிற்கு கிடைத்த வெற்றியாக பிரதிபலித்து மகாவம்ச வரலாற்றியலில் சிங்கள வரலாற்றியலில், சிங்கள பௌத்த தேச அரச கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக முன்னெடுத்து வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் மையத்தை வலுப்படுத்துவதன் ஊடாக, அதிகாரப் பரவலாக்கத்தை நீர்த்துபோகச் செய்து தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து வருகின்றது. தமிழரகளின் தாயகமான வடக்கு கிழக்கை துண்டாடி, ஆட்புல கட்டுறுதியை உடைப்பதன்  வழியாக தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. இராணுவமயமாக்கலை வடக்கு கிழக்கில் செறிவாக்கி அரசிற்கெதிரான எதிர்ப்பை அடக்கிவருகின்றது.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் நினைவு கூரலை சிங்கள அரசு தொடர்ந்தும் ஈழத்தமிழர்களுக்கு மறுத்தே வந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டு தார்மீக உரிமையான நினைகூரல் பல ஆயிரம் ஆண்டுகளைக்கொண்ட பாரம்பரியம்.

இந்நினைவுகூரலுக்கு முஸ்லிம், பெரும்பான்மை முற்போக்கு அமைப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு தொடர்ந்து குரல் கொடுத்து நீதிப் பயணத்தில் இணைய அழைக்கப்படுகின்றார்கள். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 16 கோடியை தாண்டிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – இலங்கையில் 133,484 !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13.80 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33.30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1.79 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இலட்சத்து 06 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இலங்கையில் இதுவரையில் 133,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – பாலஸ்தீனியர் இடையே மோதல் – கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறை – அவசரநிலை பிரகடனம் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காசா டவர் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலின் லோட் நகரில் வன்முறை வெடித்துள்ளது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும், அரேபியர்களும் வசித்து வருகின்றனர்.

காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு வீடுகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் லோட் நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அறிவித்தார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவிகரமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு !

மன்னார் பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் உறுதியளித்துள்ளார்.

கோயில் மோட்டை பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பயிற்செய்கைக்கு ஏற்றவகையில் காணப்படும் 67 ஏக்கர் நிலப்பகுதியை மன்னார் மடு தேவாலயம் கடந்த பல வருடங்களுக்கு மேலாக உரிமை கொண்டாடி வரும் நிலையில் குறித்த காணிப்பகுதியானது அரசாங்கத்திற்கு சொந்தமானது என வடமாகாண ஆளுநரினால் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காணிகளை பயிற்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பில் மாவட்ட காணி ஆணையாளருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தருவதாக வடமாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? – தவிசாளர் விஜிந்தன் கேள்வி !

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விஜிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் நேற்று (11.05.2021) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக சுகாதார துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முற்றுமுழுதாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மரணசடங்குகள், திருமணநிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெசாக்தினதினத்தினை கூட இடைநிறுத்தியுள்ளார்கள் தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத சோக நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு காணப்படுகின்றது.

இன்னிலையில் இராணுவத்தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கு பற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது நல்லவிடையம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30க்கு மேற்பட்ட புத்த பிக்குகளும் இராணுவத்தளபதிகள் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? அரசாங்கத்தால் விடுக்கப்படுகின்ற அறிக்கை சட்ட திட்டங்களை பிரதேச சபையாகிய நாங்களும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய பாரியபொறுப்பு இருக்கின்றது இவ்வாறான நிலையில் கொவிட்19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு ஒருநீதியும், சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் இந்த மண்ணில் நடந்தேறுவது மனவருத்தமாக இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தடைசெய்கின்ற இந்த அரசாங்கம் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் எங்கள் பிரதேசத்திற்கு பல்வேறு பட்டஇடங்களில் இருந்து வருகை தந்து இந்த பிரித்ஓதும் நிழக்வில் பங்குபற்றியமையால் எங்கள் சமூகத்திற்கு கொவிட் 19 பரவக்கூடிய வாய்ப்பிருக்கின்றது.

