May

May

யாழில் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய திருவிழா – உபயக்காரர் தனிமைப்படுத்தலில் !

கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத்தில் திருவிழா நடத்திய உபயக்காரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய தினம் சப்பர திருவிழா நடைபெற்றது.

அதன் போது காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரின் அறிவுறுத்தல்களை மீறி ஆலயத்தில் பெருமளவானோர் சப்பர திருவிழாவில் கூடியிருந்தனர்.

சுகாதார விதிமுறைகள் , கட்டுப்பாடுகளை மீறி 50க்கும் மேற்பட்டோர் உரிய முறையில் முக கவசங்கள் இன்றியும் , சமூக இடைவெளிகளை பேணாதும் திருவிழாவில் கூடி இருந்துள்ளனர்.

அதனை அடுத்து, ஆலயத்திற்கு சென்றிருந்த சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டோர் ஆலய திருவிழாவினை நிறுத்தி, ஆலய குருக்கள் , உபாயக்காரர் , ஆலய நிர்வாகத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட 4 பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து இலங்கையை வந்தடைந்த ஸ்புட்னிக் தடுப்பூசிகள் !

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

இந்த தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் !

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 800 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவர்களுக்கு எதிரான வழக்குகள் இரண்டு விசேட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்படவுள்ளன எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட 800 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த நிலையிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் – 13 பேர் பலி !

இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றையதினம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

“கிழக்கு மாகாணசபை தேர்தலை இணைந்து எதிர்கொள்ளும் நோக்குடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்ததைகள் இடம்பெறுகின்றது.” – எம்.ஏ. சுமந்திரன்

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் பேசுகின்ற மக்களாக நாங்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாணமும் தமிழ் பேசுகின்ற மாகாணம் என்ற ரீதியில், அதன் அடையாளத்தை பேணும் வகையில், நாங்கள் ஆட்சியைக் கைப்பாற்றுவோம் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இது தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதனை தமது கட்சி பரிசீலிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் கைப்பற்ற வேண்டிய தேவை இருப்பதனால், தமிழ் முஸ்லிம் சக்திகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையே இடம்பெற்றதாகவும் அதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

“வட-கிழக்கு இணைந்ததாக மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்.” – இரா.சாணக்கியன்

“வட-கிழக்கு இணைந்ததாக மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் கடந்த புதன்கிழமை (28.04.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும்,முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசு பொருளாகவும்,மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

இந்தவிடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம்.  அம்பாறை மாவட்டத்திலுள்ள சில சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும்,சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது, கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது.அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக்கூடாது என்றும்,செய்யக்கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும்,கிழக்கிலே தமிழர்,முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும்,கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள், இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

மாகாண சபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. வட-கிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன்” என்றார்.

“கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதை தடுப்பதே அவசியமானது.” – வைத்திய நிபுணர் சங்கம் கோரிக்கை !

கொரோனா வைரஸ் நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதை விட நோய் பரவுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஏதேனும் ஒரு முறையில் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தத் தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் எனவும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகளால் சரியான தகவல்களை அரசியல்வாதிகளுக்கு அல்லது தீர்மானம் மேற்கொள்பவர்களுக்கு வழங்குவதன் மூலமே இந்தத் தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இலங்கைத்தமிழர் இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு ஸ்டாலினின் வலுவான குரல் ஒலிக்கும்.” – க.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை !

“இலங்கைத்தமிழர் இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு ஸ்டாலினின் வலுவான குரல் ஒலிக்கும்.” என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆறாவது முறையாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ள திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புக்கள் அனைவருக்குமே வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

கௌரவ ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் தமிழகம் பல்வேறு துறைகளில் மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்றும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன்.

2009ஆம் ஆண்டு தமிழ் ஈழப்பரப்பில் இடம்பெற்ற கொடூரமான இனவழிப்பின் தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர் பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக அது தொடருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் கௌரவ ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான குரல் ஒலிக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.

அதேபோல, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் மிகவும் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவதற்கும் கௌரவ ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழக அரசாங்கம் காத்திரமான பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் சகலதுறை வீரர் திசாரா பெரேரா!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும் , சகலதுறை வீரரருமான திசாரா பெரேரா (32 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரேரா உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338 ஓட்டங்களும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் 1204 ரன்களும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். ஆறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மியன்மாரில் தொடரும் இராணுவத்தின் சர்வாதிகாரம் – போராட்டத்தில் ஈடுபட்ட 07பேர் சுட்டுக்கொலை !

தென்கிழக்கு நாடான மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அந்நாட்டின் அரசு தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலையில் இறங்கி அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டக்காரர்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நேற்று பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தது.

யான்கூன், மண்டேலே உள்ளிட்ட நகரங்களில் தீவிரமாக போர் நடந்தது. இதில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

மியன்மாரில் இடம்பெற்றுவரும் இந்தக்கொடூர இராணுவ ஆட்சிக்கு எதிராக உலகின் பல நாட்டுத்தலைவர்களும் கண்டனங்களை வெளியிட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.