இன்னிலையில் இராணுவத்தளபதி சரியாக இந்த விடையத்திற்கு பதில் சொல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு.,

பதிலளிக்கையில்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு உணர்வுரீதியான ஆத்மரீதியான நிகழ்வாக நாங்கள் ஒவ்வொரு தமிழர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதனை செய்யவேண்டும் என்ற மனத்துடிப்பும், உணர்வும் எல்லா மக்களுக்கும் இருக்கின்றது.
சுகாதார நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நல்லதொரு சூழல் வந்தால் நிகழ்வினை நினைவிற்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இதுகுறித்து சுகாதாரதுறையுடன் கலந்தாலோசித்து சுகாதார நடைமுறையுடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அகற்றப்பட்டு இராணுவபாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பம் !

தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ,பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர் மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியின் பயனாக முற்றுமுழுதாக இராணுவத்தின் பாதுகாப்புக்கு மத்தியில் குருந்தூர் மலையில் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் நேற்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

IMG 20210511 WA0026

கடந்த ஜனவதி மாதம் 18 ஆம் திகதி தொல்பொருள் திணைக்கள ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கிவைத்தார் இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க. அதனை தொடர்ந்து தமிழ் ஆராச்சியாளர்கள் எவரும் உள்வாங்கப்படாமல் ஆயுவுகள் மேற்கொள்ளப்பட்டு பௌத்த வழிபாட்டு எச்சங்களே அங்கு காணப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்திருந்தது குருந்தூர்மலையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த நிலையில் அவ் ஆலய சூலம் ஏற்கனவே அகற்றபட்டிருந்தது கடந்த நான்கு மாதங்களாக ஆய்வுகள் எனும் பேரில் தமிழ் பத்திரிகையாகர்களுக்கும் கிராம மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஆய்வுகள் இராணுவம் ,தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி அவசர அவசரமாக முற்றுமுழுதாக படையினரின் ஏற்பாட்டில் தமிழர்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான பிரித் ஓதல் வழிபாடுகள் இடம்பெற்று விகாரை பூசைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராச்சி தொடங்கிய காலத்தில் இருந்து குருந்தூர் மலை முற்றுமுழுதாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவரப்பட்டு அனுமதி இன்றி தமிழர்கள் எவரும் செல்லாதவாறு படையினர் தடைவித்துவந்துள்ள நிலையில்.(10.05.21 ) நேற்று இரவு நூற்றுக்கணக்கான படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் 30 பௌத்த துறவிகளின் பிரித் ஓதலுடன் பௌத்த சின்னம் நிறுவப்பட்டுள்ளதுடன் புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு குருந்தூர் மலை பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரின் அனுமதிகள் எவையும் இன்றி சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாது முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்டு இந்த பௌத்த விகாரை ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது. விகாரை வழிபாடுகள் இடம்பெற்ற சமயம் தண்ணிமுறிப்பிலிருந்து குமுளமுனை செல்லும் வீதிகள் தோறும் ஆயுதம் தாங்கிய படையினர் நிறுத்தப்பட்டு வீதியால் செல்லும் மக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

IMG 20210511 WA0025

குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் படையிரின் அடக்குமுறைக்குள் தமிழ்மக்கள் முடக்கப்பட்டு குறிப்பாக நாட்டில் கொவிட் 19 என அறிவித்த அரசாங்கம் தமிழ்மக்கள் ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பல்வேறு தடைகளை விதித்துவந்துள்ள நிலையில் பெரும் எடுப்பில் பல நூற்றுக்கணக்கான படையினர் சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் முகக்கவசம் கூட அணியாமல் பௌத்த வழிபாட்டு நிகழ்வினை நடத்தியுள்ளமை வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களை படையினரின் அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் அரசின் செயற்பாடு குருந்தூர் மலையில் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.